வெள்ளி, 8 மார்ச், 2024

உலக மகளிர் நாள் சிந்தனை! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி


விடுதலை நாளேடு

 ♦ ஹிந்து தர்மப்படி பிறப்புமுதல் கல்லறைவரை பெண்ணானவள் அடிமைதானே!

♦ மகளிர் உரிமைக்கான சிந்தனை – அதுகுறித்த சட்டங்கள் உருவானதற்கு தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் – அண்ணா – கலைஞர் இவர்களின் பங்களிப்புதானே காரணம்!
♦ பெண்களுக்குக் கல்வி, தொழில் மற்றும் உரிமைத் தொகை வழங்கும் ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!
‘திராவிட மாடல்’ஆட்சி பரவி ‘திராவிட இந்தியா’வாகி
2024 மே மாதத்திற்குப் பிறகு மகளிர் உரிமை திருப்பம் ஏற்படட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

பெண்கள் என்றால் வெறும் அலங்காரப் பொம்மை களாகவும், பிறப்பு முதல் கல்லறை வரை அடிமைப் பூச்சியாகவும் இருக்கும் இழிநிலை மாறி, தமிழ் நாட்டில் உருவான மகளிர் உரிமைக் கொடி, இந்தியா முழுவதும் பறக்கும் நிலையை 2024 மே மாதத்திற்குப் பிறகு உருவாக்குவோம் என்று மகளிர் உரிமை நாள் சிந்தனைக்குரிய அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

இன்று (8-3-2024) உலக மகளிர் நாள்!

ஒவ்வொரு ஆண்டும் வெறும் வாழ்த்துக் கூறிய தோடு இது முடிந்துவிடக் கூடாது!
பெண்ணடிமைக்கான கிருமி கண்டறியப்படவேண்டும்!
பெண்ணினம் அடைந்த இன்னல்கள், தொல்லைகள், உரிமைப் பறிப்புகள்தாண்டி – மீட்கப்பட்டவை எத்தனை விழுக்காடு; இன்னும் செல்லவேண்டிய பயணங்கள் எவ்வளவு தூரம்? பெண்ணடிமை என்ற கொடும் சமூக பக்கவாத நோயிலிருந்து அவர்களைக் காப்பாற்றிட உதவிய சமூக மருத்துவர்கள் யார், யார்? எந்தெந்த சமூகக் கிருமிகள் அவர்களுக்கு அந்த மனிதகுல பக்கவாத கொடும்நோய் வருவதற்குக் காரணம் என்பன வற்றின் உண்மைத்தன்மையறிந்து ‘‘நோய்நாடி, நோய் முதல் நாடவேண்டும்.”

பிறப்பு முதல் கல்லறை வரை- வேதம் முதல் கீதை வரை பெண்ணடிமையே!

மற்ற நாடுகளிலிருக்கும் பெண்ணிய பேதத்தைவிட, நம் ‘பாரத நாட்டில்’ பெண்ணை பிறக்கவே கருவிலிருந்து காப்பாற்றி, அவர் கல்லறை செல்லும் மட்டும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் சந்திக்கும் அன்றாட அவலங்களும், அநீதிகளும் எண்ணற்றவை! வெளிப்படை வெளிச்சத் திற்கு வராமல் புதைக்கப்படுபவையும் ஏராளம், ஏராளம்!
‘‘புனிதம்” – ‘‘பக்தி போர்வை” – ‘‘கடவுள் கூறியது” என்ற மயக்கம் ஏற்றப்பட்ட பெரும்பான்மை பேசும் மதத்தவரின்,

1. வேதங்களைப் பெண்கள் படிக்க உரிமை உண்டா?
2. ‘‘கீழ்ஜாதிக்காரர்கள்” படிக்க உருவாக்கிய புராண இதிகாசங்கள் என கூறப்பட்ட இராமாயணங்களும், பாரதமும், பகவத் கீதைகளும்கூட பெண்களை ‘‘மனிதர்களாகக்” கருதி, நடத்தியதாக அக்கதைகளில் காட்டப்படுகிறதா? இல்லையே!
3. மனுதர்மத்தின்படி, பெண் என்பவர், எந்தக் காலத்திலும் சுதந்திரமாக வாழ்வில் செயல்படத் தகு தியோ, உரிமையோ உடையவர் அல்ல என்பதுதானே!
4. மகாபாரதத்திலோ, பெண்ணை சூதாட்டப் பந்தயப் பொருளாக வைத்து, பகடைக்காயாக வைத்தது பெண் மனிதரல்ல – ஒரு பந்தயப் பொருளாக நினைத்ததுதானே!
5. இராமாயணத்தில், கணவன் சந்தேகப்பட்டால் நெருப்பில் இறங்கி தீக்குளித்து தனது ‘கற்பை” நிரூ பித்ததாகவும், கர்ப்பிணியானாலும், காட்டுக்கனுப்பவும் ‘கடவுள் அவதாரத்தாலும்’ ஆணையிடப்பட்ட ‘‘புருஷ உத்தம” இராமன்களை பதிவிரத தர்மத்துடன் பார்த்தாக வேண்டியரே பெண்!
6. பகவத் கீதையிலோ, ‘‘பெண் பாவயோனியிலிருந்து சூத்திரர்களோடு பிறந்தவள்” என்ற வர்ணனையில் சிக்கிக் கொண்டவர்!
7. கல்யாணங்களிலோ, தானமாக வழங்கிடும் பொருள் (Chattel) தான் பெண். அதனால்தான், ‘‘கன்னிகா தானம்” என்ற முத்திரை!
– இவற்றிலிருந்து சரி பகுதியாக உள்ள மகளிரையும், மனிதர்களாகப் பார்த்து, அவர்களது சம உரிமைகளுக்காக வாதாடி, எழுதி, பேசி, களமாடி, வாய்ப்புக் கிட்டிய அதி கார சட்டங்களை நிறைவேற்றும்படிச் செய்த வரலாற்றுக் குரிய அமைதிப் புரட்சியாளர்கள் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அண்ணா, கலைஞர், திராவிடர் நூற்றாண்டுகால ஆட்சிகள் இவை அல்லவா?

பெண் வெறும் அலங்காரப் பொம்மையா?

சரி பகுதி மனித வளம், மகளிர் மேன்மைதான் என்ற நிலையில், அவர்கள் அடிமைகளாக இருப்பதும், அவர்களை வெறும் அலங்கார பொம்மைகளாகவும், சமையல் அறைக் கருவிகளாகவும், பிள்ளை பெறும் இயந்திரங்களாகவும் ஆக்கி, இந்த வட்டத்திலிருந்து வெளியே வர உரிமையில்லை என்றாக்கப்பட்ட நிலை யில் – பூட்டிய விலங்கினை உடைத்து நொறுக்கி, விடு தலையும், சமத்துவமும், சம உரிமையும் இன்று சமூக அங்கீகாரத்துடன், சட்டப் பாதுகாப்புடன் கூடிய ஒரு திருப்பம் ஏற்பட்டது, இங்கே மட்டுமே!

திராவிட ஆட்சியின் சாதனைகள்!

இந்தியா முழுவதிலும் உள்ள பெண்கள் படிப்புரிமை, சொத்துரிமை, வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய வாழ்வுரிமைகளை நோக்கி, பல சாதனைகளைச் செய்து, சரித்திரம் படைக்க வழிகாட்டும் தந்தை பெரியார் அவர் களும், அவர் வழி நின்று வென்று, ஆட்சி செய்த அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர் களின் ‘திராவிட மாடல்’ ஆட்சியும்தானே முதற்காரணம்!
குடும்பத் தலைவியான பெண்களுக்கு மாதந்தோறும் அளிக்கும் 1000 ரூபாயைக்கூட, ‘‘மகளிர் உரிமைத் தொகை” என்று அவர்களது சுயமரியாதையைக் காப் பாற்றிய ஆட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத் தான ஆட்சியல்லவா!
இந்தியா- ‘திராவிட இந்தியா’ ஆகவேண்டும்!
எனவே, மகளிர் உரிமைப் பாதுகாப்பு அரணான இந்த ஆட்சி பரவி, ‘‘திராவிட இந்தியா” 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு மகளிர் விடுதலையில் மகத்தான திருப்பம் ஏற்படும் என்பதை உணர்ந்து செயல்பட உறுதி ஏற்பீர்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
8-3-2024 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக