புதன், 13 மார்ச், 2024

தேர்தல் பத்திரப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வலி தாங்க முடியாமல் திசை திருப்புவதா?

 

விடுதலை நாளேடு
2019 இல் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை 5 ஆண்டுகளுக்குப் பின் 
இப்பொழுது அவசர அவசரமாகக் கொண்டு வருவது ஏன்?
பாசிச பா.ஜ.க.வைத் துடைத்தெறிவது குடிமக்களின் கடமையாகும்!
தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
தேர்தல் பங்கு பத்திரப் பிரச்சினையில் ஒன்றிய பி.ஜே.பி. அரசின்மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வலி தாங்க முடியாமல், திசை திருப்பும் நோக்கோடு, 5 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்த ஒன்றிய பி.ஜே.பி. அரசு  அவசரம் காட்டுகிறது; பொதுமக்கள் வரும் தேர்தலில் பி.ஜே.பி. அரசுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பலையை ஏற் படுத்தி, தொடர் போராட்டங்கள் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA2019) நடைமுறைக்கு வருவதாக நேற்று (11-3-2024) மாலை இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அறி வித்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகளை வெளி யிட்டு, நடைமுறைக்கு வருவதற்கான அறிவிப்பையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பேச்சு 
வந்த முதலே நாட்டில் கடும் எதிர்ப்பு!
2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலிருந்தே கடும் கண்டனங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் சந்தித்து வரும் இந்தச் சட்டத்தைத் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் இந்த நேரத்தில் திடீ ரென அமலுக்குக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன என்பதை அனைவரும் அறிவார்கள்.
அறிவார்ந்த விவாதத்திற்கும், மக்களின் கருத்தறியும் ஜனநாயகத்திற்கும் கிஞ்சிற்றும் இடமில்லை என்ற பாசிசப் போக்கைத் தான் பா.ஜ.க. வெளிப்படையாகக் கடைப்பிடித்து வருகிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் சட்டத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்தியாவின் மாபெரும் ஊழல் அம்பலத் திற்கு வந்தது, உச்சநீதிமன்றம் இதில் கடுமையாக உறுதி காட்டிவரும் வேளையில், குறிப்பாக, தேர்தல் பத்திரங்கள்  குறித்த விவரங்களை வெளியிடாமல் மறைத்துவந்த இந்திய ஸ்டேட் வங்கிக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து, உடனடியாக விவரங்களைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிட ஆணையிட்டுள்ளது. பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரப் போக்குக்குக் கிடைத்த சம்மட்டி அடியாகவே உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கருதத்தக்கதாகும்.
திசை திருப்பும் யுக்திகளும் – 
அறிவிப்புகளும்!
மக்களிடம் இது தொடர்பான விவாதம் கடந்த சில நாள்களாக எழுந்துள்ள நிலையில் அதைத் திசை திருப்பும் வகையிலேயே, தேர்தல் ஆணையர் பதவி விலகல் என்றொரு செய்தி, தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில், அதாவது நேற்று மாலை 5 மணிக்குப் பிரதமர் நாட்டு மக்களிடம் பேச உள்ளார் என்று ஒரு செய்தியைப் பரப்பினார்கள். ஒரு நாட்டின் பிரதமர் அந்நாட்டு மக்களிடம் பேச உள்ளார் என்பதை பீதிக் குரிய ஒன்றாக மாற்றியிருப்பதும் பாஜகவும், மோடியும் ஈட்டியிருக்கும் நற்பெயருக்குச் சான்றுகளாகும். இந்திய பாதுகாப்புத் துறைக்கான ஆராய்ச்சி அமைப்பின் கண்டு பிடிப்புகளுள் ஒன்றாக அக்னி-5 மிஷன் திவ்யாஸ்திரா என்ற பெயரிடப்பட்ட ஏவுகணை அறிமுகம் என்றார்கள். ஆனால், அது பெரிய அளவில் எடுபடவில்லை.
அதேநேரத்தில் இன்னொரு புறம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிப்பும் வெளியானது. பா.ஜ.க. அரசு எவ்வளவு பயந்துபோயுள்ளது என்பதை, இவர்களின் பதற்றமான இந்த நடவடிக்கைகளே காட்டு கின்றன. எதையாவது முன்னிறுத்தி, மக்களைக் குழப்பு வதும், திசைதிருப்புவதும் மட்டுமே இவர்கள் அறிந் துள்ள அரசியல் தந்திரங்களாகும். தேர்தல் அறிவிக்கப்படு வதற்குள் இனியும் எத்தனை நாடகங்களை அரங்கேற்ற இருக்கிறார்களோ தெரியவில்லை!
அந்தப் பதட்டத்திலும் நல்லதைச் செய்து கவனத் தைத் திசை திருப்புவது என்பதெல்லாம் பா.ஜ.க.விற்குப் பழக்கமில்லாதவை. மோசமான ஒன்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டுமென்றால், அதை விட மோசமான ஒன்றை மக்கள் தலையில் கட்டு என்பது தான் அவர்கள் பின்பற்றும் வழி. அப்படி ஒன்று தான் இப்போது நடந்திருப்பதும்!
பச்சையான மதவெறி சட்டமே!
நாட்டின் குடியுரிமையை மதத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கும் மோசமான மதவெறிச் சட்டம் தான் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கொண்டு வந்துள்ள குடியுரி மைத் திருத்தச் சட்டமாகும்! பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாத இந்து, கிறிஸ்துவர், சீக்கியர்,  சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க வகை செய்கிறது இந்தச் சட்டம்.
அண்டை நாடுகளின் அரசுகளால் மத ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவளிக்கவே இந்தச் சட்டம் என்றால், மியான்மாவில் கடும் பாதிப் புக்குள்ளான ரோஹிங்கியாக்களுக்கும், பாகிஸ்தானின் அஹமதியாக்களுக்கும், ஷியா பிரிவினருக்கும், பூடா னில் உள்ள கிறிஸ்துவர்களுக்கும் ஏன் இந்தச் சட்டம் இடம் தரவில்லை என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
2014 டிசம்பர் 31 வரை அதாவது சட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட காலப்படி 6 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தவர்களுக்குக் கூட குடியுரிமை வழங்க வகை செய்த இந்தச் சட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இனப் படுகொலையைச் சந்தித்து, கடும் இன்னல்களுக்கிடையில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, படகுகளில் பயணித்து, தாய்த் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்து, இங்கேயே அகதிகளாக மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தச் சட்டம் வகை செய்யவில்லையே, ஏன்? வாரம் இரண்டுமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, தமிழையும், தமிழர்களையும் நேசிப்பதாக பம்மாத்து காட்டும் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவு தெரியாதா? அவர்கள் பட்ட இன்னல்களை அறியாரா? தமிழர்களுக்கு ஏன் இந்தப் பாராமுகம்?
குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க.வும், பா.ம.க.வும்!
இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்பு கள் அனைவரும் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். எதிர்த்து வாக்களித்துள்ளனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆம் பிரிவுக்கு இது முற்றிலும் எதிரானது என்று தெரிந்தும், நாடாளு மன்றத்தின் மக்களவையில் தங்களுக்கிருக்கும் மிருக பல மெஜாரிட்டியைப் பயன்படுத்தி, இந்த மசோதாவை வெற்றிபெற வைத்தது பா.ஜ.க.
மாநிலங்களவையில் அ.இ.அ.தி.மு.க.வின் 10 எம்.பி.க் களும், பா.ம.க.வின் ஒரு எம்.பியும் ஆதரவளித்த காரணத்தால் மட்டுமே, இந்தச் சட்டம் நிறைவேறியது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், சிறுபான்மை மக்களுக்கும், தமிழர்களுக்கும், இந்த வரலாற்றுத் துரோகத்தைத் தெரிந்தே செய்தவர்கள்  அ.இ.அ.தி.மு.க. தலைமையும், பா.ம.க. தலைமையும்தானே!
இந்தச் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட 2019 டிசம்பர் முதலே, திராவிடர் கழகம் தனது எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும்  திராவிடர் கழகமே ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுடன், அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட்டோருடன் இணைந்து மக்களிடம் கருத்துகளை எடுத்துச் சென்றது.
தொடக்கத்திலேயே ஆர்ப்பாட்டங்கள் – 
கண்டனப் பேரணிகள்!
2019 டிசம்பர் 23 அன்று மாபெரும் பேரணியை, திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், காங் கிரஸ், ம.தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சியினரும் இணைந்து அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் எழுச்சிகரமாக சென்னையில் நடத்தின. பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பை, கண்டனத்தைப் பதிவு செய்தன. நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கோவிட் பெருந்தொற்று போன்ற காரணங்களால் அப்போது ஒத்திவைக்கப்பட்ட போராட்டங்களை மீண்டும் இந்த தேர்தல் நேரத்தில் தூண்டி, அமைதிக்குக் குந்தகம் விளவிக்க நினைக்கிறதா ஒன்றிய அரசு என்னும் கேள்வி தவிர்க்க முடியாததும், பொருள் பொதிந்ததும் ஆகும்.
நீதிமன்றங்கள் தொடர்ந்து குட்டு வைத்தாலும் – ஒன்றிய பி.ஜே.பி., அரசு திருந்தியபாடில்லை!
அடக்குமுறைக்கு மேல் அடக்குமுறையாக, பாசிசத் திற்கு மேல் பாசிச நடவடிக்கையாகத் தொடர்ந்து செயல் பட்டு வரும் அரசின்மீது நீதிமன்றங்கள் தொடர்ந்து குட்டு வைத் தாலும், இறுதியாக மக்கள் மன்றம் வழங்கப் போகும் தீர்ப்பு, இந்த எதேச்சதிகார அரசுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். மக்களைச் சந்தித்து வாக்குகளைக் கேட்க வேண்டிய இந்த நேரத்திலும், கடைசி கடைசி யாகத் தங்களின் ஆர்.எஸ்.எஸ்.-இந்துத்துவப் பிரிவினை வாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வேகமாக முனைகிறார்கள் என்றால் தோல்வி பயம் அவர்களைக் கடுமையாகப் பிடித்து ஆட்டுகிறது என்றே பொருள். அதை உண்மையாக்க வேண்டியதும், இது வரை கண்டிராத அளவில் பா.ஜ.க.வை அரசியலி லிருந்து துடைத்தெறிய வேண்டியது ஜனநாயகத்தையும், இந்திய நாட்டையும் விரும்பும் குடிமக்களின் கடமையு மாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13-3-2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக