208 நாட்களுக்கு முன்பு 'நீட்'டிலிருந்து விலக்குக் கோரும் மசோதாவை இரண்டாவது முறையாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப் பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் இருவர் இன்று (14.4.2022) ஆளுநரைச் சந்தித்து 'நீட்' தொடர்பாக வேண்டுகோள் வைத்தபோது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க காலவரையறை கூற முடியாது என்று ஆளுநர் கூறியிருப்பது, தமிழ்நாட்டு சட்டமன்ற மாண்பையும், ஜனநாயகக் கோட் பாட்டையும், வாக்களித்து ஆட்சியை அமைத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்குப் போட்டி அரசு நடத்திட ஆளுநர் தயாராகிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது.
இந்த நிலையில், ஆளுநர் விடுத்த விருந்து வேண்டு கோளைத் தமிழ்நாடு அரசு புறக்கணித்தது மிகவும் சரியான முடிவாகும். அரசமைப்புச் சட்டத்தின் ஜனநாயக உரிமையைக் காக்கும் செயலாகவே இதனைக் கருதவேண்டும்.
தமிழ்நாடு அரசின் மதிப்புறு முடிவை வரவேற்கிறோம் - பாராட்டுகிறோம்.
தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியும் ஆளுநர் விருந்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருப்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் பிரதிபலிப்பதாகும். இதில் ஈடுபட்ட அனைத்துக் கட்சிகளையும் பாராட்டுகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.4.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக