
கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
‘இந்து அறநிலையத் துறை என்பது கோவில் நிர்வாகப் பணிகளைக் கண்காணிப்பது, நிதிநிலை வரவு – செலவுகளைக் கண்காணிப்பதுதானே தவிர, பக்தியைப் பரப்புவதற்கான துறை அல்ல’ என்று சட்ட ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் நின்று கருத்துகளைப் பதிவிட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கையை நாலாப் பக்கங்களிலிருந்தும் பாராட்டியும், வரவேற்றும் கருத்துகள் மிகப்பெரிய அளவில் வந்து கொண்டுள்ளன.
‘திராவிட மாடல்’ அரசான தி.மு.க. ஆட்சியைக் கட்டிக் காப்பதில் திராவிடர் கழகத்தைவிட அக்கறையும், கவலையும் கொண்டவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
அதேநேரத்தில், தாய்க் கழகமான திராவிடர் கழகம் சுட்டிக்காட்டி வழிகாட்டவேண்டிய பொறுப்பும் திராவிடர் கழகத்திற்கு உண்டு என்ற முறையில் தலைவர் ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட அறிக்கைதான் நேற்று (27.8.2024) ‘விடுதலை‘யில் வந்த அறிக்கையின் சாரம்.‘‘நேற்றும், இன்றும், நாளையும் சரி எங்களை வழிநடத்து வது பெரியார் திடல்தான்’’ என்று சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பட்டாங்கமாய் கூறியதுண்டு.
வேண்டாம், சிண்டு முடியும் வேலை!
உண்மை நிலை இவ்வாறு இருக்க, திராவிடர் கழகத்திற்கும், தி.மு.க.விற்கும் இடையில் நுழைந்து சிண்டு முடியும் ஒரு வேலையில் பி.ஜே.பி.யின் மாநிலத் துணைத் தலைவர் என்று கூறப்படும் திரு.திருப்பதி நாராயணன் என்பவர் ஈடுபட்டுள்ளார்.
அதைப் படித்துப் பார்த்தால் ‘‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’’ என்பதுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
‘‘இந்து அறநிலையத் துறை என்பது கோவில் பாதுகாப்பு, நிதி வரவு – செலவுகளைப் பார்ப்பது மான துறையே தவிர, பக்தியைப் பரப்புவதற்கான ஒன்றல்ல.’’ –கி.வீரமணி
‘‘அட இதைத்தான் நாங்கள் 50 வருடங்களாகச் சொல்லி வருகிறோம்’’ என்று தமிழ்நாடு
பி.ஜே.பி. துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் கூறிவிட்டார்.
ஆக, திராவிடர் கழகத் தலைவரின் கருத்தை பி.ஜே.பி. துணைத் தலைவர் ஒப்புக்கொண்டு விட்டார். இதனைத் தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.
‘‘ஹிந்து அறநிலையத் துறை மதச் சார்பு பிரச்சாரத்திற்கானதல்ல; அதாவது அன்றாட பூஜைகளில், வழிபாடுகளில், ஆகம விதிகளில் ஹிந்து அறநிலையத் துறை தலையிடக்கூடாது. வீரமணி சொல்வதுபோல், இதுநாள் வரை ஹிந்து அறநிலையத் துறைதான் கோவில்களை கட்டுப்படுத்தியது என்றால், கருவறையில் சமத்துவம் இல்லாது போனதற்குக் காரணம் ஹிந்து அறநிலையத் துறைதானே? தமிழக அரசு தானே?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார் திருவாளர் நாராயணன்.
இதன்மூலம் கோவில் கருவறையில் சமத்துவம் இல்லை என்பதைத் திருப்பதி நாராயணன் ஒப்புக்கொண்டுள்ளார்.
அப்படி என்றால், கோவில் கருவறையில் சமத்துவும் நிலவுவதற்காக, பயிற்சி அளிக்கப்பட்ட அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகராக உரிமை உண்டு என்று முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் சட்டம் கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து 13 பார்ப்பனர்கள் நேரடியாகவே உச்சநீதிமன்றம் சென்றபோது, திருப்பதி நாராயணன் போன்றவர்களோ, அவர் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அந்த வழக்கை எதிர்த்து மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
நடவடிக்கைகூட வேண்டாம்; எதிர்த்து ஒரே ஒரு வார்த்தையாவது ‘திருவாய்’ மலர்ந்ததுண்டா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டத்தை ஆதரித்தார்களா?
காஞ்சி சங்கராச்சாரியாரின் சிபாரிசோடு பிரபல வழக்கு ரைஞர் பல்கிவாலா ஒரு பைசா பெற்றுக்கொள்ளாமல், முத்தமி ழறிஞர் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து வழக்காடியபோது இவர்கள் எல்லாம் எங்கு போனார்களாம்?
‘‘கோவில் சொத்து விவகாரங்களில் தலை யிடுவதோ, ஆறு மரக்கால் அரிசியை எப்படிப் போடுவது என்று முடிவு செய்வதோ ஹிந்து அறநிலையத் துறையின் பணி அல்ல; அப்பணி கோவில் நிர்வாகத்தினுடையது. அதை விடுத்து, கும்பாபிஷேகம் செய்கிறேன், குடமுழுக்கு நடத்துகிறேன் என்பது ஆகம விதிகளை மாற்றுகி றேன் என்பதெல்லாம் அறநிலையத் துறையின், அமைச்சரின் பணியல்ல என்று வீரமணி சொல்வது சரிதான்’’ என்கிறார் திருப்பதி நாராயணன்.
கோவில் சொத்து விவகாரங்களில் தலையிடு வது அறநிலையத் துறையின் பணியல்ல என்று ஆசிரியர் வீரமணி எங்கே சொல்லியிருக்கிறார்? கோவில் சொத்துகளை பார்ப்பனக் கும்பல் கொள்ளையடிப்பதைத் தடுப்பதற்குக் கொண்டு வரப்பட்டதுதானே இந்து அறநிலையத் துறை. கோவில் சொத்து விவகாரங்களில் அரசின் இந்து சமய அறநிலையத் துறை தலையிடுவதில், கொள்ளையர்களுக்குப் பிரச்சினை இருக்கலாம். திருப்பதி நாராயணனுக்கு என்ன பிரச்சினை?
‘‘ஆறு மரக்கால் அரிசியை அளவுப்படி போடுவது ஹிந்து அறநிலையத் துறையின் வேலை’’ என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னதற்கு நேர் எதிராக, ‘‘அது ஹிந்து அறநிலையத் துறையின் வேலையல்ல’’ என்று ஆசிரியர் அவர்கள் சொன்னதாகத் திரித்துக் கூறுவது திருப்பதி நாராயணன் கூட்டத்தின் அறிவு நாணயக் கேட்டிற்கு நூறு விழுக்காடு எடுத்துக்காட்டாகும்.
‘‘கும்பாபிசேகம் செய்கிறேன், குடமுழுக்கு நடத்துகிறேன் என்பது, ஆகம விதிகளை மாற்றுகிறேன் என்பதெல்லாம் அறநிலையத் துறையின், அமைச்சரின் பணியல்ல என்று வீரமணி சொல்வது சரிதான்’’ என்கிறார் திருப்பதி நாராயணன்.
ஆசிரியரின் நேற்றைய (27.8.2024) அறிக்கையில் எந்த இடத்தில் இப்படி ஒரு வாசகம் உள்ளது? கோவில் நிர்வாகத்தில் அந்தந்த காலகட்டங்களில் நடக்க வேண்டியவை சரியாக நடக்கிறதா? என்று பார்க்கவேண்டியதுதான் அறநிலையத் துறையின் வேலை என்பதுதானே நமது கருத்து. ஆனால், ஆசிரியர் சொல்லாததை, அவர் சொன்னதாகச் சொல்வது, இவர்கள் எத்தகைய பொய்யர்கள் என்பதற்கும், எதையும் திரிப்பதற்குத் தயங்காதவர்கள் என்பதற்கும் சான்று அல்லவா! ஆகமங்களை மாற்றக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் எங்கே சொல்லியிருக்கிறார்?
ஆகம விதிகள் மாற்றப்படவே இல்லையா?
தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவரும் கோவிலில் நுழையலாம் என்ற நடைமுறை ஆகம விதிகளுக்கு எதிரானதுதானே! ஹிந்து அறநிலையத் துறையின் தலையீடு இல்லாமல், அரசின் தலையீடு இல்லாமல் கோவில் நுழைவு உரிமை ஆகாயத்திலிருந்து குதித்ததா?
கோவில் உள்விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்கிறாரோ திருப்பதி நாராயணன்.
பழனி முருகன் கோவிலில்
அரசு தலையீடு இல்லையா?
பழனி முருகன் கோவிலில் வாழையடி வாழையாக போகர் என்ற சித்தர் வழிவந்த பண்டாரத்தார் பூஜை செய்து வந்த நிலையில், அவர்களை வெளியேற்றி, பார்ப்பனர்களை அர்ச்சகர்களாக்கியது திருமலை நாயக்கர் ஆட்சியில், சேனாதிபதியாக இருந்த ராமப்பையன் தலையிட்டது ஆட்சி அடிப்படையில்தானே!
தங்களுக்கு வசதியாக இருந்தால், எதிலும் அரசு தலையிடலாம்; தங்கள் ஆதிக்கத்திற்குத் தடையாக இருந்தால், முட்டிப் போட்டுத் தடம் மாறிப் பேசுவதுதான் பார்ப்பனர்களின் நிலைப்பாடு.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வழிபடச் சென்ற அன்றைய ஒன்றிய அமைச்சர் எஸ்.வி.இராமசாமி (காங்கிரஸ்)யிடம் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர் எப்படி நடந்துகொண்டார்? விபூதியைத் தூக்கி எறியவில்லையா? இது எல்லாம் எந்த ஆகமத்தின்கீழ் வருகிறது? இது பார்ப்ப னர்களின் ஆதிக்க ஆணவத் திமிரைக் காட்டவில்லையா?
அமைச்சருக்குத் திருச்செந்தூர் கோவிலில் நடந்த அவமானம் குறித்து தந்தை பெரியார் அவர்கள், ‘விடுதலை‘யில் (27.3.1967) கண்டித்து எழுதியதுண்டே!
காஞ்சிபுரம் மச்சேந்திரநாதர் கோவில் கருவறையில் அர்ச்சகப் பார்ப்பனர் தேவநாதனும், சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறையில் பத்ரிநாத் என்ற அர்ச்சகப் பார்ப்பனரும் செய்த லீலைகள் தொடர்பாக அரசு தலை யிடக்கூடாது என்று கூட சொல்லுவார்களோ!
காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலில், பட்டப் பகலில் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டதும், அதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சம்பந்தப்பட்டதாக வந்ததெல்லாம் ஆகம நெறிக்குள் வருமா?
கோவில் அர்ச்சகர்களுக்கு மாதச் சம்பளம் கொடுப்பது அரசுதானே! அப்படியானால், கோவில் விஷயங்களில் தலையிடும் அதிகாரம் அந்தத் தருணத்திலேயே ஏற்பட்டு விடவில்லையா?
இன்றைக்கு ஏடுகளில் வந்துள்ள ஒரு செய்தி, திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.530 கோடி என்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
தி.மு.க. – அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபுவுக்கும் – திராவிடர் கழகத்துக்கும் இடையே மூக்கை நுழைத்தால், கத்திரிக்கோலுக்கிடையே மாட்டிய நிலைதான் ஏற்படும் – நினைவிருக்கட்டும்!
தான் விரித்த வலையில் தானே சிக்கிக் கொண்ட நாராயணன்களின்
பரிதாப நிலையை என்ன சொல்ல!