வியாழன், 21 நவம்பர், 2024

காமராஜரைப் பட்டப் பகலில் கொலை செய்ய முயன்ற கூட்டம் எது?

 கருஞ்சட்டை

விடுதலை நாளேடு

கருஞ்சட்டை

புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்து விட்டு, பிறகு பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு ஆளாகி, இன்று ஊடக வெளிச்சத்திற்காகப் பேட்டியளிக்கும் தமிழிசை சவுந்திரராஜன் விருதுநகரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தலைவர் காமராஜர் குறித்து பேசியதற்குக் கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் கூறியதாவது:
‘‘விருதுநகரில் மாபெரும் தலைவரை, ஒரு மாணவரை தேர்தலில் நிறுத்தி தோற்கடித்து அவரை நிலை குலையச் செய்தது திமுக. பெருந்தலைவரை திமுக வசை பாடியதையெல்லாம் காங்கிரஸ் மறந்திருக்கலாம். ஆனால், மக்களுக்கு என்றென்றும் ஞாபகத்தில் இருக்கும்.’’
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்மீது கண்மூடித்தனமான பற்றுகொண்டு, அதன் கருத்தியலோடு ஊறிப் போய்விட்ட தமிழிசை அவர்களுக்குப் பெருந்தலைவர் காமராஜர் ஆர்.எஸ்.எஸ். பற்றிக்கூறியது (7.11.1966) நினைவில் இருக்கிறதா?
இந்தத் தகவல்கள் எல்லாம் தமிழிசைக்குத் தெரியுமா?
தேர்தலில் யாரையும் எதிர்த்து, யாரும் நிற்கலாம்; இது ஜனநாயகத்தின் பாலபாடம்.

இதைக்கூட அறியாமல் விருதுநகரில் காமராஜரை ஒரு மாணவரை தேர்தலில் நிறுத்தித் தோற்கடித்ததை, தி.மு.க.மீது ஒரு குற்றச்சாட்டாக வைப்பது பரிதாபமே!
பசுவதைத் தடைக் கிளர்ச்சி என்ற பெயராலே, அகில இந்திய காங்கிரஸ் தலைவரான பச்சைத் தமிழர் காமராஜரை ஒரு பட்டப் பகலில் (7.11.1966) இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை தீ வைத்துக் கொளுத்தியது ஜனசங்கம் (இன்றைய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல்) என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு நாக்கைச் சுழற்றுகிறார் திருமதி தமிழிசை சவுந்திரராசன்.
உண்மையைச் சொல்லப்போனால், அந்த ஒரு நிமிடத்தில் காமராசரின் உயிரைக் காப்பாற்றியவர் ஒரு தி.மு.க. தோழர்.
காமராஜரைக் கொலை செய்ய முயற்சித்த கூட்டத்தின் அச்சு நகலான ஒரு கட்சியில் இருந்து கொண்டு, இப்படி அபாண்டமாக தி.மு.க.மீது குற்றம் சுமத்துவது பி.ஜே.பி.க்கு அழகுதான்!
அதைத்தான் திருமதி தமிழிசை சவுந்திரராசன் செய்கிறார். இதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்!


‘நீதிக்கட்சி’ பிறந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் நீதிக்கட்சித் தலைவர்களின் சிலைகளை நிறுவி, ‘‘சமூகநீதி மாளிகை’’ என்று பெயர் சூட்டுக!

 ஆசிரியர் அறிக்கை

விடுதலை நாளேடு
Published November 20, 2024

இன்று நீதிக்கட்சி பிறந்த நாள் (1916)

வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசமாக இருந்து தங்கள் பதவி வாய்ப்புகளை வரித்துக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள்!
‘எல்லாம் பார்ப்பன மயம்’ என்ற நிலையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கப் பிறந்ததே நீதிக்கட்சி!
முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள் அறிக்கை

நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட இந்நாளில், அது பிறந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில், நீதிக்கட்சித் தலைவர்களின் சிலைகளை நிறுவி, மண்டபத்திற்கு ‘‘சமூகநீதி மாளிகை’’ என்று பெயர் சூட்டவேண்டும் என்று நீதிக் கட்சியின் நீட்சியான ‘திராவிட மாடல்‘ ஆட்சி நடத்தும் முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘நீதிக்கட்சி’ என்று எளிய மக்களால், வாஞ்சையோடு அழைக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைக் கழகம் (South Indian Liberal Federation) என்ற அமைப்பு பிறந்த நாள் இன்று (20.11.1916).
பார்ப்பனரல்லாதார் இயக்கம் – The Non-Brahmin Movement என்று பரவலாக அழைக்கப்பட்டதும், அறியப்பட்டதுமான சமூகநீதிக்கான இயக்கம் அது.

ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்!
பஞ்சம, சூத்திர, கீழ்ஜாதிகள் என்று ஆரிய வருண தர்மத்தால் பிரிக்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்புகள், சொத்துரிமை, திருமண உரிமை உள்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நாட்டின் பெரும்பாலான மக்களாகிய ஒடுக்கப்பட்ட, பழங்குடியினர், ஆதிதிரா விடர்கள், திராவிடர்கள் உள்பட அனைவருக்கும் சமத்து வமும், சம உரிமையும் கோரியே, நீதி கேட்டுப் பிறந்த இயக்கத்தின் தொடக்க நாள் இன்று!
இந்த நாட்டில் வணிகத்திற்காக வந்த பிரிட்டீஷ்கா ரர்களின் கம்பெனி (கிழக்கிந்திய கம்பெனி) நாளடைவில் அதன் ஆதிக்கக் கரங்களை நீட்டி, அதிகாரத்துவம் பெற்று, பிறகு அது பிரிட்டீஷ் சாம்ராஜ்ய காலனியாதிக்கத்திற்கு உட்படுத்திய ஒன்றாக ஆகியது!
பிரிட்டீஷ் ஆட்சிக்கு ராஜவிசுவாச தீர்மானங்களை நிறைவேற்றி பலன் பெற்றவர்கள் பார்ப்பனர்களே!
வேத, மனு தர்மத்தையும் வைத்து, கல்வியை ஏகபோகத்திற்குக் கொண்ட மேல் வருண பார்ப்பனர்கள், ஆங்கிலத்தை முதலில் படித்து, பிரிட்டீஷ்காரர்களிடம் ராஜ விசுவாசம் பொங்க, ராஜபக்தியைக் காட்டி, அவர்களுக்குத் தேவையான உதவியாளர்களாக, அரசு ஊழியர்களாக அவர்களை நெருங்கி, அதிகாரத்தினைக் கைப்பற்றினர்.

அந்த நாளில், காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பினை உருவாக்கிய ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற வெள்ளைக்கார அய்.சி.எஸ். ஓய்வு பெற்ற அதிகாரியை ஆதரித்து, ஆரிய பார்ப்பனர் ‘ததாஸ்து’ பாடி ஒவ்வொரு ஆண்டும் அந்த அரசியல் அமைப்பின் மாநாட்டிலும் வெள்ளை அரசுக்கு ராஜ விசுவாச தீர்மானம், மன்னர் வாழ்த்து, வெள்ளையர்களை மாநாட்டுத் தலைமை ஏற்கச் செய்வது, பிரிட்டீஷ் அரசு மஹாவிஷ்ணுவால் அனுப்பப்பட்ட அவதாரம் என்றெல்லாம் பலபடப் புகழ்ந்து தங்களது செல்வாக்கினை உயர்த்திக் கொண்டனர். சுயநலத்தைப் பெருக்கிக் கொண்டனர்.
அடுத்தகட்டமாக, வெள்ளையர்களுக்கே முக்கிய அய்.சி.எஸ்., அய்க்கோர்ட் ஜட்ஜ் என்ற பெரும் பதவிகள் சென்றதைக் கண்டு, அதில் தாங்களும் பங்குபெற வேண்டும் என்றே, தேசியப் போர்வையில் இந்தியர்களுக்கும் பங்கு வேண்டும் அதிகார வர்க்கத்தில் என்று வெள்ளையர்களைக் கேட்டு, ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டதால், அவர்கள் தங்களது ஏகபோகத்தை நிலை நிறுத்த சில முக்கிய பதவிகள் ‘முதல் இந்தியர்’ என்ற பெயரில் பார்ப்பனருக்கே தரப்பட்ட நிலை தொடர்ந்ததைக் கண்டு குமுறி எழுந்ததுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.

பெரும்பான்மையான மக்களின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும்
குரல் கொடுத்த இயக்கமே நீதிக்கட்சி!
அனைவருக்கும் பரவலாக கல்வி, அரசுப் பணி பகிர்ந்தளிக்கவே போராடப் பிறந்ததே இந்தப் பார்ப்பன ரல்லாதார் இயக்கம்.
பெரும்பான்மையான மக்களின் கல்வி உரிமை, உத்தியோக உரிமை, சமத்துவ, சம வாய்ப்புக்காகவே விழிப்புணர்வை ஏற்படுத்த முன்னோட்ட முயற்சியை டாக்டர் சி.நடேசனார், சென்னை திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் மூலம், கல்வி உதவிகள்மூலம் கால்கோள் இட்டார்.
அதன்பிறகு 1916 பார்ப்பனரல்லாதார் சமூக நிலையைப் படம் பிடித்துப் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை – Non Brahmin Manifesto சர்.பி.டி. தியாகராயர், டி.எம்.நாயர், பனகால் அரசர் போன்ற பெருமக்கள் வெளியிட்டு, அதன் பின்னரே நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கம் பிறந்தது!
தங்களிடம் பங்கு கேட்க வந்துவிட்டார்களே என்று ஆத்திரத்தால் பொங்கிய ஆரியம், இதனை ‘வகுப்புவாத இயக்கம்’ என்று வர்ணித்து, விஷமப் பிரச்சாரம் செய்தது!
ஊடகங்கள், செய்தித்தாள்கள் எல்லாம் ‘பார்ப்பனர் வசம்’ என்பதால், அது அவர்களுக்கு எளிதாகிவிட்டது!
அதை பார்ப்பனரல்லாதார் உடனடியாக ‘கபக்’ என்று பற்றிக் கொண்டதால், 1920 இல் நடைபெற்ற (குறைந்த அதிகாரம் உடைய நிலையில்) நீதிக்கட்சி சென்னை ராஜதானி ஆட்சியை தங்கள் வசமாகும் அளவுக்கு மக்களது பேராதரவினைப் பெற்று, அதன் முதல் தேர்தலிலேயே முத்திரைப் பதித்தது!

நீதிக்கட்சி பதவி வேட்டைக் கட்சியல்ல!
அந்த இயக்கத்தைத் தான் வெறும் பதவி வேட்டை இயக்கம், உத்தியோகத்திற்காக பிரிட்டிஷ்காரர்களுக்கு வால் பிடித்த இயக்கம் என்று அவதூறு மழை பொழிந்தது ஆரியம்!
அவற்றையெல்லாம் தாண்டி, நெருப்பாற்றில் நீந்திதான் – வெற்றியடைந்து திராவிடர் ஆட்சி – சமூகநீதிக் கொடி தலைதாழாது பறக்கும் ஆட்சியாக – இன்றும் எட்டுத் திசையும் எழிலார்ந்த பெருமை கொள்ளும் இயக்கமாய் பெரும் ஆலமரமாகி, அதன் பலமான தந்தை பெரியார் என்ற வேருடன் விழுதுகளும் பரவலாகி தழைத்தோங்கி வளர்ந்துள்ளது!

தி.மு.க. ஆட்சி என்பது நீதிக்கட்சியின் நீட்சியே!
1967 இல் அண்ணா, ‘‘எனது ஆட்சி – நீதிக்கட்சிகளின் பேரன்கள் ஆட்சி’’ என்றார்!
இன்று, அது பேரன், கொள்ளுப்பேரன், எள்ளுப் பேரன்கள் ஆட்சியில்– திராவிடத்தின் மீட்சியில் ஓங்குபுகழ் ‘திராவிட மாடல்’ ஆட்சியில், அண்ணா, கலைஞர் ஆட்சிகளுக்குப் பிறகு, சாதனை சரித்திரத்துடன் உலகத்தின் கவனத்தை ஈர்த்து, ஆயிரங்காலத்துப் பயிர்களாகி, அடலேறுகளின் துணைகொண்டு தகைமையோடு தலைநிமிர்ந்து ஆட்சி புரிகிறது!
109 ஆம் ஆண்டில் முதுமை இல்லை – இளமையும், முதிர்ச்சியே எங்கும்– என்றும்!
நமது ‘திராவிட மாடல்‘ ஆட்சியின் நாயகருக்கு – முதலமைச்சருக்கு நமது முக்கிய வேண்டுகோள் ஒன்று.

முதலமைச்சருக்கு நமது வேண்டுகோள்!
சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள முந்தைய வி.பி.ஹால் என்ற விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற பாரம்பரிய வரலாறு படைத்த அந்தப் பழைய கட்டடத்தினை பழுது பார்த்து, அப்படியே அதன் பூர்வ மரபு உரிமையோடு இன்று நமது தி.மு.க. ஆட்சி மாநகராட்சி சீரமைப்பு செய்து வருகிறது.
இன்னும் ஓரிரு மாதங்களில் திறப்பு விழா நடைபெறவிருக்கும் அக்கட்டடத்தில்தான் சமூகநீதிப் பிரகடனங்கள் – நிகழ்வுகள், மொழி உரிமைக் குரல் எல்லாம் நடந்தேறிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மண்டபம் இது!
எனவே, ‘சமூகநீதி மாளிகை’ என்ற புதிய பெயரை இணைத்து, அந்த அரங்கிற்கு சூட்டுவதோடு, அந்தத் தலைவர்களின் சிலைகளையும் நிறுவுவது மிகவும் பொருத்தமாகும்!
திராவிட உணர்வாளர்கள், சமூகநீதி யாளர்கள் சார்பில் இதை ஓர் அன்பு வேண்டுகோளாக மாண்பமை மானமிகு முதலமைச்சருக்கு நாம் சமர்ப்பிக்கின்றோம் – செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு!
‘அனைவருக்கும் அனைத்தும்’ – ‘அனைத்தும் அனைவருக்குமான’ சமூகநீதி ஆட்சி வெல்க!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
20.11.2024