ஞாயிறு, 20 ஜூலை, 2025

மானமிகு கலைஞருடன் – ஒரு நேர்காணல்

 


கேள்வி: வணக்கம்! இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினுடைய முக்கியத் தலைவராகிய தங்களிடத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய 107ஆவது ஆண்டு பிறந்தநாள் மலருக்காகவும், “விடுதலை” பொன்விழா மலருக்காகவும் ஒரு நேர்முகப் பேட்டிக்காக வந்திருக்கிறோம். இந்த அரிய வாய்ப்பைப் பெற்றதற்காக எங்களுடைய நிறுவனத்தின் சார்பாக அன்பான நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துப் பேட்டியைத் தொடங்குவதற்கு அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கலைஞர்: வரவேற்கிறேன், பேட்டியைத் தொடருங்கள்.

கேள்வி: தந்தை பெரியாரவர்கள்பால் தாங்கள் ஈர்க்கப்பட்ட நிகழ்ச்சி எது?

பதில்: 1945ஆம் ஆண்டில் ‘நாகை திராவிட நடிகர் கழகம்’ என்ற பெயரால் கொள்கைப் பிரச்சார நாடகங்களை நடத்தி வந்தோம். நாகை கழகச் செயல்வீரர் ஆர்.வி.கோபால் அவர்களால் அது நிறுவப்பட்டது. கொள்கை பிரச்சாரத்திற்காக நானும் கதைகளை எழுதி, உரையாடல்கள் அமைத்து நடிக்கவும் செய்தேன். அப்படி நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் புதுவையில் செட்டியார் பேட்டையில் அநத் நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

புதுவையில் ஒரு நாள்!

அதன் காரணமாக ஸநாதனிகள் – வைதிகர்கள் எதிர்ப்புக்கு நாங்கள் ஆளாக நேரிட்டது. அந்த நேரத்தில் புதுவையில் திராவிடர் கழகத்தினுடைய மாநாடு ஒன்றை நடத்தினோம். அந்த மாநாட்டில் நானும் பங்குகொண்டு பணியாற்றிக்கொண்டிருந்தேன். தந்தை பெரியாரவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அந்த மாநாட்டை முன்னின்று நடத்தினார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த மாநாட்டில் பெரும் கலவரம் ஏற்பட்டு அதன் காரணமாக நாங்களெல்லாம் விரட்டப்பட்டு, தாக்கப்பட்டு, நான் இறந்துவிட்டேன் என்று எதிரிகள் கருதி ஒரு சாக்கடையிலே தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

தமிழ்நாடு

என்னைக் காணவில்லையென்று தந்தை பெரியாரவர்கள் இரவெல்லாம் தேடி, -இறுதியாக ஒரு வீட்டில் நான் பிரக்ஞையற்ற நிலையிலேயிருந்ததைக் கண்டுபிடித்தார்கள். அங்கேயிருந்து என்னை அழைத்து வந்து, என்னுடைய நெற்றியிலிருந்த காயங்களுக்கெல்லாம் அவர் தன்னுடைய கையால் மருந்து தடவினார்.

அப்படி மருந்து தடவுகிற பொழுது அய்யா அவர்கள் சொன்னார்கள், “யார் யார் பெற்ற பிள்ளைகளோ என்னுடைய கொள்கைகளுக்காக இப்படிக் கஷ்டப்படுகிறார்கள்” என்று சொன்னார்கள்.

தமிழ்நாடு

நான் மாநாட்டிலே தாக்கப்பட்டு, சாக்கடையிலே தூக்கி வீசப்பட்டு அதன் காரணமாகப் பெற்ற வலியெல்லாம் மறந்து போயிற்று.

அப்போது தந்தை பெரியாரவர்களிடத்தில் ஒரு தந்தை பாசத்தை, தாயின் அன்பை நான் உணர்ந்தேன்.

கேள்வி: ‘குடிஅரசி’ல் பணியாற்ற தந்தை பெரியார் குருகுலத்தில் இருந்தபோது தங்கள் வயது என்ன? அந்தக் காலத்தில் ‘குடிஅரசி’ல் எழுதியதில் இப்போதும் உங்கள் மனத்தில் நீங்காமல் இருக்கும் படைப்பு எது?

தமிழ்நாடு

“தீட்டாயிடுத்து” –“அண்ணாமலைக்கு அரோகரா!”

பதில்: நான் என்னுடைய 22ஆவது வயதில் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் தந்தை பெரியாரவர் களிடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் முதலில் குறிப்பிட்டது. புதுவை நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை ஒட்டி அய்யா அவர்கள் ‘என்னோடு வந்து இரு’ என்று ஈரோட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ‘குடிஅரசு’ அலுவலகத்தில் துணை ஆசிரியனாகப் பணிபுரியுமாறு பணித்தார்கள்.

நான் தொடர்ந்து ‘குடிஅரசு’ இதழில் கட்டுரை எழுதினேன் “குண்டுவீச்சு” என்ற தலைப்பில் ‘விமானி’ என்ற புனை பெயரோடு சிறுசிறு துண்டுச் செய்திகளையும் எழுதி வந்தேன். பெரியாரவர்கள் அவைகளையெல்லாம் பாராட்டுவார்கள்.

ஒரு சமயம் அய்யா அவர்களே என்னை அழைத்து ஒரு துணைத் தலையங்கம் எழுதச் சொன்னார்கள்.

அது என்னுடைய வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான நாளாகும்.

தமிழ்நாடு

திருவையாறில் தியாகய்யர் உற்சவம் நடைபெற்றதும் அதில் தமிழில் பாடிய காரணத்தால் மேடை தீட்டாகிவிட்ட தென்று அடுத்துப் பாடவந்த ஒரு வைதீக பிராமண சங்கீத வித்வான் – தண்டபாணி தேசிகர் பாடிய அந்த மேடையைக் கழுவிவிட்டு, தோஷம் கழித்து அதற்கப்பிறகுதான் பாடுவதாகச் சொல்லி அந்த மேடையில் பாடினார் என்று செய்தி வந்தது.

நான் அந்தச் செய்தியை மிகுந்த கவலையோடும், வேதனையோடும் படித்துவிட்டு- அய்யா அவர்கள் சொன்ன ஆணையை ஏற்று ‘தீட்டாயிடுத்து’ என்ற தலைப்பில் ‘குடிஅரசு’ப் பத்திரிகைக்கு நான் துணைத்தலையங்கம் எழுதினேன்.

நான் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். திருவண்ணாமலை தீபத்தைப்பற்றி “அண்ணாமலைக்கு அரோகரா” என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். தீபாவளி பற்றியெல்லாம் எழுதியிருக்கின்றேன். மனதில் நிலைத்து நிற்பது இந்த ‘தீட்டாயிடுத்து’ என்ற கட்டுரைதான். காரணம், பெரியார் அவர்கள் இதைப் படித்துப் பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள். என்னைத் தட்டிக் கொடுத்தார்கள். அதனால் அது பசுமையாக உள்ளது.

கேள்வி: தந்தை பெரியாரவர்களைப் பிரிந்திருந்த காலகட்டத்தில்- பெரியாரவர்களின் கொள்கைகளில், இலட்சியத்தில் தங்களுக்குப் பிடிப்புக் குறைந்ததுண்டா?

கன்னத்தைத் தடவினார் பெரியார்

பதில்: என்றைக்குமே அப்படிப்பட்ட பிடிப்புக் குறைந்ததே இல்லை. தந்தை பெரியாரவர்களைப் பிரிந்திருந்த காலகட்டத்திலே கூட- ஹிந்தியை அழிப்பதற்காக தந்தை பெரியாரவர்கள் தமிழ்நாட்டிலே- உள்ள இரயில் நிலையங்களிலெல்லாம் ஒரு பெரும் போராட்டத்தை அறிவித்தார்கள். அதையொட்டி அண்ணா அவர்களும், “திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி” என்று துவக்கத்திலேயே குறிப்பிட்டதற்கிணங்க- அதே நாளில் ஹிந்தியை அழிப்பதற்கு அண்ணாவும் ஆணையிட்டார்.

தமிழ்நாடு

அந்த ஆணையை ஏற்று நான் திருச்சியிலே புகைவண்டி நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழிப்பதற்காகச் சென்றேன்.

அன்று திருச்சி நிலையத்திலேயே பெரியாரவர்கள் ஹிந்தி எழுத்துகளை அழிப்பதற்காக வந்தார். அவர் ஹிந்தி எழுத்துகளை அழித்துவிட்டு வந்தபிறகு- நான் வேறொரு இடத்தில் சென்று ஹிந்தி எழுத்துகளை அழித்துவிட்டு வந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தெப்பக்குளத்திற்கு அருகாமையில் அய்யா அவர்களுடைய வேன் வந்த பொழுது- நான் என்னுடைய காரை விட்டு இறங்கி, பிரிந்த பல ஆண்டு காலத்துக்குப் பிறகு அய்யா அவர்களிடத்தில் சென்று வணக்கம் தெரிவித்தேன்.

அய்யா அவர்களும் என்னுடைய கன்னத்தைத் தடவிக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பி வந்தேன்.

ஆகவே, எந்த நேரத்திலும் மொழிப் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை, பகுத்தறிவுப் பிரச்சினை ஆகியவற்றில் பெரியாரவர்கள் சொல்லிய எந்தக் கருத்துகளிலிருந்தும் நாங்கள் நழுவியதில்லை.

கேள்வி: சாதாரண நிலையில் இருக்கும்போதும் அய்யாவுடன் இருந்திருக்கின்றீர்கள். அமைச்சராகவும், முதலமைச்சராகவும் அவருடன் தொடர்புகொண்டும் இருந்திருக்கின்றீர்கள். அவரிடம் நீங்கள் எந்த மாற்றத்தையாவது கண்டதுண்டா?

பெரியார் என்றைக்கும் பெரியார்தான்

பதில்: ஒருவேளை, பெரியாரவர்கள் எங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டிருக்கக்கூடும். நான் எந்த மாற்றத்தையும் அவரிடத்திலே காணவில்லை. எப்படித் தன்னுடைய மாணவனாக என்னை ஏற்றுக் கொண்டு ஆளாக்கினாரோ- அதைப்போலவே நான் அமைச்சராக இருந்தபொழுதும், முதலமைச்சராக இருந்தபொழுதும் அதே பாசத்தோடு அவர்கள் பழகினார்கள்.

பெரியாரிடத்திலே ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் வயதில் சிறியவர்களாக இருந்தால்கூட அவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் பெரியார் என்றைக்கும் பெரியார்தான்.

தமிழ்நாடு

கேள்வி: தாங்கள் பெரியாரவர்களைப் பலமுறை, பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறீர்கள். அப்படிப்பட்ட சந்திப்பின்போது தங்கள் நெஞ்சை நெகிழ வைத்த சில நிகழ்ச்சிகளைக் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நெஞ்சை நெகிழவைத்த அந்த நிகழ்ச்சி

பதில்: ஒரு நிகழ்ச்சியைச் சொன்னால் போதுமானது. கிட்டத்தட்ட 16, 17 ஆண்டுகாலம் தந்தை பெரியாரை விட்டு நாங்கள் பிரிந்திருந்து- 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 138 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன் நான் இப்போது பெருமையாகச் சொல்வதாகக் கருதக் கூடாது- அறிஞர் அண்ணா அவர்களிடத்தில் தந்தை பெரியாரவர்களைச் சென்று பார்த்து வரலாம் என்று சொன்னேன்.

உடனே, அண்ணா அவர்கள் அட்டியின்றி “இங்கிருக்கிறாரா? கேள்” என்று சொன்னார்.

இங்கே இல்லை, திருச்சியில் இருக்கிறார் என்று சொன்னவுடன்- அன்பில் தருமலிங்கத்திடம் தொடர்புகொண்டு அய்யா அவர்களைப் பார்க்க வருவதாக அண்ணா அவர்கள் தெரிவித்தார்கள்.

அண்ணாவும், நானும், நாவலர் நெடுஞ்செழியனும் அன்பில் தர்மலிங்கமும் பெரியாரவர்களைத் திருச்சியிலே சென்று அவரது மாளிகையில் சந்தித்தோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக் கனியை பெரியாரவர்களுடைய காலடியிலே வைத்தபோது- அவர்கள் எங்களைப் பார்த்து தழுதழுத்த குரலில் கட்டிப் பிடித்துக் கொண்டு “மகிழ்ச்சி! மகிழ்ச்சி!” என்று சொன்னார்கள். பெரியாரால் பல ஆண்டுகாலம் தாங்கள் எதிர்க்கப்பட்டு இருந்தாலும் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஒரு தந்தையின் பாசத்தோடு அரவணைத்தார்கள். அவரே எங்களைப் பார்த்து “வெட்கப்படுறேங்க! வெட்கப்படுறேங்க!” என்று சொன்னதும் நெஞ்சை நெகிழவைத்த நிகழ்ச்சியாகும்.

இலட்சியத்தில் வெற்றி பெற்றீர்களா?

கேள்வி: திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அறிஞர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலோடு அரசியல் கட்சியைத் தொடங்கினீர்கள். அரசியலில் சாதிக்க முடியும் என்று கருதிய இலட்சியத்தில் நாங்கள் வெற்றியைப் பெற்று விட்டதாகக் கருதுகின்றீர்களா?

பதில்: முழுமையான வெற்றி பெற்றுவிட்டதாக நான் கருத முடியாது. அரசியலில் வெற்றி பெறுவது என்பது ஆட்சிப் பொறுப்பிலே சென்று அமர்வது என்று மாத்திரம் கருதிக் கொள்ள முடியாது.

ஆட்சிப் பொறுப்பு, பதவி இவைகளெல்லாம் நாம் கொண்டுள்ள இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையவேண்டுமே தவிர, அவைகளே குறிக்கோளாக இருக்க முடியாது.

ஆட்சிப் பொறுப்பு, பதவி இவைகளெல்லாம் நாம் கொண்டுள்ள இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையவேண்டுமே தவிர, அவைகளே குறிக்கோளாக இருக்க முடியாது.

ஆனால், அரசியலைப் பொறுத்த வரையில் ‘மாநில சுயாட்சி இலட்சியத்தை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துச் சொன்ன காரணத்தால்- தமிழ்நாட்டிலே மாத்திரம் அல்லாமல், இந்தியா முழுமையும் “விவாதத்திற்குரிய பிரச்சினையாக” மாநில சுயாட்சிப் பிரச்சினை இன்றைக்கு ஆகியிருக்கின்றது.

அதற்குக் காரணம், இந்தியாவிலேயே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையிலே ‘மாநில சுயாட்சி’த் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றோம். இது அரசியல் கட்சியாலான வெற்றி என்று சொல்ல வேண்டும்.

கேள்வி: பெரும் சக்தியாக இருந்து சமுதாயத் தொண்டு புரிந்து எந்த திராவிடர் கழகத்திலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்து பெரும்பாலும் அரசியல் பிரச்சினைகளிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட்டதால் இளைஞர்களிடையே சமுதாய உணர்வு மங்கிவிட்டது என்ற ஒரு கருத்துப் பரவலாக இருப்பதுபற்றி தங்கள் கருத்து என்ன?

ஏற்றுக் கொள்கிறேன்… ஆனால்…

பதில்: இந்தக் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் கூட, நாங்கள் தொடர்ந்து செய்ய இயலாமல் போய்விட்ட அந்தப் பணியை திராவிடர் கழகத்தினுடைய பொதுச் செயலாளர், என்னுடைய இளவல், தளபதி வீரமணி அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

ஆங்காங்கே ‘இளைஞர் பயிற்சி முகாம்’களை நடத்தி அதன் மூலமாகச் சமுதாய அறிவைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யுமளவிற்குப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

திராவிட முன்னேற்றம் கழகத்தின் சார்பிலும் இளைஞர் பாசறைகள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுச் சமுதாயத்துறையில், அறிவுத் துறையில் எதிர்காலச் சமுதாயம் ஒரு முன்னேற்றமான சமுதாயமாக அமைவதற்குத் தகுந்த வாய்ப்புக் கூறுகளை முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி: “என்னைப் பொறுத்தவரை நாத்திகன். ஆனால், எங்கள் கட்சியைப் பொறுத்தவரை அத்தனைப் பேரையும் அவ்வாறாகக் கூறமுடியாது” என்று சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டிலே நீங்கள் குறிப்பிட்டீர்கள். அரசியலோடு சமுதாயக் கொள்கையை முக்கியமாகக் கொண்டுள்ள ஒரு கட்சியில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையில் ‘‘இத்தகைய இடைவெளி’ தேவைதானா? இந்த இடைவெளியைப் போக்கத் திட்டம் உள்ளதா?

பதில்: திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் சமுதாயப் புரட்சி இயக்கம் என்கின்ற அளவிலே நிறுவப்பட்டிருக்குமேயானால் நாத்திகப் பிரச்சாரத்தை நாங்களும் செய்து கொண்டிருக்க முடியும். இது ஒரு அரசியல் கட்சியாக இயங்க வேண்டும் என்கின்ற காரணத்தினால் நாங்கள் நாத்திகப் பிரச்சாரத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற அளவிற்கு பிரச்சாரம் செய்ய இயலாதவர்களாக இருக்கின்றோம்.

இனவுணர்வா? –நாத்திகமா?

உதாரணம் சொல்லவேண்டுமேயானால், பண்டிதர் ஜவஹர்லால் நேருகூட நாத்திகர்தான். ஆனால், காங்கிரஸ் கட்சி அரசியல் கட்சி என்ற காரணத்தினால் நாத்திகக் கருத்தை அவரால் பரப்ப இயலவில்லை. பகவத்சிங் நாத்திகர்தான். அவரும் தன்னளவில் நாத்திகராக இருந்தாரேயல்லாமல் அதைப் பரப்பிட முனையவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் இனவுணர்வு பரவவேண்டும் என்பதிலே ஆழமான, அழுத்தமான எண்ணம் உடையவர்கள்.

இனவுணர்வா? நாத்திகமா? என்ற வருகிற நேரத்தில் இனவுணர்வு அடிப்படையில் நாத்திகர், ஆத்திகர் என்ற வேறுபாட்டை நாம் பார்க்க முடியாது. மதுரை மடாதிபதி அவர்களை நாம் அப்படித்தான் பார்க்கின்றோம். அந்த இடத்தில் இனவுணர்வா, நாத்திகமா என்கின்ற கேள்வி எழுகின்றபொழுது முதலில் இனவுணர்வு! இனவுணர்வு என்ற அடித்தளம் சரியாக  அமைக்கப்படுமானால் அதன் பிறகு நம்மிடத்தில் உள்ள ஆத்திகர்களையும் பக்குவப்படுத்தி நாத்திகர்களாக மாற்றமுடியும்.

தமிழர்கள் ஏமாளிகளாக இருப்பது ஏன்?

கேள்வி: தமிழர்கள் ஏமாளிகளாகவே ஆகி விட்டதற்கு என்ன காரணமென்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்: தமிழர்களாக இருப்பதுதான் என்று கருதுகிறேன். (சிரிப்பு)

கேள்வி: தமிழர்களிடத்தில் இனமானமும், இனவுணர்வும் தழைத்தோங்க என்னென்ன காரியங்களை நாம் செய்ய வேண்டுமென்று தாங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்: தமிழர்களுடைய வரலாறு, மரபு, பண்பாடு, இலக்கியக் கருத்து இவைகளையெல்லாம் தமிழ் இளைஞர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

அத்தகைய கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் நாள்தோறும் நடைபெற வேண்டும். மிகக் குறிப்பாக பல்வேறு ஜாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கின்ற தமிழ் சமுதாயத்தில்- முக்குலத்தோர், வன்னியர், முதலியார், செட்டியார் என்பது போன்ற பல்வேறு ஜாதிப் பிரிவுகளையெல்லாம் அகற்றி, எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் எல்லோரும் தமிழ் ஜாதிதான் என்கின்ற அந்த உணர்வை உருவாக்கவேண்டும்.

இந்த ஆட்சியைப் பற்றி…

கேள்வி: நிர்வாகச் சீர்கேடுகள் மிக மலிந்திருந்தும், மக்கள் வளர்ச்சித் திட்டம் என்பது இந்த ஆட்சியில் அறவே இல்லாத நிலையிலும்- மக்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அசைவற்ற நிலையில் இருப்பதாகத் தோற்றமளிக்கிறதே! இந்த நிலைக்குக் காரணமென்ன? இந்த நிலையை மாற்றிட நாம் என்ன செய்யவேண்டும்?

பதில்: இதை மக்களும் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதைப் பற்றி நாம் ஏன் வாய் திறக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். ஏனென்றால் வாய் திறந்தும் பயனில்லை; வாய்திறந்து பதில் சொல்வதற்கு ஆட்சியிலும் தலைவர்கள் இல்லை.

கேள்வி: திராவிடர் இயக்கம் ஒரு பக்கம் பிளவுபட்டுக் கிடப்பதோடு மட்டுமல்லாமல்- திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களாகச் சொல்லிக் கொள்பவர்களே- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கொள்கைகளுக்கு மாறாகத் திரிபுவாதம் பேசும் ஆபத்து தலைதூக்கி நிற்பதை முறியடிப்பதற்கு தாங்கள் கூறும் பரிந்துரைகள் என்ன?

பச்சைப் பாம்பும் – பச்சைக் கொடியும்!

பதில்: பல்வேறு நிகழ்ச்சிகளில் குறிப்பிட் டிருக்கிறேன். பச்சைப் பாம்பு, பச்சைக்கொடி இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழர்கள் ஏமாந்து போகிறார்கள். இரண்டும் பச்சையாக இருக்கிற காரணத்தால் வித்தியாசம் தெரியாது.

பெரியார், அண்ணா என்கின்ற பெயரை மாத்திரம் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய கொள்கைகளைக் காற்றிலே பறக்கவிடுகிறார்கள்.

ஆனால், பெரியார், அண்ணா பெயர்களைத் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வைத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு வீட்டிலே கொள்ளைக்காரன் புகுந்துவிடுகிறான், வீட்டுக்காரன் விழித்துக்கொண்டு துப்பாக்கியைத் தூக்குகிறான். அந்தக் கொள்ளைக்காரனோ ஏணையிலே தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு நிற்கிறான்.

கொள்கைக்காரன் எப்படி அந்தக் குழந்தையைக் காட்டி தப்பிக்கிறானோ, அதைப் போல தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியவரைப் பயன்படுத்தித் தப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வி: இந்தத் திரிபு வாதத்தைப் போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.

பதில்: நிலைமை ஒன்றும் முற்றவில்லை. அப்படிச் செய்கின்ற அமைச்சர்களுக்குத்தான் பைத்தியம் முற்றியிருக்கின்றது.

ஒற்றுமைக்கு உலை வைத்தது யார்?

கேள்வி: திராவிடர் இயக்கம் பிளவுபட்டதால் இன எதிரிகளும் தமிழர் அல்லாதாரும் ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை மாறவேண்டுமானால், திராவிடர் இயக்கம் ஒன்றுபட்ட சக்தியுடன் விளங்கத் தாங்கள் எடுக்க விரும்பும் முயற்சி என்ன?

பதில்: ஒன்றுபட்ட சக்தியாகத் திராவிடர் இயக்கம் ஆகவேண்டும் என்கின்ற முயற்சி எடுக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டில் அதற்கு நானும் ஒப்புக் கொண்டேன். பிஜுபட்நாயக்  எனப்படுகின்ற மத்திய அரசினுடைய அமைச்சர் அந்த முயற்சியிலே ஈடுபட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

அவர் என்னையும் அ.தி.மு.க.வின் தலைவர் எம்.ஜி.ஆரையும் சந்தித்து இரண்டு கட்சிகளும் இணைந்து உடன்பாடு கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்.

நான் அப்போது அவரிடத்திலே சொன்னேன்

(1) எம்.ஜி.ஆரே முதலமைச்சராக நீடிக்கட்டும்.

(2) கட்சியினுடைய தலைவர், பொதுச் செயலாளர் யார் என்பதைப் பிறகு பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.

(3) எங்களுடைய ஆட்சி எம்.எல்.ஏக்கள் யாருக்கும் அமைச்சர் பதவி தேவையில்லை.

(4) 9 ஆயிரம் ரூபாய் வருமான உச்சவரம்பு பிற்பட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீட்டில்
எம்.ஜி.ஆர். அரசு கொண்டு வந்ததை நீக்கவேண்டும். (5) கொடியிலே அண்ணா படம் போட்டிருப்பதும் அப்படியே இருக்கட்டும்.

(6) அண்ணா ஆரம்பித்த பெயரான தி.மு.க.வை ஏற்றுக்கொள்ளட்டும்.

இவைகளை பிஜுபட்நாயக் கேட்டுக்கொண்டு எம்.ஜி.ஆரையும் அழைத்து இரண்டு பேரையும் நேராக வைத்துப்பேசி இருவரும் ஒப்புக்கொண்ட பிறகு- அன்று மாலையே வேலூர் பொதுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நான் இவைகளையெல்லாம் ஒப்புக்கொள்ளவில்லையென்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

அது அந்தக் காலத்தில்! இப்போது சேர்வது பற்றி வாய்ப்புக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், அவர்கள் மிக மிகப் பின்னோக்கிப் போய்விட்டார்கள். திராவிடர் இயக்கத்தை விட்டு, பெரியார், அண்ணா கொள்கைகளை விட்டு மிகவும் பின்னோக்கிப் போய்விட்டார்கள்.

இனி அவர்களோடு சேர்ந்ததுதான் திராவிடர் இயக்கம் என்று கூறுவது சற்றும் பொருத்தமில்லாதது.

பார்ப்பனர் எதிர்ப்பு ஏன்?

கேள்வி: ஒரு குறிப்பிட்ட இனத்தின்மீது கொண்ட வெறுப்பாகக் கட்டப்பட்டதுதான் பெரியார் இயக்கம் என்று தங்களை முற்போக்குவாதிகள் என்று கூறிக் கொள்கின்ற அமைப்பைச் சேர்ந்தவர்களே சொல்வது பற்றி தங்கள் கருத்தென்ன?

பதில்: அது தவறு. ஒரு குறிப்பிட்ட இனம் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இனத்தின் மீது வெறுப்புக் காட்டுகின்ற காரணத்தினாலேதான் இந்த இயக்கமே உருவாயிற்று.

கேள்வி: ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இறுதித் தீர்ப்பு என்று எதைக் கருதுகின்றீர்கள்?

பதில்: ‘தனித்தமிழ் ஈழம்’ ஒன்றுதான் இறுதித் தீர்ப்பாக இருக்க முடியும். இடைக் காலத்தில் ஏற்படுகின்ற எந்த முடிவும் தற்காலிகமான முடிவாகத்தான் இருக்கக் கூடும்.

ஆங்கில ஏடு துவக்கப்படுமா?

கேள்வி: 1971இல் பொதுத் தேர்தல் முடிவுற்ற சமயத்தில் பார்ப்பனரல்லாதார் நலக் கண்ணோட்டத்தில் ஆங்கில நாளேடு துவக்கப்பட வேண்டுமென்று தந்தை பெரியாரவர்கள் பெரிதும் அக்கறை செலுத்தினார்கள்.

அந்தச் சந்தர்ப்பத்திலே, அத்தகைய ஏடு ஒன்று துவக்கப்படுவதற்கு தாங்களும் ஆர்வம் காட்டினீர்கள். ஆனால் இதுவரையில் அத்தகைய ஏடு துவக்கப்படவில்லை. இனியேனும் துவக்கப்படுவதறகு முயற்சி எடுக்கப்படுமா?

பதில்: இந்தியாவினுடைய இன்றைய நிலை என்ன வென்றால் மிகப்பெரிய முதலாளிகளால் நடத்தப்படுகின்ற பத்திரிகைகள்தான் வியாபாரி ரீதியாக இலாபகரமாக நடத்தப்பட முடிகின்றது. சிறு பத்திரிகைகள்- கொள்கைரீதியாக நடத்தப் படுகின்ற இந்தப் பத்திரிகைகள்- இலாபம் அடைய முடியாவிட்டாலும், நட்டத்திலேயே நடடத்தப்பட வேண்டியுள்ளது. கொள்கை ரீதியாக நடத்தப்படும் பத்திரிகைகளை ஒழித்துவிட வேண்டும் என்பதற்காகவே பத்தரிகைக் காகித விலையை அடிக்கடி ஏற்றி விடுகிறார்கள். இந்தக் காரணத்தால் தமிழ் பத்திரிகைகளை நடத்துவதே இந்தக் காலத்தில் பெரிய கடினமான காரியமாக இருந்து வருகின்றது. ஆங்கிலப் பத்திரிகைகளை நடத்துவது இயலாததாக இருக்கின்றது. அதனால் நாம் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டோம் என்று பொருளல்ல. தக்கவர்களோடு கலந்து பேசி முயற்சிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பெரியார் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகம் எப்படி?

கேள்வி: தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகமே இருக்காது என்று கணக்குப் போட்டவர்களும் ஆருடம் கூறியவர்களும் உண்டு.இன்று திராவிடர் கழகத்தினுடைய செயல்பாடுகள் பற்றி தங்களுடைய மதிப்பீடு என்ன?

பதில்: ஆருடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதுபோலவே இந்த ஆருடமும் பொய்த்துவிட்டது. அதற்கு அடையாளமாக தந்தை பெரியாரவர்கள் விட்டுச் சென்ற கொள்கைகளை அவர்களது மறைவிற்குப் பிறகும் தளபதி வீரமணி அவர்கள் செம்மையாகச் செயல்படுத்திவருகிறார். எனது இளவல் தளபதி வீரமணி தமக்கே உரித்தான ஊக்கம், உழைப்பு, விடாமுயற்சி, தியாகம், பிரச்சினைகளில் தீவிரமாக ஈடுபடும் துடிப்பு, இவற்றுடன் எழுச்சியாக அவர் செயல்பட்டு வருகின்ற காரணத்தால் தந்தை பெரியார் அவர்களின் இலட்சியங்களை தளபதி வீரமணி நிறைவேற்றித் தீருவார் என்பதிலே எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

தமிழ் மக்களுக்கு வேண்டுகோள்

கேள்வி: தந்தை பெரியாரின் 107ஆவது ஆண்டு பிறந்தநாளிலும், விடுதலைப் பொன்விழா ஆண்டிலும், “அறிஞர் அண்ணாவினுடைய பிறந்த நாளிலும் தமிழினப் பெருமக்களுக்குத் தங்களுடைய வேண்டுகோள் யாது?

பதில்: தந்தை பெரியாருடைய 107ஆவது ஆண்டு பிறந்த நாளில் ‘பெரியாரைத் துணைக்கொளல்’ என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றை நினைவுபடுத்தவேண்டும்.

‘விடுதலை’ இதழின் பொன்விழாவில் ‘தனித்தமிழ் ஈழம் விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வினை கூட்டுவோம்.

அண்ணா பிறந்தநாள் விழாவில் அண்ணா வழியில்.

கேள்வி கேட்பவர்: மிக்க நன்றி!

கலைஞர்: நன்றி!

பேட்டி கண்ட நாள்: 26.8.1985

பேட்டி கண்டவர்: கவிஞர் கலி.பூங்குன்றன். உடன் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் இருந்தார்கள்.

இடம்: சென்னை கோபாலபுரம் – கலைஞர் இல்லம்.

-விடுதலை நாளேடு, 2.6.25

வியாழன், 17 ஜூலை, 2025

தமிழ்நாட்டில் இல்லை, பீகாரில்! பார்ப்பனர்களுக்கு எதிரான அறிவிப்புப் பலகைகள்! பார்ப்பனர்களை வைத்து வீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை: கிராம மக்கள் முடிவு!


புதுடில்லி, ஜூலை 2  பீகாரில் உள்ள சில கிராமங்களில் பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடத்தத் தடை விதித்து அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது, உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாகலாட்சேபகர் மீதானத் தாக்குதல் எதிரொலியாகக் கருதப்படுகிறது.

பார்ப்பனர்களுக்குத் தடை

பீகார் மாநிலம், மோதிஹாரி மாவட்டத்தின் அடாபூரிலுள்ள திகுலியா கிராமத்தின் பல இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ‘‘இந்தக் கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட சடங்குகள் செய்வதற்குப் பார்ப்பனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது! பிடிபட்டால், அவர்களை அழைத்த குடும்பத்தினர் பஞ்சாயத்தால் தண்டிக்கப்படுவீர்கள்’’ என எழுதப்பட்டுள்ளது.

பார்ப்பனச் சமூகத்தின் அர்ச்சகர்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சடங்குகளை செய்பவர்களுக்கு  எதிரான இந்த முடிவு அடாபூரின் திகுலியா கிராமப் பஞ்சாயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது, உ.பி.யில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  கதாகலாட்சேபகர் முகுந்தமணி சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் தாக்கப்பட்டதன் எதிரொலியாகும்

உத்தரப்பிரதேசத்தில் கதாகலாட்சேபகர் முகுந்த்மணி சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் தாக்கப்பட்டனர். இதனிடையே, முகுந்த்மணியின் தலைமுடியை மொட்டையடித்த கும்பலில் 4 இளைஞர்கள் கைதாகியுள்ளனர். பார்ப்பனர் அல்லாத முகுந்தமணி யாதவ் கதாகலாட்சேபம் செய்யக் கூடாது என்ற புகார், அந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்க்கட்சியான சமாஜ் வாதியின் தலைவர் அகிலேஷ் உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர்.

பார்ப்பனரல்லாதோர் கதாகலாட்சேபம் செய்வதன் மீது ஆதரவாகவும், எதிராகவும் ஆன்மிகவாதிகளும் கருத்துகளைக் கூறியிருந்தனர்.

உத்தரப்பிரதேச சமூக அரசியல் பிரச்சினையாக உருவெடுத்த இச்சம்பவத்தின் தாக்கம், பீகாரிலும் பிரதிபலித்துள்ளது. உத்தரப்பிரதேச எட்டாவா நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திகுலியா கிராம வாசிகள் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர். திகுலியா கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இந்த அறிவிப்புப் பலகை எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் பல மின் கம்பங்களிலும் பார்ப்பனப் பண்டிதர், பூசாரிகளுக்கு எதிரான இதே வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இதை விட ஒரு படி அதிகமாக, பல கிராமவாசிகள் தங்கள் வீடுகளுக்கு முன்புறத்திலும் இதுபோன்ற அறிவிப்புகளை வைத்துள்ளனர். திகுலியா கிராமத்தில் பெரும்பாலான மக்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். இந்தக் கிராமத்தில் பார்ப்பன மக்கள் வசிக்கவில்லை. இருப்பினும், பார்ப்பன மக்கள் வசிக்கும் பல கிராமங்கள் அருகிலேயே உள்ளன.

அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்ட பிறகு, பார்ப்பனர்கள் திகுலியா கிரமத்திற்குள் வருவதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய், 3 ஜூன், 2025

கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா

 

கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை தமிழர் தலைவர் வெளியிட்டார் : பேரக் குழந்தைகள் இயக்கத்திற்கு நன்கொடை

விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை அவருடைய பெயரன்கள், பெயர்த்திகளான வியன், அகரன், மகிழன், ஆருத்ரா, யாழினி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். மேலும் விழா மலரினை நடிகர் நாசர், விஜயா தாயன்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.   நிகழ்வின் மகிழ்வாக பெயரன்கள், பெயர்த்திகள் இணைந்து பெரியார் உலக நிதியாக ரூ.10,000த்தை வழங்கினர்.

சுயமரியாதைச் சுடரொளி’ பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா

 

புதுமை இலக்கியத் தென்றல் 1042ஆவது சிறப்பு நிகழ்வு ‘சுயமரியாதைச் சுடரொளி’ பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா

விடுதலை நாளேடு
தமிழ்நாடு

தமிழர் தலைவர்
பங்கேற்றுச் சிறப்புரை

சென்னை, மே 27 சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி. சபாபதி நூற்றாண்டு விழா நேற்று மாலை (26.5.2025)  சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

புதுமை இலக்கியத் தென்றல் 1042ஆவது நிகழ்வாக நடைெபற்ற இவ்விழாவில் அவ்வமைப்பின் தலைவர் பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் வரவேற்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இவ்விழாவிற் குத் தலைமை வகித்து உரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர் உரை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையில், புதுமை இலக்கியத் தென்றல் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் வரலாற்று முத்திரை பதிப்பவையாகும். அந்த வகையில் இந்த நூற்றாண்டு விழாவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

தொடக்கத்தில் பி. சபாபதி அஞ்சல் துறையில் போஸ்ட்மேனாகப்  பணி செய்தவர். ஒரு நாள் பணி முடித்துத் திரும்புகையில் தந்தை பெரியார் அவர்களது உரையைக்  கேட்டதால் சிந்தனை வளம் பெற்று இன்றைக்கு அவரது நூற்றாண்டு விழா நடத்துமளவுக்கு உறுதியான கொள்கையாளராக வாழ்ந்தவர். தந்தை பெரியாரது உரையை கேட்டால், படித்து வந்தால் அவர்கள் தெளிவுற்றவர்களாக மாறுவார்கள் என்பதற்கு சபாபதி  நல்ல உதாரணம் ஆவார்.

தமிழ்நாடு

கல்வியில் சிறந்தவர்கள்

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பார்கள். 5 பெண் மக்கள், 2 ஆண்கள் என அத்தனைப் பேரையும் உயர் கல்வி படிக்க வைத்து சிறந்தவர்களாக்கியப் பெருமைக்குரியவர். அவரது பேரப் பிள்ளைகள் உள்பட கல்வியில் சிறந்தவர்களாக  உள்ளனர். கல்வியறிவு ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதை உணர்ந்தவர் சபாபதி. கல்விக் கண்ணைத் திறந்தவர் காமராசர் என்பதால்தான் அவரைத் தந்தை பெரியார் உயர்த்திப் பிடித்தார்.

பி.சபாபதி மறைவுக்குப் பின்பும்கூட அவரது வாழ்விணையர் இந்திராணி பெரியார் திடலுக்குத் தொடர்ந்து வந்தவர். தந்தை பெரியார் வழியில் நடந்ததால் வெற்றி பெற்ற குடும்பம் இந்தக் குடும்பம். அத்தகைய சிறப்புக்கு இந்திராணி அவர்களது சலியா உழைப்பும் முக்கிய காரணமாகும்.  தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடிப்படையில் வாழ்ந்து வழிகாட்டியாய், ஒளியாய்த் திகழுகின்ற கொள்கையாளருக்கு வீர வணக்கம் செலுத்துவோம் என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு

தமிழர் தலைவர் சிறப்புரை

கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

சுயமரியதைச் சுடரொளி, எடுத்துக்காட்டான கொள்கை யாளர் சபாபதி அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் பிறந்தவர். காஞ்சிபுரம் என்றாலே நல்லதும் உள்ளது, கெட்டதும் உள்ளது. சங்கராச்சாரியார் களது புகலிடமாக உள்ள அதே காஞ்சிபுரத்தில்தான் அறிஞர் அண்ணா அவர்களும் பிறந்தார்கள்.

குறிக்கோளோடு வாழ்ந்தவர்

தந்தை பெரியாரது கொள்கைகளை ஏற்று வாழ்ந்த சபாபதி அவர்கள் குறிக்கோளோடு வாழ்ந்து – பிள்ளைகள் அனைவரையும் நல்ல முறையில் படிக்க வைத்து எடுத்துக்காட்டான  முறையில் வாழ்ந்தவர். பக்தர்களை எடுத்துக் கொண்டால் நீண்ட பல ஆண்டுகள் – 100ஆண்டுகள் வாழ்ந்தாலும்கூட ‘அவன் விட்ட வழி’ என்று கடவுளின்மீது பழி போட்டு தங்களது பொறுப்பினை உணராதவர்களாக இருப்பார்கள்.

சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து – பெரியார் கொள்கையை ஏற்று கெட்டுப் போனேன் என்று எவராலும் சொல்ல முடியுமா? தந்தைபெரியாரது தொண்டால் நேரடியாக – மறைமுகமாகப் பயன் பெறாத குடும்பம் என்று இந்தத் தமிழ்நாட்டில் எந்தவொரு குடும்பமாவது இருக்க முடியுமா?

திராவிட மாடல் ஆட்சியில்….

இன்றைக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பார்ப்பனர்கள்கூட பாதுகாப்போடு பத்திரமாக உள்ளார்கள். மகளிர் – பார்ப்பன பெண்கள் உள்பட  அனைவருக்கும் இந்த ஆட்சி  பாதுகாப்பாக உள்ளது. 50– 60 ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனியே இருந்த அக்கிரகாரங்களில் வெள்ளைச் சேலை அணிந்து – மொட்டைத் தலையோடு பார்ப்பனப் பெண்கள் ஏராளமாக இருந்ததுண்டு. இந்த சுயமரியாதை இயக்கத்தின்  வீரியமான பணிகளால் அந்த நிலை மாறியது. இன்றைக்கு ‘மொட்டைப் பாப்பாத்திகள்‘ எனப்பட்டவர்களைக் காண முடிகிறதா?

‘சாபம்’ குறித்துக் கலைஞர்

தருமபுரியில் தந்தை பெரியார் சிலை சிறப்பு விழா நடைபெற்றது. அறிஞர் அண்ணா அவர்கள் திறப்பதாக இருந்த சிலையை அவர் மறைவுற்றதால்– தான் திறக்க நேரிட்டதை நினைத்து மன நெகிழ்ச்சியோடு முதலமைச்சர் கலைஞர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றுகையில்,

‘நான் மாணவப் பருவத்தில் தந்தை பெரியார் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து பணியாற்றிய அந்தக் கால கட்டத்தில் பலரும் என்னைப் பார்த்து ‘நீ உருப்படுவியா’ என்று ‘சாபம்’ விட்டார்கள். ஆனால் இன்றைக்கு நான் உருப்பட்டிருக்கின்றேனா இல்லையா – என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்’’ என்று குறிப்பிட்டார்.

கொள்கைக் குடும்பமாக…

அதே போன்று கொள்கைக் குடும்பமாக, நல்லதொரு பல்கலைக் கழகமாக மேம்பட்டுத் திகழ்வது சபாபதி  அவர்களது குடும்பமாகும். தந்தை பெரியார் உரையைக் கேட்டது ஒன்றே அவரை சிந்தனையாளராக, சாதனையாளராக மாற்றியது. எழுதப் – படிக்கத் தெரியாத தம் வாழ்விணையர் இந்திராணி அவர்களுக்கு எழுதவும் – படிக்கவும் கற்றுக் கொடுத்தவர் சபாபதி அவர்கள்.

இன்னுஞ் சொல்வதென்றால், சபாபதியைவிட அதிகமாகப் பாராட்டப்பட வேண்டியவர் இந்திராணி அம்மையார் ஆவார். சபாபதி மறைவுக்குப் பின்பும் கூட, கழக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு, கழக ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று, போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்.

ச. முகிலரசை இழந்த இந்தக் குடும்பத்தினர், தொடர் இழப்புக்கு ஆளான போதும்கூட அவற்றைத் தாங்கிக் கொண்டு அனைவருமே கொள்கைக் குடும்பத்தினராக வாழ்ந்து வருவது சிறப்புக்கும், பாராட்டுக்குமுரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது. பி. சபாபதியின் மகள் பொறியாளர் ச. இன்பக்கனிக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டுத் ெதரிவித்தார்.

பங்கேற்றோர்

இந்நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், மாநில கழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, மோகனா வீரமணி, பொதுக் குழு உறுப்பினர்கள் சி. வெற்றிச்செல்வி, தங்க. தனலட்சுமி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வட சென்னை மாவட்ட செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, மாநில கழக இளைஞரணி துணைச்செயலாளர் சோ. சுரேஷ், புதுமை இலக்கியத் தென்றல் நெறியாளர் புலவர் வெற்றியழகன், செயலாளர் வை. கலையரசன், பொருளாளர் மு. இரா. மாணிக்கம் மற்றும் பி. சபாபதி – இந்திராணி குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் அரங்கம் நிறைய பங்கேற்றனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

நிறைவாக பொறியாளர் ச. இன்பக்கனி நன்றி கூறினார்.

வெள்ளி, 16 மே, 2025

 

புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் அனைத்து ஆங்கில நூல்களிலும் சமஸ்கிருத– ஹிந்தி பெயர்கள்!

விடுதலை நாளேடு


பெங்களுரு, ஏப்.21 புதிய கல்வி கொள்கையில் கீழ் வரும் அனைத்து ஆங்கில நூல்களிலும் சமஸ்கிருத ஹிந்தி பெயர்கள்! பாரம்பரியத்தைக் காப்பதற்காக மாணவர்களுக்கு எளிதில் புரிவதற்காக இந்த முடிவாம்.

புதிய கல்விகொள்கையின் கீழ் இந்த ஆண்டு முதல் ஒன்றிய கல்வி அமைச்சரகம் ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் பாடநூல்களை சமஸ்கிருத ஹிந்தி மயமாக்கி உள்ளது. அதிலும் ஆங்கிலத்தில் உள்ள சொற்களை தவிர்த்து ஹிந்தி சமஸ்கிருத சொற்களை ஆங்கிலத்தில் எழுதி உள்ளது,

சமஸ்கிருதத்தை ஹிந்தியைத் திணிக்கும் மோசமான நடவடிக்கை ஆகும், மேலும் தமிழ்நாட்டின் வழி காட்டுதலின் பேரில் பல மாநிலங்கள் மூன்று மொழிக் கொள்கையை எதிர்த்துப் போராடும் நேரத்தில் வெளிவந்துள்ளது.

ஹிந்தி அல்லாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

இதுவரை, ஒன்றிய அரசின் மொழி நூல்கள் எப்போதும் அதே மொழியில் தலைப்புகளைக் கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு வரை 6 மற்றும் 7ஆம் வகுப்புக்கான பழைய ஆங்கில பாடப்புத்தகங்கள் முறையே ஹனிசக்கிள் மற்றும் ஹனிகோம் என்று தலைப்பிடப்பட்டிருந்தன.

இரண்டு வகுப்புகளுக்கான புதிய ஆங்கில மொழி பாடப்புத்தகங்களின் தலைப்பு பூர்வி, இது ஹிந்தி சொல் “கிழக்கு” என்ற பொருளுடன், சமஸ்கிருத சொற்களில் வரும் ராகத்தில் ராகத்தின் பெயரும் ஆகும்.

1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில மொழி பாடப்புத்தகங்கள் மிருதங்க் என்றும், 3 மற்றும் 4ஆம் வகுப்புகளுக்கானவை சந்தூர் என்றும் மறுபெயரிடப்பட்டு உள்ளன. இரண்டுமே இசைக் கருவிகளின் பெயர்கள்.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற பாடங்களுக்கு, முன்னணி பாடப்புத்தக தயாரிப்பு அமைப்பு தனது புத்தகங்களை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது பதிப்புகளில் வெளியிட்டது.

இதுதொடர்பாக ஒன்றிய கல்வி பாடநூல் தயாரிப்பு குழு வில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் கூறுகையில், இந்த புத்தகங்கள் பாரம்பரியமாக அவை வெளியிடப்பட்ட மொழிக்கு ஏற்ப ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் தலைப்புகளைக் கொண்டிருந்தன.

6ஆம் வகுப்புக்கான முந்தைய கணித புத்தகம் ஆங்கில பதிப்பிற்கு Mathematics என்றும், ஹிந்தி பதிப்பிற்கு Ganit என்றும், உருது பதிப்பிற்கு Riyazi என்றும் தலைப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், கடந்த ஆண்டு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு பதிப்புகளுக்கும் தலைப்பை கணித பிரகாஷ் என மாற்றியது.

அவர்கள் என்ன சாதிக்க விரும்பு கிறார்கள் என்பது தெளிவாக இல்லை’’ என்று ஓய்வுபெற்ற பேராசிரியர் கூறினார்.

6ஆம் வகுப்பு ஆங்கில மொழி பாடப்புத்தகத்தின் முன்னுரையில் அதன் இயக்குநர் தினேஷ் பிர சாத் சக்லானி மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி கபூர் போன்றோர் ‘‘புத்தகத்தைப் பற்றி’’ என்ற அறி முகப் பகுதி, ஏன் அது பூர்வி என்ற ஹிந்தி தலைப்பைக் கொண்டுள்ளது என்பது பற்றி குறிப்பிடவில்லை.

‘‘பூர்வி தனது உள்ளடக்கங்களில் இந்திய அறிவு அமைப்புகளின் பெரும் கருவூலத்திலிருந்து துணுக்குகளை, இந்தியாவின் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை இணைத்து, சுற்றுச்சூழல் உணர்திறன், பாலின சமத்துவம், டிஜிட்டல் திறன்கள் போன்ற மதிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது’’ என முன்னுரை கூறுகிறது. சில ஆங்கில வழி புத்தகங்கள் ஹிந்தி படையெடுப்பிலிருந்து விடு பட்டுள்ளன. 6ஆம் வகுப்புக்கான சயின்ஸ் என்ற அறிவியல் நூல்களின் பெயர்களும்  இப்போது கியூரி யாசிட்டி என்ற புதிய ஆங்கில தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது,

6ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறி வியல் பாடப்புத்தகத்தின் ஆங்கில பதிப்பு ‘‘எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியான்ட்’’ என்ற தலைப்புடன் வருகிறது, அதே நேரம் ஹிந்தி பதிப்பு ‘‘சமாஜ் கா அத்யயன்: பாரத் அவுர் உஸ்கே ஆகே’’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

2006இல் என்.சி.ஆர்.டி. பாடப்புத்தக மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இருந்த டில்லி பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் அபூர்வானந்த், ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்புகளை வழங்கும் நடைமுறையை கேள்விக்குள்ளாக்கி னார்.

‘‘இது ஹிந்தி காலனியாதிக்கம். என்.சி.ஆர்.டி. இதை மிகவும் கீழ்த்தர மான முறையில் செய்கிறது,’’ என்று அவர் கூறினார். என்.சி.ஆர்.டி. தலைப்பு களை வழங்கும் விதம் தமிழ்நாட்டின் மொழி கொள்கைக்கான போராட்டம் சரியென நிரூபித்துள்ளது.

இது ஹிந்தி பேசாதமக்களுக்கு குறுக்கு வழியில் ஹிந்தியை திணிக்கிறது

அய்.என்.யூ.விலிருந்து ஓய்வு பெற்ற மொழியியல் பேராசிரியர் அன்விதா அப்பி கூறுகையில்: ‘‘ஒரு புத்தகத்தின் தலைப்பு அதன் உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டும். பூர்வி அல்லது சந்தூர் போன்ற தலைப்புகள் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. கிழக்கு அல்லது சமஸ்கிருத ராகம் என்பதை ஆங்கில மொழிப்பாட நூலில் தலைப்பாக கொடுத்து என்ன கூறவருகிறார்கள்?’’

‘‘மேலும், கற்பித்தல் மொழி ஆங்கிலம் எனும்போது, தலைப்பு ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.’’

கணித பிரகாஷ் என்பதில் உள்ள ‘கணித’ போன்ற சில ஹிந்தி வார்த்தைகளின் சரியான உச்சரிப்புகளை ஆங்கில புத்தகங்க ளின் ஹிந்தி தலைப்புகள் ரோமன் எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளன. ‘‘ரோமன் எழுத்து முறை பல்  அண்ண ஒலி (dental nasal) மற்றும் பின்வளைவு அண்ண ஒலி (retroflex nasal) ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுவதில்லை. இது  ‘ண’ (கணிதத்தில்) என்பதற்கு தவறான உச்சரிப்பை தருகிறது,” என்று அவர் கூறினார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்பு களை வழங்குவதற்கான கார ணங்களை கேட்டு என்.சி.
ஆர்.டி. இயக்குநருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அவரது பதில் எதிர்பார்க்கப்படுகிறது. என்.சி.ஆர்.டி. 2020ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப 2023 முதல் புதிய பாடப்புத்தகங்களின் தொடரை வெளியிட்டு வருகிறது.

2023 இல் 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்த கங்களை வெளியிட்டது, 3 மற்றும் 6ஆம் வகுப்புகள் 2024இல் புதிய புத்தகங்களைப் பெற்றன. இப்போது 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான புதிய புத்த கங்களை வெளியிடுகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை முழுமையாக சமஸ்கி ருத ஹிந்தி மயமாக்கம் நடந்துள்ளது

எடுத்துகாட்டாக  குடும்பச் சங்கிலி (பரம்பரை) என்ற ஆங்கில நூலில் பர் தாதா, பர் தாதி, போத்தா, போத்தி, பர் போத்தா, பர்போத்தி, தாதா, தாதி, நானா நானி, என்று எழுதி பின்னர் பாதர் மதர் என்று பெயரளவிற்கு ஆங்கிலத்தில் பெயர் கொடுத்துள்ளது. பிறகு பேட்டா பேட்டி என்று மீண்டும் ஹிந்தியிலேயே கொடுத்துள்ளது.

மேலும் உடற்கல்வி ஆங்கில நூலுக்கு கேல் யோகா (விளையாட்டு யோகா) என்றும் தொழிற்கல்வி நூலான வெகேசனல் ஆங்கில பாடநூலுக்கு கவுசால் போத்(துடிப்பான கல்வி) என்று ஓவியம் இதர கைவினை கலைப்பொருள் தயாரிக்கும் பாட நூலிற்கு பன்சுரீ(புல்லாங்குழல்) என்றும் பெயர் வைத்துள்ளனர்

ஆங்கில நூல் முழுவதுமே ஹிந்தி மற்றும் சமஸ்கிருத சொற்கள் 60 விழுக்காடு ஹிந்தியிலேயே எழுதப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர்ப் பலகை தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் பலகை உடனடியாக அகற்றம்


விடுதலை நாளேடு


 சென்னை, ஏப்.23- ரயில்வே அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர் வைத்திருப்பதற்கு தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் 21.4.2025 அன்று, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட
எம்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார். இதில்
எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி சோமு, சசிகாந்த் செந்தில், கதிர் ஆனந்த், கிரிராஜன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எம்.பி.க்கள், தங்கள் பகுதிகளில் ரயில்வே சார்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டங்கள், புதிய திட்டப் பணிகள், பயணிகள் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பி பேசினார்கள். மேலும், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலகங்களுக்கு தமிழில் பெயர் வைக்காமல் ஹிந்தியில் பெயர் வைத்திருப்பது ஏன்? என்று கேட்டு அதற்கு தங்களது கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

கண்டனம்

பின்னர், டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தாம்பரம் ரயில் நிலையம் ஒரு முனையமாக இருக்கிறது. ஆனாலும் அங்கு 7 விரைவு ரயில்கள் நிற்காமல் செல்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுத்து தாம்பரத்தில் ரயில்கள் நிறுத்தப்பட வேண்டும். அம்பத்தூர் ரயில் நிலையத்திலும் விரைவு ரயில்களை நிறுத்தி செல்ல வேண்டும். ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின் பகுதியிலேயே கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.

வந்தே பாரத் ரயிலில் உள்ள சில குறைபாடுகளை தீர்ப்பதாக ஏற்கனவே ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் ஹிந்தியில் எழுதியிருக்கிறார்கள். இது கண்டனத்துக்குறியது.

இதை நேரடியாக கண்டித் துள்ளோம். ஆளுநருக்கு உச்சநீதி மன்றமே தீர்ப்பு கொடுத்தும் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துகிறார். நியாயமாக இருப்பவர்கள் இப்படி நிச்சயம் செய்ய மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் கட்டாயம்

தொடர்ந்து, தயாநிதி மாறன் எம்.பி. கூறுகையில், ‘தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர் இருப்பது தொடர் பிரச்சினையாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். எங்களின் கோரிக்கை மீது கண்டிப்பாக பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்’ என்றார்.

பெயர்ப் பலகை பார்த்து கொந்தளிப்பு

ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. எம். பி. கிரிராஜன் வந்தார். அப்போது, நுழைவு வாயில் பகுதி யில் ‘சுலையா, சுபாஷ், சுபோஜ்’ என்று வார்த்தைகள் இடம்பெற்றபலகை இருந்தது.

தமிழில் பெயர் வைக்காமல் ஹிந்தியில் இருப்பதை கண்டு கிரிராஜன் கொந்தளித்தார். அதை அகற்றும்படி அறிவுறுத்தினார்.இதனால், அந்தபெயர் பலகை உடனடியாக அகற்றப்பட்டது. பின்னர், அந்தப் பெயர் பலகையை கிரிராஜன் தன்னுடன் எடுத்துச் சென்று ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கிடம் காண்பித்து கண்டனத்தை பதிவு செய்தார்.