சமூகநீதி அணி- சமூக அநீதி அணி என்று
இந்தியா இரண்டாகப் பிளவுபட வேண்டுமா?
முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்?
------------------------------------------------------------------------
கடந்த 8.5.2020 அன்று மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது குறித்து விரிவாக எழுதியிருந்தோம்.
மாநிலத்துக்கான இடங்களை அபகரிப்பதா?
மாநிலங்ளிலிருந்து 50 விழுக்காடு இடங்களை அபகரித்துக் கொண்டு, அந்த இடங்களில் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாது என்பது அரசமைப்புச் சட்டத்துக்கும், சமூகநீதிக்கும் முற்றிலும் எதிரானது என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.
தமிழகத் தலைவர்கள் கண்டனம்
அதனைத் தொடர்ந்து தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சமூகநீதியை வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசுக்குக் கடிதங்களை எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.
சமூகநீதிப் பிரச்சினை என்று வருகிறபோது, தந்தை பெரியாரின் சமூகநீதி மண்ணான தமிழ்நாடுதான் வழிகாட்ட வேண்டிய நிலையிலும், இடத்திலும் உள்ளது.
இந்தப் பிரச்சினையில் இங்கு வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, எந்த அளவுக்கு அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகும்.
மக்கள் தொகையில் 52 விழுக்காடு மக்களின் கதி இதுதானா?
மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியான நிலையாகும். தமிழ்நாட்டிலோ 50 விழுக்காடாகும்.
கண்ணுக்குத் தெரிந்தே திட்டமிட்டே பிற்படுத்தப்பட்ட மக்கள் புறக்கணிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
26 மாநிலங்கள் - 172 கல்லூரிகள் மொத்தம் உள்ள 7981 இடங்களில் (மருத்துவப் பட்ட மேற்படிப்பு) பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு பூஜ்ஜியம் என்பது எவ்வளவுப் பெரிய அநீதி? 52 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள பிற்படுத்தப்பட்டோரை கிள்ளுக் கீரையாக பிள்ளைப் பூச்சியாக காலில் போட்டு மிதிப்பதை அனுமதிக்க முடியுமா?
அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் மருத்துவ மேற்படிப்புக்கு பெறப்பட்ட இடங்களில் (பிஜி மருத்துவம் 7981 + பிஜி பல் மருத்துவும் 274) இவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்குப் பட்டை நாமமா?
மத்திய அரசுக்கு அளிக்காமல் இருந்தால்...
மாநில அரசுக்கான இடங்களை மத்திய அரசுக்கு அளிக்காமல் இருந்தால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடங்கள் - அதாவது 470 இடங்கள் கிடைத்திருக்குமே!
இந்த இழப்பு சாதாரணமானதுதானா? இதனை அனுமதிக்கலாமா? தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரிடம் இது குறித்து கேட்டபோது, ‘‘மத்திய அமைச்சரைக் கேளுங்கள்’’ என்று சொல்லியிருக்கிறாரே - இப்படி சொல்லுவதற்கு தமிழ்நாட்டில் ஓர் அமைச்சர் தேவையா?
தமிழ்நாட்டில் 50 விழுக்காடு இடங்களையும் மற்ற மற்ற மாநிலங்களில் 27 விழுக்காடு இடங்களையும் பிற்படுத்தப்பட்டோர் இழந்துள்ளனர் என்பதைவிட, அவர்களுக்கு வேறு எந்த வகையான துரோகத்தை, வஞ்சனையை இழைத்திருக்க முடியும்?
இந்தியா இரண்டாகப் பிளவுபடும் - எச்சரிக்கை!
மதச்சார்பு அணி - மதச் சார்பற்ற அணி என்பதுபோல - சமூகநீதி அணி - சமூகநீதிக்கு எதிரான அணி என்று இந்தியா இரண்டாகப் பிளவுபடவேண்டுமா?
மத்திய அரசே மறுபரிசீலனை செய்க!
இதுபற்றி தமிழக முதல்வரோ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ இதுவரை வாய்த் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? தமிழ்நாட்டு உரிமைகள் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளும் பறிபோகின்றன. 69 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்த தமிழ்நாடும், அதற்குரிய ‘அம்மா ஆட்சி’ என்று சொல்லிக் கொள்கின்ற ஆட்சியினரும் இப்பிரச்சினையில் ஏன், எந்தவிதமான கோரிக்கையையும் வைக்கத் தவறவேண்டும்?
தமிழக அரசே சமூகநீதியைப் பலி கொடுக்கும் எந்த ஆட்சியையும் தமிழ்நாடு அனுமதிக்காது, அனுமதிக்காது - இது கடந்த கால வரலாறு- எச்சரிக்கை!!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
16.5.2020
சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக