
யாழ்ப்பாணம், ஆக.24 இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று (24.08.2024) நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவர் அப்பாப் பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக, நேற்று (23.08.2024) யாழ்ப்பாணம் சென்றடைந்த திராவி டர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், இலங்கையின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் தலைமையில் முக்கியப் பொறுப்பாளர்கள் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றனர்.
தமிழர் தலைவர் அவர்களுக்கு மாவை சேனாதி ராஜா அவர்கள் மாலையும், சால்வையும் அணிவித்து வரவேற்றதுடன், தங்களின் அழைப்பை ஏற்று 45 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இலங்கை வருகை தந்தமைக்குத் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.
தமிழர் தலைவருடன் தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்களுக்கு, அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை அறங்காவலரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரு மான நவாலியூர் க.கவுரிகாந்தன் அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாருக்கு, மறைந்த தலைவர் அமிர்தலிங்கத்தின் தனிச் செயலாளர் ஆர்.பேரின்பநாயகம் அவர்களும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். உடன் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் தங்க.முகுந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதி இளைஞரணி தலைவரும், மாவை சேனாதிராஜா அவர்களின் மைந்தருமான கலை அமுதன் ஆகியோரும் வந்து வரவேற்றனர்.
நேற்று (23.8.2024) மாலை இலங்கையிலும் மேற்குலக நாடுகளிலும் ஒளிபரப்பாகும் ‘டேன் டிவி’ ஸ்பாட்டிலைட் நிகழ்ச்சிக்காக தமிழர் தலைவர் அவர்களின் நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. அதன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் புலேந்திரன் சுலக்சன் மற்றும் ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரியர் தேவராஜ் ஆகியோர் தமிழர் தலைவரை நேர்காணல் செய்தனர். நாளை (25.08.2024) இரவு 7 மணிக்கு இந்த நேர்காணல் ‘டேன் டிவி’யில் ஒளிபரப்பாகவுள்ளது.
இன்று (24.8.2024) மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள ரிம்மர் மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் தென்னிந்திய திருச்சபை ஆயர் அதிவண கலாநிதி வி.பத்மதயாளன் அவர்கள் சிறப்புரையாற்ற, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுப் பேருரை ஆற்றவிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக