சனி, 7 பிப்ரவரி, 2026

ஜாதியப் பாகுபாட்டைத் தடுக்கும் யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து வடமாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் போராட்டம்!

 பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்!

புதுடில்லி, ஜன. 28 பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் சமத்துவத்தை மேம்ப டுத்துதல், ஒழுங்குமுறைகள், 2026’’ (Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026) என்ற புதிய விதிமுறைகளை எதிர்த்து பார்ப்பன மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

புதிய யுஜிசி விதிமுறைகள்

உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி ரீதியான பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு  பல்கலைக்கழக மானியக்குழு புதிய விதிமுறைகளை கடந்த வாரம் அறி முகப்படுத்தி உடனடியாக இது அமலுக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில்  இந்த விதிமுறைகளால் உயர்ஜாதி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்களாம்! இந்த விதிமுறையை உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறி உயர்ஜாதி யின மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

‘‘புதிய விதிமுறைகளின்படி ‘‘ஜாதி பாகுபாடு’’ என்பது  தழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நடப்பவை மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது. உயர்ஜாதி மாணவர்களாக நாங்களும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறோம்; எங்களுக்கு எதிராக நடப்பவை குறித்து இந்த விதிமுறைகள்படி  புகார் அளிக்க முடியாது’’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

‘‘ஒவ்வொரு கல்லூரியிலும் அமைக்கப்பட வேண்டிய ‘ஈக்விட்டி கமிட்டியில்’ உயர்ஜாதி மாணவர்களுக்கு  இடம் அளிக்கப்படவில்லை.  2025 இல் வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையில் ‘பொய் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற விதி முறை இருந்தது;  ஆனால், தற்போது வெளியிடப்பட்ட இறுதி விதிமுறைகளில் அந்த அம்சம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இது தவறாகப் பயன்படுத்தப்படலாம்’’ என உயர்ஜாதி  மாணவர்கள் அஞ்சு கின்றனராம்!

பல்கலைக்கழக மானியக்குழு இந்த விதிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று கூறி டில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் அரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வரு கின்றன. இவர்களின் முக்கிய வாதங்கள் வருமாறு:

‘‘இந்த விதிமுறைகளால் மாண வர்களுக்குள் நடக்கும் சிறிய உரை யாடல்கள் கூட பெரிதுபடுத்தப்பட்டு  பொதுப்பிரிவு மாணவர்களை ‘‘குற்ற வாளிகளாகவே’ சித்தரிக்கின்றன.  இதன் மூலம் கல்வி வளாகம் ஜாதிய அமைப்புகளின் கூடாரமாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாகவும் மாறிவிடும்  ஏற்கெனவே உள்ள சமூகப் பிரிவினையை இந்த புதிய விதிகள் மேலும் அதிகப்படுத்தும்’’ என்று அந்த உயர்ஜாதி மாணவர்கள் கூறுகின்றனர்.

மாவட்ட நீதிபதி
விதிமுறையை எதிர்த்துப்
பதவி விலகலாம்!

இந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில்  மாவட்ட நீதிபதி அலங்கார் அக்னிஹோத்ரி, கடந்த ஜனவரி 26 (குடியரசு நாளில்) பதவி விலகல் கடிதம் வழங்கினார்.  அவரது 5 பக்க பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காரணங்கள்:

புதிய யுஜிசி விதிமுறைகள் ‘‘கருப்புச் சட்டம்’’ போன்றவை என்றும், இது பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, குறிப்பாக பார்ப்பனச் சமூகத்திற்கு எதிரானது என்றும் அவர் குற்றம் சாட்டி யுள்ளார். ‘‘பல்கலைக்கழகங்களில் மற்றும் கல்வி நிலையங்களில் பார்ப்பன மாணவர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றனர். அவர்கள் தலைமுடிக் குடுமியைப் பிடித்து இழுக்கிறார்கள். அவர்களைத் திருநங்கைகள்  என்று கேலி செய்கின்றனர்.  பார்ப்பன மாணவர்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் தனது மனதைப் புண்படுத்தியதாகக்’’ குறிப்பிட்டுள்ளார். புதிய விதிமுறைகள் பார்ப்பனச் சமூகத்தின் பேச்சுரிமை மற்றும் அவர்களின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்கி அவர்களைக் குற்றவாளிகள் போலவும், சமூகத்தில் ஜாதிப் பாகு பாட்டை விதைக்கும் நபர்களாகவும் சித்தரித்து மக்களிடமிருந்து பார்ப்பன மாணவர்களை  பிளவுபடுத்துவதாக உணர்வதால், அதற்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் பதவி விலகுவதாக அவர் கூறியுள்ளார்.

‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை’ என்பார்களே, அது இதற்கு மிகவும் பொருத்தம்.

இவர்கள் ஏன் படபடக்க வேண்டும்?

ஜாதிப் பாகுபாட்டை பார்ப்பன மாணவர்கள் பார்ப்பதில்லை என்பது உண்மையானால், இவர்கள் ஏன் படபடக்க வேண்டும்?

ஒரு மாவட்ட நீதிபதியே பார்ப்பன உணர்வுடன், பதவி விலகியுள்ளார் என்றால், பார்ப்பனர்களின் அந்த ஆதிக்க உயர்ஜாதி மனப்பான்மை அகலவில்லை என்பதைப் பச்சையாக வெளிப்படுத்துகிறதே!

- விடுதலை நாளேடு,28.01.26

கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு



தமிழ்நாடு

சென்னை, பிப்.7 உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3.4.2025 அன்று சட்டமன்றத்தில்  விதி எண் 110-இன் கீழ் சென்னையில் கார்ல் மார்க்ஸ்சுக்கு புதிதாக உருவச்சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.

அதன்படி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சென்னை கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் உருவச்சிலையை நேற்று (6.2.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கார்ல் மார்க்ஸ்சின் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை. இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்று மில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது” என உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவு டைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொதுநூலக வளாகத்தில் நிலைகொண்டது. நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக் கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் ‘‘திராவிட மாடல்’’ என அதில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை நாளேடு, 7.2.26

பெரியார் என்றால் பார்ப்பனர்கள் பதறுகிறார்கள் – பெரியார் இன்னும் இவர்களைப் பதறடித்துக் கொண்டே இருப்பார்!




* நாடாளுமன்றத்தில் கலைஞானி கமல்ஹாசன் பேசியதில் என்ன குற்றம்?  தந்தை பெரியார் கூறிய கருத்தைத் திரித்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
* தந்தை பெரியார் கூறுவதை எல்லாம் ஒப்புக் கொள்கிறார்களா?  தமிழை நீஷப் பாைஷ என்றும், சமஸ்கிருதத்தைத் தேவ பாைஷ என்றும் கூறுவோர் யார்?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினருக்குத் தமிழ்மீதும், தமிழர்மீதும் இருப்பது வயிற்றெரிச்சல்! தந்தை பெரியாருக்கு இருப்பதோ தாய்க் கோழியின் எரிச்சல்!

மாநிலங்களவையில் ‘‘கலைஞானி’’ கமல்ஹாசன் மிகச் சரியாகத் தான் பேசி இருக்கிறார். தந்தை பெரியாரைப்பற்றி திரித்துப் பேசிய,   நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  முதல் பிஜேபியினர் அனைவரும் பதறுகின்றனர். பெரியார் அந்தக் கூட்டத்தை இன்னும் பதறடித்துக் கொண்டுதான் இருப்பார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாடாளுமன்ற மாநிலங்களவையில், தனது முதல் ‘கன்னி’ உரையைச் (Maiden Speech) சிறப்பாக நிகழ்த்தியிருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்   ‘‘கலைஞானி’’ கமல்ஹாசன் அவர்கள். தன்னுடைய உரையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காந்தியார் உள்ளிட்டோரைத் தன்னுடைய ஆசான்களாகவும், தாத்தா, தந்தையராகவும் முன்னிறுத்தி அவர் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கதாகும்.

நிதி அமைச்சருக்குக் கமல்ஹாசன் எதிர்ப்பு!

எஸ்.அய்.ஆர்., நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தன்னுடைய உரையில் குறிப்பிட்ட தோழர் கமல்ஹாசன், கடந்த ஆண்டு 2025 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆற்றிய உரையில் தமிழ் பற்றித் தெரிவித்த கருத்துகளுக்குக் கடும் மறுப்பையும் பதிவு செய்துள்ளார்.

‘தமிழன் பிச்சையெடுக்க மாட்டான்; அதிலும் உங்களிடம் பிச்சையெடுக்க மாட்டான். பிச்சையெடுத்துப் பழக்கப்பட்டவர்கள், அது உதவாதென்று, பின்னர் உண்டியலை நீட்டியது வரை’, தன் கோபத்தை நாடறிய வெளிக்காட்டி அமர்ந்தார் கமல்ஹாசன்.

கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பேசியது அவருடைய கருத்தில்லை என்றும், பெரியாரின் கருத்தையே அவர் எடுத்துக் காட்டியதாகவும் பா.ஜ.க.வினர் ஊடகங்களில் விளக்கமளிக்கின்றனர்.

தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடாமலேயே நிதியமைச்சர் அம்மையார் பேசினாலும்   எந்தச் சூழலில் அவர் பெரியாரைத் துணைக்கழைத்தார்?

ஒன்றிய கல்வி அமைச்சரின் சண்டித்தனம்!

தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தர முடியாது என்று சண்டித்தனம் செய்தார்; தேசியக் கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என்று கட்டாயப்படுத்த முயற்சித்தார். தமிழ்நாடு அதைக் கண்டித்தது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அதனைக் கண்டித்தனர்.

அதன் நியாயத்தை உணராத தர்மேந்திர பிரதான், தமிழர்களை ‘நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள்’ என்று அவையிலேயே பேசினார். கொதித்தெழுந்த நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களைக் கொச்சைப்படுத்திய அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், பதவி விலக வேண்டும் என்றும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள். அவரது வார்த்தைகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டாலும், அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

தந்தை பெரியார் பேச்சைத் திரித்துப் பேசிய நிர்மலா சீத்தாராமன்

அந்த நிலையில் தான், தாங்கள் பின்வாங்கிய கோபத்துடன், தர்மேந்திர பிரதானுக்கு வக்காலத்து வாங்கி நாடாளுமன்றத்தில் பேசினார் நிதியமைச்சர் அம்மையார். அதில், “தமிழ்நாடு போற்றிக் கொண்டாடும் ஒரு முக்கியமான தலைவர், நான் அவர் (பெரியார்) பெயரைச் சொல்லப் போவதில்லை, அவர் தமிழைப் பற்றி குறை சொல்லவில்லையா?  அவரை எப்படி இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்’’ என்று பேசிவிட்டு, ஆதாரம் காட்டுவதாகச் சொல்லி, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினரின் வழக்கத்தைப் போல, தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல், தந்தை பெரியார் எழுதியவற்றை முன் – பின் வெட்டிவிட்டு,  நடுவில் சில வரிகளை மட்டும் சுட்டிக் காட்டிப் பேசினார்.

காலம் காலமாக இந்துத்துவவாதிகள் ஓட்டித் தேய்ந்துபோன அதே பழைய கிராமபோன் தட்டை இவர் நாடாளுமன்றத்தில் ஓட்டினார். நாடாளுமன்றத்தில் பேசுபவர் கொஞ்சம் ஆதாரத்துடன், சரியான தரவுகளுடன் பேச வேண்டாமா? அவர் இரண்டு தேதிகளில் ‘‘விடுதலை’’யில் செய்தி வந்ததாகச் சுட்டிக் காட்டினார்.

வாட்ஸ் அப் வதந்திகளை நம்பும் பரிதாபத்துக்குரிய நிதி அமைச்சர்

27.11.1943 ‘‘விடுதலை’’யில் தந்தை பெரியார் எழுதியதாக எதையோ படித்தார். முடிந்தால் அம்மையார் அந்த நாள் ‘விடுதலை’யை எடுத்துக் காட்டலாமே! முடியாது. ஏனெனில், 1943 செப்டம்பர் மாதத்திலிருந்து விடுதலை ஏடு யுத்தப் பிரச்சாரத்திற்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் மீண்டும் அது பெரியாரின் கைகளுக்கு வருகிறது. ஆனால், வாட்ஸ் அப் வதந்திகளைப் பரப்புவோர் அதையே ஆதாரமாகக் காட்டி நாடாளுமன்றத்திலும் பேசி அதன் மாண்பைக் கெடுக்கலாமா?

மற்றொரு தேதியில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தை எடுத்துக் காட்டுகிறார். அதிலாவது ‘அறிவு நாணயம்’ இருக்க வேண்டாமா? ‘துக்ளக்’கில் வந்த ஒரு துண்டுப் பகுதியை எடுத்துப் படித்த அவர், அதிலேயே ‘தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடிய வில்லை’ என்று ஒரு ‘புலவர் பாடியிருப்பதாகப் பெரியார் சுட்டிக் காட்டியிருப்பதை’த் தமிழில் படித்துக்காட்டிவிட்டு, ஆங்கிலத்தில் அதைச் சொல்லும்போது, பெரியாரே அப்படிச் சொன்னது போல் திரித்துப் பேசினாரே! ஏன்?

தந்தை பெரியார் பேசியதை எல்லாம்
ஒப்புக் கொள்கிறார்களா?

‘பெரியார் பேசியதைத் தானே நிர்மலா அம்மையார் எடுத்துக்காட்டினார்’ என்று சொல்வோர், ‘மற்றொரு புலவரின் பாடலைத் தானே பெரியார் எடுத்துக்காட்டினார்’ என்ற உண்மையை மறைப்பதேன்? 16-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் என்பவர் எழுதிய தனிப் பாடல் ஒன்றைத் தானே பெரியார் சுட்டிக்காட்டுகிறார். அதை நியாயமாக எடுத்துச் சொல்வதில் என்ன தயக்கம்? அதைத் திரிப்பானேன்?

அதன் வரலாறு தெரியாதவர் இப்படிப் பேசுவது எவ்வகையில் நியாயம்?

‘தந்தை பெரியார் தமிழைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டார், அப்படிச் சொல்லிவிட்டார்; அதனால் தர்மேந்திர பிரதான் சொன்னது தவறில்லை’ என்ற தொனியில் தானே அந்த அம்மையார் பேசினார். அப்படியென்றால் பெரியார் பேசியதையெல்லாம் ஒப்புக் கொள்கிறார்களா? பெரியாரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அதே கட்டுரையில், பெரியார், ‘ஏன் தமிழ் இலக்கியங்களை ஏற்க மறுக்கிறேன்’ என்று எழுதுகிறாரே! இவர்கள் இப்போது தூக்கிக் கொண்டு வரும் அகஸ்தியரைக் கிழித்துப் போட்டிருக்கிறாரே! அவற்றைப் பற்றிப் பேசுவோமா?

பெரியாருக்கு யாரும் உரை எழுத வேண்டியதுமில்லை; விளக்கம் சொல்ல வேண்டியதுமில்லை. தந்தை பெரியாரின் எழுத்தை, பேச்சை முழுமையாகப் படித்தாலேயே அதற்கான காரண, காரியங்கள், நோக்கங்கள் (அவருக்கு உள்நோக்கம் எதுவுமில்லை; அவர் என்றும் வெளிப்படையானவரே, அவருடைய கருத்துகள் எல்லாம் வெளிப்படையானவையே!) அனைத்தும் எளிதில் விளங்கிவிடுமே!

தமிழர்கள்மீது தந்தை பெரியாருக்கு
இல்லாத அக்கறையா?

யார் தமிழர்களைப் பற்றிப் பேச, தமிழைப் பற்றிப் பேச அருகதை உடையவர்? ‘தமிழருக்காக நான் பலிகடா ஆகிறேன்’ என்று தன் 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாய் அலைந்து பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்ட பெரியாருக்குத் தமிழர்கள் மீது இல்லாத அக்கறையா? தமிழர்கள் வளர்ச்சி அடைய, பகுத்தறிவு பெற, மான உணர்வு பெற எவையெல்லாம் தடை என்று கண்டறிந்து, அவற்றைத் தகர்த்தெறிந்த தளகர்த்தர் அவர். தமிழர்கள் நல் வாழ்வு வாழத் தமிழும், ஆங்கிலமும் வேண்டும் என்று அவர் முன்மொழிந்ததைத் தானே அண்ணா சட்டமாக்கினார். அதனால் தானே இன்று தமிழர்கள் உலகம் முழுக்க அறிவியலில் வெற்றிக் கொடி நாட்டுகின்றனர்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். – பாஜ.க. காரர்கள் செய்வது என்ன? ஆங்கிலத்துக்குப் பதில் ஹிந்தியை, சமஸ் கிருதத்தைத் திணித்து தமிழர் தம் வளர்ச்சியைத் தடுத்து, மீண்டும் மனுவாதத்தின் பிடியில் தள்ள முயல்வது தானே அவர்களின் நிலைப்பாடு! அதற்குத் தடையாகத் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும், அவர்கள் தந்த சமூக நீதியும், கல்வியும் இருக்கிறது என்பதால் தானே இவற்றையெல்லாம் ஒழிக்க நினைக்கிறார்கள்.

தமிழை நீஷ பாைஷயாக்கி, தீட்டு மொழியாக்கி, சமஸ்கிருதத்தை – வடமொழி ‘‘தேவபாைஷ’’யாக்கிய பேதவாதிகள் ஆணவக்காரர்கள் யார்? மொழி மற்றும் சமத்துவத்தை ஏற்காதவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினருக்கு
தமிழ்மீதும், தமிழர்மீதும் வயிற்றெரிச்சல்!

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினருக்குத் தமிழ் மீதும், தமிழர் மீதும் இருப்பது வயிற்றெரிச்ச்சல்! தந்தை பெரியாருக்கு இருந்தது தாய்க் கோழியின் எரிச்சல்! முட்டையிட்ட கோழிக்குத் தானே வலி தெரியும். பார்ப்பனர்களுடனும் போராடி, அதைப் புரிந்துகொள்ளத் தமிழர்களின் அறிவுடனும் போராடி, படிப்படியாய்த் தமிழர்களைத் தூக்கி நிறுத்தியவருக்குத் தானே தடைகள் எங்கே என்று தெரியும். ‘‘தமிழின் வளர்ச்சிக்கும், தமிழர்தம் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பவை தமிழ் இலக்கியங்களே ஆனாலும், அவற்றை ஒழித்தாக வேண்டும்’’ என்ற பெரியாரின் சிந்தனை – ஒரு சமூக மருத்துவரின் சிந்தனை! நம்முடல் தான் எனினும், புற்று வந்த பகுதியை வெட்டி வீசுவதில்லையா? அழுகிப் போன திசுக்களை அடியோடு நறுக்கி எறிவதில்லையா? அப்படித்தான் பெரியாரும் – தமிழருக்கும், தமிழுக்கும் கேடு செய்தவற்றை ஒழிக்கச் சொன்னார் – தனக்கே உரிய அறுவைச் சிகிச்சை நிபுணரின் முடிவோடு!

ஈரோடு தமிழன்பன் கூறியதுதான்
நினைவிற்கு வருகிறது

மறைந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் சொன்னது போல, தந்தை பெரியார் நடத்தியவை யாவும் ‘அக்கறைக் கலவரங்கள்!’ ஒரு தாய்ப்புலி தன் குட்டியைக் கவ்வுவது போல தமிழர்களைக் கவ்விய கருணை மறவர் தந்தை பெரியார். அவரைத் திரித்தும், புரட்டியும் பேசுவதை ஒருபோதும் ஒப்ப முடியாது. கடந்த ஆண்டே இதற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க.துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் பதில் அளித்துவிட்டார்.

எனினும், ஓராண்டு கடந்தாலும் தன் தமிழ்க் கோபத்தைக் காட்டி, போலியாகத் தமிழர்கள் மீது அக்கறையுடன் நடிப்பவர்களுக்கு, நண்பர் கமல்ஹாசன் காட்டமாகப் பதில் அளித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டி யதைப் போல, தமிழன் பிச்சையெடுக்க மாட்டான். திராவிட இயக்கம் பிச்சையெடுக்க விடாது! அதிலும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பிச்சையை ஒரு நாளும் ஏற்காது. உரிமையைக் கேட்கும்; மக்களுக்கு உரிமை கொடுக்கும்; உடைமையைப் பொதுவாக்கும்.

“தமிழன் என்றொரு இனமுண்டு – தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடிய நாமக்கல் கவிஞர் அடுத்தடுத்த வரிகளில் அதைச் சரியாகவே விளக்குகிறார்.

“மானம் பெரிதென உயிர்விடுவான்; மற்றவர்க்காகத் துயர் படுவான்; தானம் வாங்கக் கூசிடுவான்; தருவது மேலெனப் பேசிடுவான்”

பிச்சை எடுப்பதுதான் பார்ப்பனர்களின் தர்மம் என்று அவாளின் மகா பெரியவாள் கூறியதை மறுக்கிறார்களா?

பூதானம், கோதானம், அன்னதானம், சொர்ணதானம் வாங்கியே பழக்கப்பட்டுவிட்டவர்கள் போலல்ல; ‘உண்டியலில் போடாதீர்கள் – அர்ச்சகர் தட்டில் போடுங்கள்’ கோயிலில் போய் பக்தர்களிடம், ‘தங்களவர்’களுக்காகச் சிறீவைகுண்டத்தில் ‘பரிந்துரை செய்தவர்கள்’ போலல்ல.

”ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று” என்பது பழந்தமிழர் மரபு.

பிக்‌ஷாந்தேகிகளுக்கு அது உகந்ததல்ல; அவர் களுக்குப் போடுங்கள் என்று பரிந்துரைப்போருக்கும் உகந்ததல்ல என்பதும் நமக்கு நன்கு தெரியும்.

மகா மகா பெரியவர் ‘‘பிராமணர்’’களுக்கு  என்ன அறிவுரை கூறுகிறார். ‘‘பிச்சையெடுத்தல் தான தர்மம் அதை விட்டு விட்டார்களே’’ என்று ‘தெய்வத்தின் குரலில்’ கூறினாரே  அதை   மறுக்கிறார்களா?

நண்பர் கமல்ஹாசனின் நாடாளுமன்ற முதல் உரை, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புரிய வேண்டியவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். அதனால்தான் பதறுகிறார்கள். தந்தை  பெரியார் இன்னும் இவர்களைப் பதறடித்துக் கொண்டிருக்கிறார்.

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

7.2.2026