சென்னை,டிச.8- புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காக தமிழ்நாடு அரசின் சார்பில்,‘ மறுவாழ்வு மற்றும் தமிழ்நாட்டுக்கு வெளியில் வாழும் தமிழர் ஆணையரகம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நேற்று (7.12.2021) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் ஜன. 12ஆம் தேதி `புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக' கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, ஜன. 12, 13ஆம் தேதிகளில் புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள் விழா, `தமிழால் இணைவோம்' என்ற பெயரில் சென்னையில் கொண்டாடப்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விவரங்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த இணையதளம் மூலம் புலம் பெயர் தமிழர்களுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளலாம். வெளிநாடுகளில் வசிப்போர் தாங்கள் பிறந்த கிராமத்தின் மேம்பாட்டுக்காக ஏதேனும் செய்ய விரும்பினால், அவர்கள் பெயரிலேயே அந்த நலத்திட்டங்கள் செய்யப்படும். வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட பணிக்காக செல்வோர், அங்கு வேறு பணிகளில் அமர்த்தப்படும் நிலை உள்ளது. எனவே, அவர்கள் பணி தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாடு செல்ல விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்தியாவில் ஒமைக்ரானால் பிப்ரவரிக்குள் 3ஆவது அலை: அய்.அய்.டி. விஞ்ஞானி கணிப்பு
மும்பை, டிச.8 ஒமைக்ரானால் பிப்ரவரிக்குள் 3ஆவது அலை ஏற்படும் என்று அய்.அய்.டி. விஞ்ஞானி மனிந்திர அகர்வால் கணித்துள்ளார்.
கரோனா உருமாறிய தொற்று 3ஆவது அலையாக அக்டோபருக்குள் தாக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். அதன்படி 3ஆவது அலை தாக்கவில்லை. இந்தநிலையில் வருகிற பிப்ரவரிக்குள் ஒமைக்ரான் தொற்றுடன் 3ஆவது அலை உச்சத்தை எட்டும் என்று கரோனா கணிப்பு வியூக நிபுணரும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (அய்.அய்.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
இப்போதைய கணிப்பு படி தற்போதைய புதிய வைரசுடன் வருகிற (2022) பிப்ரவரிக்குள் 3ஆவது அலை உச்சத்தை எட்டும். அப்போது நாட்டில் தினமும் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம். ஆனால் இது 2ஆவது அலையை விட மிதமானதாகவே இருக்கும். தற்போதைய புதிய மாறுபாடு அதிக பரவும் தன்மையை கொண்டது போல் தெரிகிறது. ஆனால் அதன் தீவிரம் டெல்டா மாறுபாட்டில் காணப்படுவது போல் இல்லை.
இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போது வரை இந்த தொற்று தென் ஆப்பிரிக்காவில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவில்லை. ஆனால் அங்கு தொற்று பரவல் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை போன்ற தரவுகள் நமக்கு தெளிவான பிம்பத்தை தரும். இவ்வாறு அவர் கூறினார்.
காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறுவது போல் உணர்கிறேன் - மெகபூபா முப்தி
புதுடில்லி, டிச.8 காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறுவது போல் உணர்கிறேன் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தலைநகர் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மெகபூபா முப்தி பேசியதாவது, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் மக்கள் இந்திய அணிக்கும், இந்திய மக்கள் பாகிஸ்தான் அணிக்கும் ஆதரவாக முழக்கம் எழுப்பியது எனக்கு நினைவிருக்கிறது.
பாகிஸ்தான் மேனாள் அதிபர் பர்வேஷ் முஷரப் இந்திய அணியின் மேனாள் கேப்டன் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார். ஆனால், சில நாட்களுக்க்கு முன்னர் ஆக்ராவில் சில இளைஞர்கள் (காஷ்மீர் இளைஞர்கள்) இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.
இந்த வழக்கில் இளைஞர்களுக்கு ஆதரவாக வாதாட ஒரு வழக்குரைஞர் கூட வரவில்லை. ஆகையால், காந்தியின் இந்தியா, கோட்சேவின் இந்தியாவாக மாறுவது போல் நான் உணருகிறேன் என்றார்.