
‘விடுதலை’யின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிக்கை
என் மூச்சுக்கு விடுதலை கிடைக்கும்வரை உழைத்து, வெற்றி உலாவாக ‘விடுதலை’யை நடத்திட,
மீண்டும் உறுதிகொள்ளும்
உற்சாகப் பெருவிழா!
நம் அறிவுப் பேராசான் வைத்த பெருநம்பிக்கை சிறிதும் பழுதுபடாமல், வழுது ஏற்படாத விழுதின் பலம் நாளும் வீறுகொண்டு உழைக்க, உறுதி செய்து, முடிவெய்யும் வரை – என் மூச்சுக்கு விடுதலை கிடைக்கும்வரை உழைத்து, வெற்றி உலாவாக ‘விடுத லை’யை நடத்திட, மீண்டும் உறுதிகொள்ளும் உற்சாகப் பெருவிழாவே – திருவிழாவே தோழர்கள், ‘விடுதலை’ப் புரவலர்களின் நன்கொடை என்ற ஊக்க மாத்திரை. சமரசம் அற்ற சமருக்கு என்றும் ஆளாகும் ஆயத்தத்திற்கு சந்தாதாரர்கள் தரும் ஆதரவு சரியான உந்து செயலாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘விடுதலை’ உலக ஏடுகளின் வரலாற்றில்
அதிசயக்கத்தக்க ஒன்று!
மனித சமூகத்தின் புரையோடிய அவலங்களை தன் பேனா முனையையே அறுவை சிகிச்சைக் கருவியாக்கிக் கொண்டு, அதையே மறுபுறம் அறிவு ஆயுதமாகவும் கூர்முனைப்படுத்திக் கொண்டு – இந்த 89 ஆண்டுகாலத்தில், ‘விடுதலை’ ஏடு செய்த அமைதிப் புரட்சி உலக ஏடுகளின் வரலாற்றில் அதிசயக்கத்தக்க ஒன்றாகும்! (எளிதில் காண முடியாததும்கூட!)
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நம் தலைவர் – அறிவுப் பேராசான் தந்த ஆயுதக் கிடங்கு மக்களுக்கு விழிப்புணர்வுக்கும், அதையொட்டிய விடியலுக்கும் நேற்றும் இன்றும் என்றும் உழைக்க உறுதி பூண்டு, ஒப்புமையற்ற, வசவுகளையும், வழக்கு களையும், வல்லாண்மைகளையும் வலிமை குன்றாமல் சந்தித்து, சமர்புரியும் சமூகப் புரட்சி ஏடுதான் – 90 ஆம் ஆண்டில் இன்று (1.6.2024) அடியெடுத்து வைக்கும் நமது ‘விடுதலை’ நாளேடு!
சாதனைச் சரித்திரத்தின்
மறுபெயர்தான் ‘விடுதலை’
ஜாதிகளை அழித்து, மதங்களை ஏற்காமல், புதியதோர் சமத்துவ பூமியாக, இந்த உலகை மாற்ற, நாளும் நெருப்பாற்றில் நீந்தி நீந்தி, புடம் போட்டெடுக்கப்பட்டு, அடக்குமுறை அம்புகளால் விழுப்புண் பல பெற்றும் வீறுகுறையாத நடையையே தனது பயணமாகக் கொண்டு, வெற்றிகளைக் குவிக்கும் சாதனைச் சரித்திரத்தின் மறுபெயர்தான் ‘விடுதலை’ என்ற நாளேடு!
குளிகைகள் சிறிதுதான் – தோற்றத்தில்!
குணமோ விரைவில் – நோயிலிருந்து ‘விடுதலை!’
இதுதான் அது கண்ட சமூகப் பலாபலன்!
மனித குலத்தின் சமத்துவத்தை மீட்டு பால், இன, பேத வாழ்வான வருண தர்மத்தையும், கொள்ளையடித்துக் குவித்த செல்வத்தினால் கோணல் சமூகமாக்கிய கோடி ஈசுவரர்களையும் மாற்றி, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியை, சமூகத்தின் மக்கள் அனைவரும் பகிர்ந்து, பரவசப்பட வேண்டிய, ஒரு புதிய மாற்றத்தைச் செய்ய தன்னை அர்ப்பணித்து, அதற்காக எந்த விலை கொடுக்கவும், எதிர்நீச்சல் அடித்து களைப்பின்றி, சலிப்பின்றி நாளும் உழைக்கும் சமூகத்தின் இதயத் துடிப்புப் போன்றது ‘விடுதலை’ என்பது இமாலய உண்மையாகும்!
தந்தை பெரியார் அமைத்திட்ட
அடிக்கட்டுமானம்!
இந்த 90 ஆம் ஆண்டிலும் துவளாது, துடிக்கும் இளமையோடு மக்கள் துயர் களையும் பணியில் அதன் பணி தொடரு வதன் ரகசியம் – முதலில் நம் அறிவுப் பேராசான் தந்தை பெரியார் அமைத்திட்ட அடிக்கட்டுமானம்!
அடுத்து, அதன் தொண்டர்களாக நம் தோழர்களும், விடுதலை விரும்பிகளும் விடாமல் அளிக்கும் குருதிக் கொடை போன்ற குன்றா உழைப்பும், குறையா பேராதரவும்தான்.
‘விடுதலை’யின் வீச்சை வேகத்துடனும், விவேகத்துடனும் நாளும் கொண்டு செல்லும் நமது அறப்போர் வீரர்கள்!
மூன்றாவதாக, அதற்காகத் தங்களது வாழ்வினைத் தந்து, களப்பணி, கழகப் பணி, எழுத்துப் பணி – பணிமனை முதல் நூலகம், படிப்பகம் முதலியவற்றில் ‘விடுதலை’யின் வீச்சை வேகத்துடனும், விவேகத்துடனும் நாளும் கொண்டு செல்லும் நமது அறப்போர் வீரர்கள் – தொண்டூழியச் செம்மல்கள்!
62 ஆண்டுகளில், ‘விடுதலை’யே என் வாழ்வின் மூச்சாக, பேச்சாக, சிந்தனையின் செயலாக, உறங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களையும் ஆக்குகிறது. நம் அறிவுப் பேராசான் வைத்த பெருநம்பிக்கை சிறிதும் பழுதுபடாமல், வழுது ஏற்படாத விழுதின் பலம் நாளும் வீறுகொண்டு உழைக்க உறுதி கொண்டு, முடிவெய்தும் வரை – என் மூச்சுக்கு விடுதலை கிடைக்கும்வரை உழைத்து, வெற்றி உலாவாக ‘விடுதலை’யை நடத்திட, மீண்டும் உறுதிகொள்ளும் உற்சாகப் பெருவிழாவே – திருவிழாவே தோழர்கள், ‘விடுதலை’ப் புரவலர்களின் நன்கொடை என்ற ஊக்க மாத்திரை.
வார்த்தைகளால் அல்ல; வாழ்வின்மூலமே…!
‘‘வார்த்தைகளால் நன்றி சொல்லாமல், வாழ்வின் மூலமே அதை நிரூபித்துக் காட்டுவோம்” என்று ‘விடுதலை’ குழு மத்திற்கும், உங்கள் அனைவருக்கும், அடக்கத்தோடு தெரிவிக்கும் அதேநேரத்தில், சமரசம் அற்ற சமருக்கு என்றும் ஆளாகும் ஆயத்தத்திற்கு சந்தாதாரர்கள் தரும் ஆதரவு சரியான உந்து செயலாகும்!
நன்றி! நன்றி!! நன்றி!!!
‘விடுதலை’ தேனீக்களுக்கு வெள்ளம் போன்ற நம் வாழ்த்துகள்!
சமத்துவ சமூகத்தை நாடி வாருங்கள்!
தந்தை பெரியார் என்ற நம் அறிவுப் பேராசான் தனது வியர்வையை அல்ல – இரத்தத்தைக் கொடுத்து வளர்த்து, நம்மை நம்பி நம்மிடம் ஒப்படைத்த இந்த ஒப்பற்ற ஏவுகணையை (‘விடுதலை’யை) நாம் குறைந்தபட்சம் நம் வியர்வையையாவது தந்து வீரநடை – வெற்றி நடை போட்டு, விடியலை ஏற்படுத்திட, விரைந்து களமாட முன்வரவேண்டும்.
எனவே, ஓடிவாருங்கள்!
‘விடுதலை’யைத் தேடி வாருங்கள்!
சமத்துவ சமூகத்தை நாடி வாருங்கள்!
கனிவுடன்,
உங்கள் தொண்டன், தோழன்
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1-6-2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக