பிறவி பேதத்தை கெல்லி எறியக்கூடிய ஒரே இயக்கம், திராவிடர் இயக்கம்தான்!
சனாதனம் - சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மையான இந்து சமூகத்திற்கும் விரோதி
செங்கல்பட்டு. பிப்,11, தமிழ்நாடு தழுவிய பரப்புரை பெரும் பயணத்தின் 8 ஆம் நாளில், சிங்கப்பெருமாள் கோயில், பல்லா வரம் ஆகிய பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில், அறிஞர் அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3 ஆம் தேதியில் தொடங்கி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பிறந்த கடலூரில், அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதி நிறைவு பெறக்கூடிய வகையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 29 நாட்களில் 59 பொதுக்கூட்டங்களில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியைப் பற்றி விளக்குவதற்கும், சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வந்து கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக திட்டமிட்டபடி சிங்கப்பெருமாள் கோயில், பல்லாவரம் பகுதிகளில் கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
சிங்கப்பெருமாள் கோவில் தேசிய நெடுஞ்சாலை காமராசர் சிலை அருகில் 10-02-2023 அன்று நடைபெற்ற திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ம.நரசிம்மன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியினை மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் ஒருங்கிணைத்து நடத்தினார். அமைப்பு செயலாளர் பொன் னேரி பன்னீர்செல்வம், காஞ்சி மண்டல தலைவர் பு.எல்லப் பன், மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன், மாவட்ட செய லாளர் செம்பியன், மண்டல இளைஞரணி செயலாளர் அருண் குமார், பொதுக்குழு உறுப்பினர் கல்பாக்கம் பக்தவத்சலம், மாவட்ட ப.க. தலைவர் சிவக்குமார், மாவட்ட ப.க.செயலாளர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர், முகாம் அலுவலகமான திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து புறப்பட்டு நேரடியாக சிங்கப்பெருமாள் கோயிலுக்கு மாலை வந்து சேர்ந்தார். திராவிடர் கழக மாநில பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார். ம.தி.மு.க.துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினரும், மகளிர் ஆணையக்குழு உறுப்பினருமான வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கருத்துரை வழங்கினார். பின்னர் நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். முன்னதாக அவருக்கு சமர் கலைக்குழுவினரின் பறையிசை முழக்கத்தோடு, ”தோழா முன்னேறு! வீர மணியோடு!” எனும் பரப்புரை பாடலும் இணைந்து எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. மேடை சிங்கை தி.மு.க. செயல்வீரர் சி முனிராசு அவர்களின் பெயரில் அமைந்திருந்தது.
தமிழர் தலைவர் உரையின் கருத்தமைவு!
ஆசிரியர் பேசுகையில், “இந்தப்பகுதிக்கு முதல் முறையாக வருகிறேன். ஆனால், இது எங்களுக்கு புதிதல்ல. ஏனென்றால் தந்தை பெரியார் இதே சிங்கப்பெருமாள் கோயிலில் 3 மணி நேரம் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் அவர் கால் படாத இடமே இல்லை. பல மணி நேரம் பேசலாம். சொல்வதற்கு சரக்கும் இருக்கிறது! சாதனைகளும் இருக்கின்றன! கூடவே நேர நெருக் கடியும் இருக்கிறது. ஆகவே புத்தகங்களை வாங்கிப்படியுங்கள்” என்றே தொடங்கினார். அவர் தனது உரையை, 100 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு எப்படி இருந்தது? தந்தை பெரியார் சமூக நீதி எனும் தத்துவத்தின் பெயரால் நமக்கு பெற்றுத்தந்துள்ள உரிமைகள் என்னென்ன? பாபாசாகேப் அம்பேத்கர் சட்டத்தின் மூலம் செய்துள்ள பாதுகாப்பு என்ன? தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கல்விப்புரட்சி எப்படிப்பட்டது? வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு என்ன செய்தது? திராவிட மாடல் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? சேது சமுத்திரத் திட்டம் ஏன் தேவை? இதை முடக்கிய மூன்று பார்ப்பனர்கள் யார்? அதை நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிற முறையில் அமைத்துக் கொண்டார்.
சிந்து சமவெளி சின்னம் காளை தானே?
ஆசிரியர், திராவிடர் இயக்கத்திற்கு முன் ஜாதி இங்கே எப்படி கோலோச்சியது என்பதைக் கூறி, “இந்த திராவிட மாடல் ஆட்சிதானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை உருவாகியிருக்கிறது! இந்த திராவிட மாடல் ஆட்சிதானே நீதிக்கட்சி காலத்திலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை தந்தது! இந்த திராவிட மாடல் ஆட்சிதானே பெண்களை படிக்கச் சொன்னது! இந்த திராவிட மாடல் ஆட்சி தானே தமிழ்நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நிறுவி ஜாதியை வேரறுத்தது! இந்த திராவிட மாடல் ஆட்சிதானே பார்ப்பனர்கள் உட்பட அனைத்து ஜாதியினரையும் ஒரே இடத்தில் வாழ வைத்திருக்கிறது!” என்று அடுக்கினார். ஆகவே நம் மீது திணிக்கப்பட்ட சனாதன பேதத்தை கெல்லி எறியக்கூடிய ஒரே இயக்கம் திராவிடர் இயக்கம்தானே! என்றார். எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்ட ஒன்றிய அரசு, மதசார்பற்ற அரசு என்பதையே மறந்து, பிராணிகள் நல வாரியம் சார்பாக அறிவித்துள்ள ஒரு பிற்போக்குத்தனமான மதப் பிரச்சாரத்தை தோலுரித்து தொங்கவிட்டார். அதாவது, காதலர் தினத்தை எதிர்கொள்ள, பசுவை அரவணைப்போம் என்று அறிவித்துள்ளதை எள்ளி நகையாடினார். அப்படியானால் எருமை என்னாவது? காளை என்னாவது? சிந்து சமவெளி சின்னம் காளை தானே? ஜல்லிக்கட்டு காளை தானே? காளையும் பசுவும் சேர்ந்தால் தானே கன்று பிறக்கிறது என்று நகைச் சுவையாக சொல்வது போல் சொல்லி, இது அரசியல் சட்ட விரோதம் என்பதை புரிய வைத்தார். இந்த அறிவிப்பு வந்த இரண்டு நாட்களாகத்தான் இப்படி பேசி வருகிறார். அரசே இதைச் செய்வதா? என்று இதற்கு எதிர்ப்பு அதிகமானதால் இந்த பிற்போக்குத்தனமான அறிவிப்பு பின்வாங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னதும் மக்கள் கையொலி செய்து அதை வரவேற்றனர். தொடர்ந்து திராவிட மாடலுக்கு இலக்கணம் சொன்னார் இந்த மாடலுக்கு எதிராக ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்த போது, திராவிடர் இயக்கம் போராடி அவரை பின்வாங்கச் செய்யாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை சுட்டிக் காட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் சிறப்பு!
பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டமான சிங்கப் பெருமாள் கோயிலில் நடைபெறுவதால் 1929ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டைப் பற்றியும், அந்த மாநாட்டின் 80 ஆம் ஆண்டு விழாவும், கலைஞர் அதில் கலந்துகொண்ட வரலாற்றையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து விட்டு, அந்த மாநாட்டுத் தீர்மானங்களின் விளைச்சல் தான் இன்று பெண்கள் அதிகாரத்திற்கு வந்திருக்கின்றனர். சொத்தில் உரிமை பெற்றிருக்கின்றனர் என்று விவரித்தார். அண்ணாவைத் தந்தது காஞ்சிபுரம் பிரியாத செங்கல்பட்டு மாவட்டம்தானே என்றார். தொடர்ந்து, படித்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரவிருக்கின்ற சேது சமுத்திரத் திட்டம் பற்றிய கடந்த காலச் செய்திகளை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி துரைபாபு, ஊராட்சி மன்ற துணை தலைவர் கே.பி.இராஜன், தி.மு.க.மாவட்ட பிரதிநிதி மு.கதிரவன், வி.சி.க.தொகுதி செயலாளர் தென்னவன், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஊனை பார்த்திபன், ம.தி.மு.க.ஒன்றிய இளைஞரணி செயலாளர் சார்லஸ், சி.பி.எம்.காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் குணசேகரன்,சி.பி.அய்.மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ம.ம.க.மாவட்ட துணை தலைவர் ஹைதர் அலி, சி.பி.எம்.மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, திருவள்ளுவர் மன்ற செயலாளர் சமத்துவ மணி, கலை அறப்பேரவை நிறுவனர் மு.கலைவாணன், மே-17 பொறுப்பாளர் கொண்டால் சாமி, இளைஞர் சுயமுன்னேற்ற பாசறை பொறுப்பாளர் பன்னீர் செல்வம், லாரி உரிமையாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேஷ், காஞ்சி மாவட்ட தலைவர் முரளி, மாவட்ட மகளிரணி செயலாளர் சாவித்திரி கருணாகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் புவியரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்ட அமைப்பாளர் இராஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்வின் தொடக்கத்தில் அலங்காநல்லூர் வேலு ஆசான் சமர் கலைக்குழு வழங்கிய பறை இசை நிகழ்ச்சி எழுச்சியாய் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பல்லாவரம் நோக்கி ஆசிரியர் தலைமையிலான பரப்புரைப் பயணக்குழு புறப்பட்டது. அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஏராளமான மக்கள் ஆசிரியர் உரையைக் கேட்க திரண்டி ருந்தனர். பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாத்திகன் அனைவரையும் வரவேற்று பேசினார். அமைப்பு செயலாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், மண்டல தலைவர் இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், மண்டல இளைஞரணி செயலாளர் சிவசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக பிரச்சார அணி செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சனாதனம் இந்து சமூகத்திற்கும் விரோதி!
அவர் தமது உரையில், பதவியா? கொள்கையா? என்றொரு கேள்வியை எழுப்பி, திராவிடர் இயக்கம் அதற்கு சொன்ன பதிலை ஆசிரியர் சொன்னார். அதாவது, ”அண்ணா ஒரு முறை, பதவி துண்டு போன்றது! கொள்கை வேட்டியைப் போன்றது!” என்று சொன்னதை சுட்டிக்காட்டினார். ”இப்போது துண்டு மட்டும் போதும் என்கின்றனர். எங்களைப் போன்றவர்கள் மக்கள் தொண்டு மட்டும் போதும் என்கிறோம்” என்று சொன்னதும் மக்கள் சொற்களில் இருந்த ரசனையை மட்டுமல்ல, அதன் ஆழமான பொருளையும் புரிந்துகொண்டு கைதட்டினர். வேறு யாராவது புரிந்துகொள்ளாமல் இருந்துவிடப் போகி றார்களே என்ற அக்கறையுடன், நாங்கள் ஒரு பஞ்சாயத்து பிரதி நிதிக்குகூட தேர்தலில் நிற்பதில்லை” என்று வெட்டவெளிச்சமாக சொன்னார். சனாதனத்தைப் பின்பற்றுகின்ற பிற்போக்கு சக்திகளால் சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக்கூற வந்தவர், ”சனாதனம் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும் பான்மையான இந்து சமூகத்துக்கும் விரோதி” என்ற முக்கியமான கருத்தை மக்கள் மனதில் பதிய வைத்தார். அதற்கு ஆதாரமாக சமூகநீதிக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை, அரிய (ஆரிய) வகை ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 10% இட ஒதுக்கீட்டின் பின்னணியை விவரித்தார்.
உண்மை = திராவிடம்! பொய் = ஆரியம்!
மாநில உரிமைகள் பற்றி பேசும் போது, ஆன்லைன் ரம்மியினால் பெருகிவரும் தற்கொலைகளை கவலையோடு சொல்லி, அதற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டாமா? என்றார். இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால் ஆளுநர் பதில் சொல்லாமல் அண்ணா மலை பதில் சொல்வதேன்? என்றார். அண்ணாமலையென்ன ஆளுநர் மாளிகையின் செய்தித் தொடர்பாளரா? என்று கேள் விக்கணைகளை தொடுத்தார். மேலும் அவர், ‘ஒரு காலத்தில் படிக்காதே என்றனர். இப்போது படிக்காமல் இருக்காதே என்கின்றனர். இதுதானே திராவிட மாடல் அரசின் சாதனை!” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தொடர்ந்து, அவர் இரண்டு பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர்களின் கருத்தை முக்கிய மாகக் குறிப்பிட்டுப் பேசினார். ஒருவர் தர்மேந்திரப் பிரதான். இவர் அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்து கல்லூரிகளில் ஆய்வு செய்துவிட்டு, உயர் கல்வியில் முனைவர் பட்டம் பெறுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டுப் பெண்கள்தான் சிறந்து விளங்குகின்றனர் என்று சொன்னதையும், மற்றொரு ஒன்றிய அமைச்சரான ஜிதேந்திர சிங், நாடாளுமன்றத்திலேயே பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் ராம் சேது பற்றி எழுப்பிய ஒரு கேள்விக்கு, பல ஆண்டுகளாக ஆய்வு செய்து பார்த்ததில் ராமன் பாலம், என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியதையும் குறிப்பிட்டுவிட்டு, நாங்கள் சொன்னதுதானே உண்மை என்றாகியிருக்கிறது என்றார். மக்கள் அனிச்சையாக பலத்த கையொலி எழுப்பினர். கைதட்டல் முடிந்ததும், ”உண்மையைப் பேசுவது தான் திராவிடம்! பொய்யை பரப்புவது ஆரியம்! என்றார். மக்கள் அதை ஆமோதித்தனர். ஒன்றிய அரசு பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் என எல்லாவற்றிலும் தோற்றுப் போயிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கல்விக் கட்டமைப்பு சிறந்து விளங்குவதால் ஏராளமானோர் படித்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு தேவை. அதற்காக சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும். இதுதான் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு முக்கியம். ஆகவே இதில் ஜாதி இல்லை! அரசியல் இல்லை! மதம் இல்லை! ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கருத்தாக இது மாறவேண்டும். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! தமிழ்நாடு வாழ்க! என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் மகேந் திரன், வி.சி.க. மாவட்ட செயலாளர் அருள் பிரகாசம், ம.ம.க. துணைப் பொதுச்செயலாளர் யாக்கூப், சி.பி.அய் எம்.மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினரும், மகளிர் ஆணைய குழு உறுப்பினருமான வரலட்சுமி மதுசூதனன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மல்லை சத்யா, எழுத்தாளர் இமையம் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடமிருந்து புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். (சிங்கப்பெருமாள் கோவில், 10.2.2023)
பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்ட மேடையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தமிழர் தலைவருடன். (பல்லாவரம், 10.2.2023)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக