மத்திய கல்வி நிறுவனம் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் இடம் பெற்ற பாலினப் பாகுபாட்டை ஊக்குவிப்பது தொடர்பான கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்கவேண்டும். அப்படி இல்லாத காரணத்தால் இன்று பெரும் சிக்கலை சமூகம் சந்தித்துவருகிறது என்ற பார்வையில் எழுதப்பட்டதற்கு சி.பி.எஸ்.இ. நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையின் கேள்வி நேரத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வில் குடும்ப ஒழுக்கம் குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது. அந்த கேள்வித்தாளில் பிரிவு 'ஏ'வில் கீழ்க்கண்ட சிறுகுறிப்பை படித்துவிட்டு, அது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத வேண்டும் எனக் குறிப்போடு ஒரு பெரிய பத்தி கொடுக்கப் பட்டது, 21ஆம் நூற்றாண்டிலும் இத்தகு சீழ்பிடித்த சிந்தனையா என்ற வினாவை எழுப்புகிறது.
1) இல்வாழ்கையில் மனைவிமார்கள் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு வலுப்பெறுவதினால் பெற்றோர் என்ற கட்டமைப்பு வலுவிழந்து போகிறது.
2) முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில் தற்போது அவ்வாறு இல்லை. இதனால் அதை பார்க்கும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுகுறிப்பிற்கு ஒரு தலைப்பை இடுமாறும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
3) குழந்தைகளின் ஒழுங்கீனத்திற்கு யார் காரணம்?
4) வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம்?
5) வீட்டில் குழந்தைகள் பணியாளர்களுக்கான இடம்.
6) குழந்தைகள் உளவியல், எனக் கேள்விகள் இடம் பெற்றன. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு நாம் எதை சொல்லித் தருகிறோம் என கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசப் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "இதை நம்ப முடியவில்லை. இதைத்தான் நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோமா? இதன் மூலம் பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான கருத்துகளை பா.ஜ.க. அரசு ஆமோதிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
இதை ஏன் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் வைத்துள் ளார்கள்?" என கேள்வி எழுப்பியதுடன் அந்த வினாத்தாளை பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டருக்கும் டேக் செய்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர் பாளர் லட்சுமி ராமச்சந்திரன் கூறுகையில், "முட்டாள் தனமான ஒரு சிறுகுறிப்பை சி.பி.எஸ்.இ. தேர்வில் வைத்தது யார்?
'இதற்கு சி.பி.எஸ்.இ. வாரியம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஒட்டுமொத்த சிறு குறிப்புகளுமே முட்டாள் தனமாக உள்ளது. எந்த முட்டாள்கள் இது போன்ற கேள்வித்தாளை தயார் செய்தது? இது பாலின பாகுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. அது போல் குடும்பங்கள் மீதான பிற்போக்குத்தனமான கருத்தை ஆதரிப்பதாகவே உள்ளது" என்றார்.
அது போல் இந்த சம்பவம் குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் "பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான பொறுப்பற்ற வெறுப்பை உமிழும் இத்தகைய கேள்விகளை சி.பி.எஸ்.இ. வாரியம் திரும்ப பெற வேண்டும். இது பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பதோடு இந்திய அரசமைப்பு சட்டம் முன்னி றுத்திய பாலினக் கொள்கைக்கு எதிரானதாகும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பேசியுள்ளார். “மிகவும் பிற்போக்குத்தனமான இந்த கேள்விகளை தயாரித்து, அதை அனுமதித்து பிள்ளைகள் கைகளில் கொண்டு சேர்த்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நாட்டு மக்களி டையே மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
இன்றைக்கு அதிகாரப் பீடத்தில் அமர்ந்துள்ள பி.ஜே.பி.யின் கொள்கை என்பது இந்து மதக் கோட்பாட்டைக் கொண்ட மனுதர்ம ஆட்சி. இந்திய அரசமைப்புச் சட்டமாக மனுதர்மம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் 'ஞான கங்கையில்' (Bunch of Thoughts) கூறியுள்ளார். இவர்கள் கூறும் புதிய கல்வித் திட்டமும் பிற்போக்கானதே! இந்த அளவில் ஆட்சியின் பாதை அமைந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வாக்குச் சீட்டு ஆயுதத்தின் மூலம் பாடம் கற்பிக்க முன் வரட்டும்.
பிரச்சினை கடுமையான நிலையில், வினாத்தாளில் சம்பந்தப்பட்ட பகுதி நீக்கப்பட்டாலும் "குற்றம் குற்றமே!" என்பதில் அய்யமில்லை.