திங்கள், 6 ஜனவரி, 2025

சமூகநீதிக்கு எதிரான போக்கு நிலவுவதை விளக்கியும் சமூகநீதியை வலியுறுத்தியும், வரும் 9 ஆம் தேதி சென்னையிலும், மதுரையிலும் அறவழி ஆர்ப்பாட்டம்!


Published January 6, 2025
ஆசிரியர் அறிக்கை

* சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள்!
* மீண்டும் நான்கு பார்ப்பனர்களை நீதிபதிகளாக்க முயற்சிப்பதா?
தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கும், அடுத்தடுத்து காலியாகவிருக்கும் இடங்களுக்கும் நீதிபதிகளை நியமனம் செய்யும் போது, அதில் நான்கு பார்ப்பனர்களை நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்றக் கொலிஜியம் பரிந்துரைக்கவிருப்பதாக வந்திருக்கும் செய்தி நீதித் துறையில் சமூகநீதிக்கு எதிராக நிலவும் போக்கையே எடுத்துக்காட்டுவதால், அதை விளக்கியும், நீதித் துறை நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில், வரும் 9 ஆம் தேதி சென்னை யிலும் மதுரையிலும் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நமது ஆட்சி முறை இந்திய அரசமைப்புச் சட்டப்படி மூன்று முக்கிய ஆளுமைகளால்தான் வெகுவாக நடத்தப்படுகிறது.
பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டரி முறையாகிய கேபினட் சிஸ்டம் என்ற முறையைப் பின்பற்றினாலும்கூட, மூன்றில் ஒன்றான நீதித்துறை (Judiciary) மற்ற இரண்டு துறைகளான நிர்வாகத் துறை (Executive), சட்டமியற்றும் துறை (Legislative) என்பவற்றையும் அவற்றின் நடவடிக்கைகளையும் பற்றி நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறும் வகையிலான ஜனநாயக முறையையே இந்தியா கடைப்பிடித்து வரும் நிலையில், அரசமைப்புச் சட்டம் அதன் பீடிகையில் உறுதியளிக்கும் சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகியவை சரியாக வழங்கப்படுகின்றனவா, சட்டங்கள் அரசமைப்புச் சட்டப்படி உள்ளனவா, முரண்படுகின்றனவா என்று வழக்குகளில் தீர்ப்புக் கூறும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கே உள்ளது.

நீதிமன்றங்களுக்குள்ள சட்ட வலிமை
அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரப்படி, உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் அளிக்கப்படும் தீர்ப்புகளுக்குச் சட்ட வலிமை தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜாதி அடுக்குமுறை அசமத்துவம் (Graded Inequality) நீண்ட நெடிய காலமாக உள்ள நாட்டில், ஜாதி பேதமும், ஜாதிய உணர்வும் மாறாமல் உள்ள சமூகத்தில், அவற்றினால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டோருக்குச் சம வாய்ப்பும், சம உரிமையும் கிடைப்பது எளிதல்ல என்பதால்தான், சமூகநீதியை உறுதி செய்ய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் முறை சட்டத்தின்மூலம் செய லாக்கப்பட்டு வருகிறது!
நீதிபதி நியமனங்களில் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டியது மிக முக்கியம்!
மக்களால் தேர்வு செய்யப்படும் நமது ஜனநாயகக் குடியரசு ஆட்சியில் சமூகஅநீதியைக் கண்டித்து நியாயம் கூறும் கடமையும், பொறுப்பும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திற்கான உரிமைகளாக அரசமைப்புச் சட்ட கர்த்தாக்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே, மற்ற இரு துறைகளைவிட, சமூகநீதியையும், சமூகநீதியை உள்ளடக்கிய பாலியல் நீதியையும், மிக முக்கியத் துறையான நீதித் துறை நியமனங்களில், கடைப்பிடிப்பது மிகமிக முக்கியம்.
இதற்கு முன்பும் (இன்றும்கூட) அது சரிவர நடத்தப்படாமல், உயர்ஜாதியினரின் ஏகபோகமாகவே நீதித்துறை தனது விரிந்த கரங்களோடு செயல்பட்டு வந்தது, வருகிறது!
உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்றால், அதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மை (மைனாரிட்டி) நீதிபதிகள் எண்ணிக்கை சரி சமமாகவா இருக்கிறது?

உயர் ஜாதியினரால் நிரப்பப்பட்டதாக உச்ச, உயர்நீதிமன்றங்கள் அமையக்கூடாது!
உயர்ஜாதியினரால் நிரப்பப்பட்டதாக நீதித்துறை காட்சி அளிக்க, உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் அய்வர் அடங்கிய கொலிஜியம் (Collegium) என்ற நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக் குழுவே – ஓய்வு பெற்று காலியாகி, நிரப்பப்பட வேண்டிய இடங்களுக்கு நீதிபதிகளைப் பரிந்துரைத்து அனுப்பி, அதனை குடியரசுத் தலைவர் – அதாவது உள்துறை, சட்டத்துறை முதலியவை ஏற்கவோ, நிராகரிக்கவோ உரிமை பெற்றுள்ளதாகவே தற்போதைய நடைமுறை இருக்கிறது.
அதனால்தான் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் சமூகநீதி தேவை என்று பல ஆண்டுகளாக நாமும், நம்மைப் போல பல சமூகநீதிப் போராளிகளும் இடையறாமல் வலியுறுத்தி வருகின்றோம்!
நாடாளுமன்றத்திலும், தமிழ்நாடு மற்றும் பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து சென்றுள்ள மக்கள் பிரதிநிதிகளும் நீதித்துறையில் நியாயமான, போதுமான இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென வற்புறுத்தி வருகின்றனர். அண்மையிலதான், அதனைக் கொள்கை அளவில் ‘கொலிஜியம்’ ஏற்றுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை விவரம்!
ஏராளமான உயர்நீதிமன்ற நீதிபதிகள், பதவிகள் நிரப்பப்படுகின்றபோது, மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக இருந்தாலும், பல ஆண்டு களாக நீதித்துறையை தங்களது ஏகபோகமாக்கி அனுபவித்து வரும் உயர்ஜாதியினர்கள் (குறிப்பாக பார்ப்பனர்களும், முன்னேறிய வகுப்பாரும்) தங்களது எண்ணிக்கை விகிதாச்சாரத்தைவிட பல மடங்கு அதிகமாகவே நியமனம் பெற்று வரும் நிலை, அரசமைப்புச் சட்டம் வழங்கும் சமூகநீதி உத்தரவாதத்திற்கு முற்றிலும் முரணான நடைமுறையாகும்.
இதற்குத் தக்க முறையில் பரிகாரம், நீதி, நியாயம் கிடைக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75.
இதில் தற்போதுள்ள நீதிபதிகள் (இருபாலரும் ) எண்ணிக்கை 66.
(மற்றவை நிரப்பப்படவேண்டியவை).
ஓர் உயர்ஜாதி நீதிபதி நாளை மறுநாள் (8.1.2025) ஓய்வு பெறவிருக்கிறார்.
இந்நிலையில், புதிய நியமனப் பரிந்துரைகள் உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கு அனுப்பப்படவிருக்கும் நிலையில், இங்கு மூத்த நீதிபதிகள் மூவர் அடங்கிய கொலிஜியத்தில், மூவரில் இருவர் தலைமை நீதிபதி உள்பட உயர்ஜாதி பார்ப்பனர்கள் – மற்ற ஒருவர் பார்ப்பனரல்லாத நீதிபதி.

தற்போதுள்ள நீதிபதிகளில் (சென்னை, மதுரை உயர்நீதிமன்றப் பிரிவுகள்) உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் (இருபாலரும்) 12 பேர் உள்ளனர். மக்கள் தொகையில் அவர்கள் விகிதாச்சாரம் 3 அல்லது 4 சதவிகிதமாக உள்ளது. ஆனால்,உயர்நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் 18% உள்ளது.

90 விழுக்காடுள்ளவர்களுக்கு நீதிபதி நியமனங்களில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை!
மற்றுமுள்ள 90 சதவிகித மக்களான எஸ்.சி.,
எஸ்.டி., எம்.பி.சி., ஓ.பி.சி., மைனாரிட்டி சமூகங்களைச் சார்ந்த வழக்குரைஞர்களில் திறமையும், அனுபவமும் உள்ளோர் பலர் இருந்தும், அவர்களுக்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது!
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புதிய நியமனப் பரிந்துரைகளில் மேலும் நான்கு பார்ப்பனர்களையே நீதிபதிகளாக்கப் பரிந்துரைக்கப்பட உள்ளது என்பன போன்ற செய்திகள் நீதித்துறை வட்டாரங்களிலிருந்து வந்துகொண்டுள்ளன.
ஏற்கெனவே அதிகமான எண்ணிக்கை உள்ள பார்ப்பன சமூகத்திலிருந்து (12 பேர்), மேலும் 4 நீதிபதிகள்!? அதில் கூட ஒரு புதிய தந்திர முறையாக ஒரே பட்டியலாக அனைவர் பெயரையும் அனுப்பாமல், முதலில் இரண்டு, அடுத்த பட்டியலில் இரண்டு என்று இரண்டாகப் பிரித்து அனுப்பவும் ஏற்பாடு நடைபெறுகிறது என்றும் பேசப்படுகிறது!
இது நியாயம்தானா?

மற்றொரு தந்திரம், உயர்நீதிமன்ற கொலிஜி யத்தில் சில வாரங்களுக்கு முன் பரிந்துரை செய்யப்பட்டிருந்தால், கொலிஜியத்தின் தலைமை ஒரு பிற்படுத்தப்பட்டவருக்குக் கிடைத்திருக்கும். அவர் பரிந்துரை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான், அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுச் சென்றாரோ என்று கூட அய்யப்பட வேண்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்பற்றி முன்பே பல வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, சமூகநீதி பாதுகாக்கப்படவேண்டும் என்று தீர்ப்பும் உள்ளது.

சமூகநீதியைக் கடைப்பிடிப்பதுபற்றி
உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
R.G. High Court of Madras Vs R.Gandhi and Others (5, மார்ச் 2014) வழக்கில், மூன்று நீதிபதிகள் கொண்ட தீர்ப்பு வந்துள்ளது என்பது ஒருபுறம்.
அண்மைக் காலத்தில், உச்சநீதிமன்ற நியமனப் பரிந்துரைகளில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூகநீதி பின்பற்றப்படவேண்டும் என்பதை உச்சநீதிமன்றக் கொலிஜியமே நியமனப் பரிந்துரைகளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதால், அதற்கேற்ப உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை அமைய வேண்டாமா?
‘புளியேப்பக்காரர்களுக்கே விருந்து, பசியேப்பக்கா ரர்களுக்குப் பட்டை நாமம்’ என்பதுபோல பரிந்துரை களோ, நியமனங்களோ அமையக்கூடாது.
ஜனநாயகக் குடியரசில் நீதித் துறையின் பங்களிப்பு மிகமிக முக்கியம். நாம் அதனை வலியுறுத்தி, இதுவரை போதிய வாய்ப்பு (Adequate Representation) வழங்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டாமா?
ஏற்கெனவே மிக அதிகமான உயர்ஜாதிப் பிரதி நிதிகள் – ஆதிக்கம் செலுத்தும் நிலையில், புதிய நிய மனங்களும் அப்படி அமைவது நியாயமல்ல.

வரும் 9 ஆம் தேதி சென்னையிலும்– மதுரையிலும் அறவழி ஆர்ப்பாட்டம்!
‘‘உயர்நீதிமன்றங்கள் – ‘உயர்ஜாதி நீதிமன்றங்களா’?’’ என்று மக்களும் சமூகநீதி ஆர்வலர்களும் கேட்கும் நிலையைத் தவிர்க்கவேண்டும் என்பதை விளக்க வும், உயர்நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவும் ஒரு சமூகநீதி ஆர்ப்பாட்டத்தை, வருகின்ற 9.1.2025 சென்னையிலும், மதுரையிலும் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து அறவழியில் கவன ஈர்ப்பாக நடத்தவிருக்கிறோம்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல இந்தப் போராட்டம்!
உரிய சமூகநீதி கிடைக்கவே கோரிக்கைப் போராட்டமாக இந்த சட்ட உரிமைப் போராட்டம் நடைபெறும்.
அனைத்து சமூகநீதி ஆர்வலர்களும், விழைவோரும் திரளவேண்டும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
6.1.2025 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக