வியாழன், 20 மார்ச், 2025

போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்


விடுதலை நாளேடு
தமிழ்நாடு

பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் 23.2.2025 அன்று பொள்ளாச்சி ரயில் நிலைய பல கையில் இருந்த ஹிந்தி எழுத்தை தி.மு.க. வினர் தார்பூசி அழித்தனர்.

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த ஒன்றிய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இருமொழிக் கொள்கையே தமிழ் நாட்டில் கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

திணிப்பு

இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதில் ஒன்றிய அரசு முழுமையாக ஈடுபட்டு வரு வதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கூட்டணி கட்சித் தலை வர்கள் பங்கேற்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் முழுவதும் வீடுகளுக்கு முன் ஹிந்தி எதிர்ப்பு வாசகம் மற்றும் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கோலமிட்டு பெண்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த விவகாரம் பேருரு எடுத்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் ஹிந்தி எழுத்தை தி.மு.க.வினர் தார்பூசி அழித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி மாறன் தென்றல், மேனாள் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தனம் தங்கதுரை, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அவினாஷ் கார்த்திக், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பைக் பாபு, ஸ்ரீரங்கன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகவும், மும் மொழிக் கொள்கைக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

வெள்ளி, 7 மார்ச், 2025

ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்

விடுதலை நாளேடு

இந்தியா

புதுடில்லி, மார்ச் 7 தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹிந்தியை விட நடைமுறை பயன்கள் அதிகம் உள்ள ஆங்கிலம், இந்தியாவின் இணைப்பு மொழியாக நீடிக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த குளோபல் டேட்டா லேப் (Global Data Lab) என்னும் நிறுவனம், மொழிகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஹிந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்க அதிக விருப்பம் உள்ளவர்களாக இருப்பதாகவும், அதே நேரத்தில் ஹிந்தி பேசுபவர்கள் கூடுதல் மொழியை கற்பதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991-இல் தமிழ்நாட்டில் 14.5 சதவீத மக்கள் தமிழுடன் கூடுதலாக ஒரு மொழியை பேசுபவர்களாக இருந்தனர் என்றும், இது 2011-ல் 22 சதவீதமாக அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல ஒடிசாவில், ஒடியா மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் 86 சதவீதத்தில் இருந்து 74.5 சதவீதமாக குறைந்தது என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

திங்கள், 24 பிப்ரவரி, 2025

புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!

 புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!!

ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை!
திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!

இந்தியா

புதுடில்லி, பிப்.7 பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 2024 & 2025 ஆண்டு வரைவு அறிக்கைகளை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என புதுடில்லியில் திமுக மாணவரணியினர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாணவர் அமைப்புகளும், இந்தியா கூட்டணித் தலைவர்களும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
மாநில சுயாட்சிக்கு எதிராக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கும் வகையிலும், கல்வியாளர்கள் அல்லாதோரையும் நியமிக்கும் வகையிலும் பல்கலைக்கழக மானியக்குழு வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஒன்றிய அரசின் கல்வி அமைச்சருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியிருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தும் வண்ணம் 6.2.2025 அன்று காலை 10 மணியளவில் புதுடில்லி யில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தி.மு.க. மாண வரணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு திமுக மாணவரணியின் மாநிலச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையேற்றார். திராவிட மாணவர் கழகம் (DSF), இந்திய மாணவர் சங்கம் (SFI), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), திராவிட மாணவர் கூட்டமைப்பு (SFD), சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI), இந்திய தேசியக் காங்கிரசின் மாணவர் அமைப்பு (NSUI), முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) போன்ற தமிழ்நாட்டில் உள்ள மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ராகுல்காந்தி கண்டன உரை!
ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு,
” “இந்திய நாட்டின் வரலாற்றை அழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.-இன் இலக்கு. அனைத்து மாநிலங்களின் மொழிகளும் இணைந்துதான் இந்தியா என்ற நாடு உருவாகிறது. 3000-4000 ஆண்டு வரலாற்றை கொண்டுள்ளனர் தமிழ் மக்கள். மாநிலத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நோக்கம்.
அரசமைப்பை சிதைக்க முயற்சிக்கிறது மோடி அரசு. கல்வி நிலையங்களை ஆர்எஸ்எஸ் மயமாக மாற்ற ஒன்றிய அரசு முயற்சி மேற்கொள்கிறது. ஒரே நாடு, ஒரே மொழியை கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. பல மொழிகள் ஒன்றிணைந்ததுதான் நம் இந்திய தேசம்.. அனைத்து மாநிலங்களின் மொழி, கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்,”” என்று எடுத்துரைத்தார்.
புதுடில்லிக்கு வந்து போராடுவதற்கு முன்வந்த திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியைப் பாராட்டிய ராகுல், தமிழ்நாட்டைப் பின்பற்றி பிற மாநிலங்களிலிருந்தும், டில்லியை நோக்கி மாண வர்கள் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், “இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்காக மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆனது. மாநில உரிமைகளை பறிப்பதில் ஒன்றிய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் திமுக உடன் சமாஜ்வாதி கட்சி ஆதரவாக இருக்கும்” என்று வலியுறுத்தினார்.

கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
முன்னதாக இந்நிகழ்வில் சி.பி.எம். ஜான்பிரிட்டோ, சி.பி.அய். செல்வராஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் மனோஜ்குமார் ஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கேரள சோசலிஸ்ட் பார்ட்டி பிரேமச்சந்திரன், திமுக மாநிலங்களவைத் தலை வர் திருச்சி சிவா, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற திமுக தலைவர் கனிமொழி கருணாநிதி, திமுக பொருளாளரும், மக்களவை திமுக தலைவருமான டி.ஆர்.பாலு, எம்.எம்.அப்துல்லா, ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, முரசொலி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மலையரசன், தங்க தமிழ்ச்செல்வன், கே.இ.பிரகாஷ், டாக்டர் ராணி ஆகியோரும் மதிமுக துரை வைகோ, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திராவிட மாணவர் கழகம்
திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாணவர் கழகச் செயலாளர் செந்தூர்பாண்டியன், முகமது அப்ரிடி ஆகியோர் கலந்துகொண்டனர். திராவிட மாணவர் கூட்டமைப்பு-டில்லியின் சார்பில் இளையகுமார், விமல், அமீர், ரஞ்சித் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்நாசர், கோவை ரிது, சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் கோவை அம்ஜத் உள்ளிட்ட தோழர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆய்ஷே, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தேசியப் பொதுச் செயலாளர் தினேஷ் உள்ளிட்ட ஏராளமான முதன்மைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவரின் வழிகாட்டுதல்!
திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கையின் நகல்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மேடையிலும் கூட்டத்திலும் விநியோகம் செய்யப்பட்டன. அதில் யுஜிசி மாநில அதிகாரத்தில் தலையிடுவது பற்றியும், தமிழ்நாடு முதலமைச்சர் மிகச்சரியான நடவடிக்கை எடுத்துள்ளதையும், எப்போதும் போல தமிழ்நாடு இதிலும் வழிகாட்டியாக இருப்பதையும் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


வியாழன், 30 ஜனவரி, 2025

இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!


திங்கள், 27 ஜனவரி, 2025

சி.பி.அய்.யிடம் வழக்கை ஒப்படைக்கக் கூறுவது சரியானதல்ல சாத்தான்குளம் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் முடிவுக்கு வந்ததா?



விடுதலை நாளேடு
Published January 26, 2025
ஆசிரியர் அறிக்கை

வேங்கை வயல் பிரச்சினையில் தமிழ்நாடு காவல்துறை தொழில் நுட்ப முறைகளை எல்லாம் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிந்துள்ளது
மிக நுட்பமான – மக்களிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் அரசியலாக்கிக் குளிர்காயக் கூடாது
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளியாக்க வேண்டாம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

வேங்கைவயல் தொடர்பான பிரச்சினையில் தமிழ்நாடு காவல்துறை அனைத்துத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி முறையாகப் புலனாய்வு செய்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதனை அரசியலாக்குவது உகந்ததல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல் நிலைக் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு 2022 டிசம்பரில் கலக்கப்பட்டதான கடைந்தெடுத்த இழிசெயல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்தப் பிரச்சினையை மய்யமாக வைத்து வதந்திகளைப் பரப்பிட வேண்டாம் என்றும், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும் தமிழ்நாடு அரசு கீழ்க்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளது.

வேங்கைவயல் சம்பவம்: வதந்திகளைப் பரப்பிட வேண்டாம்!
தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
‘‘புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளானூர் காவல் நிலைய Cr.No.239/2022-இல் 26.12.2022 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் இவ்வழக்கின் புலன் விசாரணையை 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றினார். அதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, புதுக்கோட்டை குற்ற எண்.01/2023-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத் தவிர, பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப் பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள்எடுக்கப்பட்டு, விரிவான டி.என்.ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன:

*சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிபராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராம சபைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவாநந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.

* மேலும், இச்சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

* இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சி களின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு

(i) முரளிராஜா, த/பெ. ஜீவாநந்தம், 32/23, வேங்கைவயல், (ii) சுதர்ஷன் 20/23, த/பெ. பாஸ்கரன், வேங்கைவயல் மற்றும் (iii) முத்துகிருஷ்ணன் 22/23, த/பெ. கருப்பையா, வேங்கைவயல் ஆகியோரின் மீது, 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஅய்டி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.’’

397 பேர்களிடம் விசாரணை
இந்த நுட்பமான ‘எளிதில் தீப்பற்றும்’ பிரச்சினைமீது யாராக இருந்தாலும் தீரமாக சிந்தித்துப் பொறுப்புடன் கருத்துகளை வெளியிடுவது அவசியமாகும்.
அரசு வெளியிட்ட அறிக்கையில், எவ்வளவு அக்கறையுடன் அனைத்து வகைத் தொழில் நுட்பங்களையும், தடய அறிவியல்
களையும் பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகவே தெரிய வருகிறது.
397 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 87 செல்போன் டவர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் செல்போன் பயன்பாட்டை ஆய்வு செய்து துப்புத் துலக்கப்பட்டுள்ளது.
ஒரு காவல்துறை எதை எதை எல்லாம் அதிகபட்சம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் துல்லியமாக செய்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

‘திராவிட மாடல்’ அரசின் கொள்கை எத்தகையது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்து செயல்படும் அரசு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே!
அரசியல் குளிர் காய்வது சரியல்ல!
இதனை அரசியல் பிரச்சினையாக்கிக் குளிர் காய்வது என்பது சரியானதல்ல. குறிப்பாகக் கூட்டணி கட்சிகளுக்குப் பொறுப்பு அதிகமாகவே உண்டு.
தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத் தூசு கிடைத்தாலும் தூணாகப் பெரிதுப்படுத்தும் பிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூக்குரலைப் புரிந்து கொள்ள முடியும்.

தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி ஜாதி முலாம் பூசுவது மிகப் பெரிய ஆபத்தாகும்.
விமர்சனம் செய்யலாம்; அப்படி விமர்சிக்கும் போது காவல் துறையின் செயல்பாட்டில் என்ன குறைபாடு என்பதைச் சுட்டிக் காட்டலாம். அதைப் புறந்தள்ளி பிரச்சிைனயை வேறு கண்ணோட்டத்தில் விமர்சிப்பது, அரசியல் லாபத்துக்காக பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாட்டும் குற்றச்சாட்டு நெருப்புக்குத் தெரிந்தோ தெரியாமலோ நெய் ஊற்றுவதாக அமைந்து விடாதா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் பிரச்சினை, தீண்டாமை – இவற்றில் பிஜேபி, சங்பரிவார்களின் பார்வை என்ன என்பது தெரியாத ஒன்றா?
தாழ்த்தப்பட்ட தோழர் மீசை வைத்துள்ளார் என்பதற் காகவும், குதிரை மேல் வந்தார் என்பதற்காகவும், கோயில் திருவிழாவை வேடிக்கை பார்த்தார் என்பதற்காகவும் தாக்கப்படவில்லையா? ஏன் கொல்லப்பட்டதும்கூட உண்டு.

குடியரசுத் தலைவரை
அவமதித்தவர்கள்மீது நடவடிக்கை உண்டா?
இந்தியாவின் முதல் குடிமகனும், முப்படைகளின் தலைவரும், அரசமைப்புச் சட்டத்தின் பிதாமகனுமான மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள்ளும், ராஜஸ்தான் அஜ்மீர் – பிரம்மா கோயிலுக்குள்ளும் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதைவிட பெருங் குற்றம் வேறொன்று இருக்க முடியுமா?
குடியரசுத் தலைவரையும், அவர் குடும்பத்தையும் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்களின்மீது பிஜேபி அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கும், திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் குறைந்தபட்சம் அழைப்பைக்கூட இன்றைய குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தவர் என்ற காரணத்துக்காக அளிக்காதவர்கள் வேங்கைவயலைப் பற்றிப் பேச அருகதை உடையவர்களா?

வருணாசிரமத்தைத் தூக்கிப் பிடிக்கும் கொள்கையைக் கொண்ட கட்சியினர் ஆட்சிதானே இந்தியாவில் நடக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெரியார் நினைவு சமத்துவபுரமும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டமும் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்றால், இந்த அரசின்தூய்மையான ஜாதி ஒழிப்பு – தீண்டாமை ஒழிப்பு – சமூகநீதி சமத்துவக் கொள்கை எத்தகையது என்பது வெள்ளி மலையாகும்.
எதையும் ஒரு சார்புக் கண்ணோட்டத்தில் காண்பது – அணுகுவது, யூகிப்பது பகுத்தறிவுக்கு அழகல்ல!
எங்காவது ஒரு பேருந்து நடத்துநர் எந்தக் காரணத்துக்காகத் தாக்கப்பட்டாலும் பேருந்து நடத்துநர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து போராடுவது, வழக்குரைஞர் ஒருவர் எங்காவது தாக்கப்பட்டால் (என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல்) வழக்குரைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தைப் புறக்கணிப்பது.. இத்தியாதி இத்தியாதி முறைகள் ஏற்கத்தக்கதுதானா? இது எங்கு கொண்டு போய் விடும் என்பதைப் பொறுப்புமிக்க தலைவர்கள் உணர்ந்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

எதற்கெடுத்தாலும் சி.பி.அய். விசாரணை தேவை என்பது வாடிக்கையான வழமையான குரலாக இருப்பது வேடிக்கையானது – வினோதமானது! மாநிலக் காவல்துறை மீது நம்பிக்கையற்ற தன்மை சரியானதல்ல.
சாத்தான்குளம் வழக்கு சி.பி.அய்யிடம் தானே ஒப்படைக்கப்பட்டது – அதன் நிலை என்ன?
எடுத்துக்காட்டுக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். சாத்தான் குளத்தில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.அய். வசம்தான் ஒப்படைக்கப்பட்டது
2020 ஜூனில் நடந்த நிகழ்வு இது. 5 ஆண்டுகள் ஓடி விட்டன.
13.12.2021 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது – மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்று கேட்டதுண்டே! அதற்குப் பிறகும் நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. விசாரணை முடிவுக்கு வரவில்லை. தீர்ப்பும் கிடைக்கப் பெறவில்லை.

சி.பி.அய்.யிடம் ஒப்படைத்தால் விசாரணை விரைவாக நடைபெறும் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான்.
வேங்கைவயல் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு அரசு நேரியமுறையில் அரிய தொழில் நுட்ப முறைகளை எல்லாம் பயன்படுத்தி விசாரணையை மிகவும் சிறப்பாகவே நேர்மையாகவே நடத்தி வருகிறது.
இதனைப் பயன்படுத்தி அரசியல் செய்வது நியாயமல்ல – பொறுப்பான செயலும் அல்ல.

இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக
இருப்பது தமிழ்நாடே!
இந்தியாவிலேயே ஜாதிக் கலவரம், மதக் கலவரம் இல்லாமல் அமைதிப் பூங்காவாக மணம் வீசும் மாநிலத்தை அமளிக்காடாக்க முயலும் சக்திகளை அடையாளம் காட்டும் பொறுப்பு, நாட்டு நலனில் அக்கறை கொண்ட நம் அனைவரின் கடமை என்பதை மிகுந்த சமூகப் பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டுகிறோம்.

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
26.1.2025 

திங்கள், 6 ஜனவரி, 2025

சமூகநீதிக்கு எதிரான போக்கு நிலவுவதை விளக்கியும் சமூகநீதியை வலியுறுத்தியும், வரும் 9 ஆம் தேதி சென்னையிலும், மதுரையிலும் அறவழி ஆர்ப்பாட்டம்!


Published January 6, 2025
ஆசிரியர் அறிக்கை

* சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள்!
* மீண்டும் நான்கு பார்ப்பனர்களை நீதிபதிகளாக்க முயற்சிப்பதா?
தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கும், அடுத்தடுத்து காலியாகவிருக்கும் இடங்களுக்கும் நீதிபதிகளை நியமனம் செய்யும் போது, அதில் நான்கு பார்ப்பனர்களை நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்றக் கொலிஜியம் பரிந்துரைக்கவிருப்பதாக வந்திருக்கும் செய்தி நீதித் துறையில் சமூகநீதிக்கு எதிராக நிலவும் போக்கையே எடுத்துக்காட்டுவதால், அதை விளக்கியும், நீதித் துறை நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில், வரும் 9 ஆம் தேதி சென்னை யிலும் மதுரையிலும் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நமது ஆட்சி முறை இந்திய அரசமைப்புச் சட்டப்படி மூன்று முக்கிய ஆளுமைகளால்தான் வெகுவாக நடத்தப்படுகிறது.
பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டரி முறையாகிய கேபினட் சிஸ்டம் என்ற முறையைப் பின்பற்றினாலும்கூட, மூன்றில் ஒன்றான நீதித்துறை (Judiciary) மற்ற இரண்டு துறைகளான நிர்வாகத் துறை (Executive), சட்டமியற்றும் துறை (Legislative) என்பவற்றையும் அவற்றின் நடவடிக்கைகளையும் பற்றி நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறும் வகையிலான ஜனநாயக முறையையே இந்தியா கடைப்பிடித்து வரும் நிலையில், அரசமைப்புச் சட்டம் அதன் பீடிகையில் உறுதியளிக்கும் சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகியவை சரியாக வழங்கப்படுகின்றனவா, சட்டங்கள் அரசமைப்புச் சட்டப்படி உள்ளனவா, முரண்படுகின்றனவா என்று வழக்குகளில் தீர்ப்புக் கூறும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கே உள்ளது.

நீதிமன்றங்களுக்குள்ள சட்ட வலிமை
அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரப்படி, உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் அளிக்கப்படும் தீர்ப்புகளுக்குச் சட்ட வலிமை தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜாதி அடுக்குமுறை அசமத்துவம் (Graded Inequality) நீண்ட நெடிய காலமாக உள்ள நாட்டில், ஜாதி பேதமும், ஜாதிய உணர்வும் மாறாமல் உள்ள சமூகத்தில், அவற்றினால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டோருக்குச் சம வாய்ப்பும், சம உரிமையும் கிடைப்பது எளிதல்ல என்பதால்தான், சமூகநீதியை உறுதி செய்ய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் முறை சட்டத்தின்மூலம் செய லாக்கப்பட்டு வருகிறது!
நீதிபதி நியமனங்களில் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டியது மிக முக்கியம்!
மக்களால் தேர்வு செய்யப்படும் நமது ஜனநாயகக் குடியரசு ஆட்சியில் சமூகஅநீதியைக் கண்டித்து நியாயம் கூறும் கடமையும், பொறுப்பும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திற்கான உரிமைகளாக அரசமைப்புச் சட்ட கர்த்தாக்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே, மற்ற இரு துறைகளைவிட, சமூகநீதியையும், சமூகநீதியை உள்ளடக்கிய பாலியல் நீதியையும், மிக முக்கியத் துறையான நீதித் துறை நியமனங்களில், கடைப்பிடிப்பது மிகமிக முக்கியம்.
இதற்கு முன்பும் (இன்றும்கூட) அது சரிவர நடத்தப்படாமல், உயர்ஜாதியினரின் ஏகபோகமாகவே நீதித்துறை தனது விரிந்த கரங்களோடு செயல்பட்டு வந்தது, வருகிறது!
உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்றால், அதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மை (மைனாரிட்டி) நீதிபதிகள் எண்ணிக்கை சரி சமமாகவா இருக்கிறது?

உயர் ஜாதியினரால் நிரப்பப்பட்டதாக உச்ச, உயர்நீதிமன்றங்கள் அமையக்கூடாது!
உயர்ஜாதியினரால் நிரப்பப்பட்டதாக நீதித்துறை காட்சி அளிக்க, உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் அய்வர் அடங்கிய கொலிஜியம் (Collegium) என்ற நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக் குழுவே – ஓய்வு பெற்று காலியாகி, நிரப்பப்பட வேண்டிய இடங்களுக்கு நீதிபதிகளைப் பரிந்துரைத்து அனுப்பி, அதனை குடியரசுத் தலைவர் – அதாவது உள்துறை, சட்டத்துறை முதலியவை ஏற்கவோ, நிராகரிக்கவோ உரிமை பெற்றுள்ளதாகவே தற்போதைய நடைமுறை இருக்கிறது.
அதனால்தான் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் சமூகநீதி தேவை என்று பல ஆண்டுகளாக நாமும், நம்மைப் போல பல சமூகநீதிப் போராளிகளும் இடையறாமல் வலியுறுத்தி வருகின்றோம்!
நாடாளுமன்றத்திலும், தமிழ்நாடு மற்றும் பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து சென்றுள்ள மக்கள் பிரதிநிதிகளும் நீதித்துறையில் நியாயமான, போதுமான இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென வற்புறுத்தி வருகின்றனர். அண்மையிலதான், அதனைக் கொள்கை அளவில் ‘கொலிஜியம்’ ஏற்றுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை விவரம்!
ஏராளமான உயர்நீதிமன்ற நீதிபதிகள், பதவிகள் நிரப்பப்படுகின்றபோது, மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக இருந்தாலும், பல ஆண்டு களாக நீதித்துறையை தங்களது ஏகபோகமாக்கி அனுபவித்து வரும் உயர்ஜாதியினர்கள் (குறிப்பாக பார்ப்பனர்களும், முன்னேறிய வகுப்பாரும்) தங்களது எண்ணிக்கை விகிதாச்சாரத்தைவிட பல மடங்கு அதிகமாகவே நியமனம் பெற்று வரும் நிலை, அரசமைப்புச் சட்டம் வழங்கும் சமூகநீதி உத்தரவாதத்திற்கு முற்றிலும் முரணான நடைமுறையாகும்.
இதற்குத் தக்க முறையில் பரிகாரம், நீதி, நியாயம் கிடைக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75.
இதில் தற்போதுள்ள நீதிபதிகள் (இருபாலரும் ) எண்ணிக்கை 66.
(மற்றவை நிரப்பப்படவேண்டியவை).
ஓர் உயர்ஜாதி நீதிபதி நாளை மறுநாள் (8.1.2025) ஓய்வு பெறவிருக்கிறார்.
இந்நிலையில், புதிய நியமனப் பரிந்துரைகள் உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கு அனுப்பப்படவிருக்கும் நிலையில், இங்கு மூத்த நீதிபதிகள் மூவர் அடங்கிய கொலிஜியத்தில், மூவரில் இருவர் தலைமை நீதிபதி உள்பட உயர்ஜாதி பார்ப்பனர்கள் – மற்ற ஒருவர் பார்ப்பனரல்லாத நீதிபதி.

தற்போதுள்ள நீதிபதிகளில் (சென்னை, மதுரை உயர்நீதிமன்றப் பிரிவுகள்) உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் (இருபாலரும்) 12 பேர் உள்ளனர். மக்கள் தொகையில் அவர்கள் விகிதாச்சாரம் 3 அல்லது 4 சதவிகிதமாக உள்ளது. ஆனால்,உயர்நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் 18% உள்ளது.

90 விழுக்காடுள்ளவர்களுக்கு நீதிபதி நியமனங்களில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை!
மற்றுமுள்ள 90 சதவிகித மக்களான எஸ்.சி.,
எஸ்.டி., எம்.பி.சி., ஓ.பி.சி., மைனாரிட்டி சமூகங்களைச் சார்ந்த வழக்குரைஞர்களில் திறமையும், அனுபவமும் உள்ளோர் பலர் இருந்தும், அவர்களுக்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது!
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புதிய நியமனப் பரிந்துரைகளில் மேலும் நான்கு பார்ப்பனர்களையே நீதிபதிகளாக்கப் பரிந்துரைக்கப்பட உள்ளது என்பன போன்ற செய்திகள் நீதித்துறை வட்டாரங்களிலிருந்து வந்துகொண்டுள்ளன.
ஏற்கெனவே அதிகமான எண்ணிக்கை உள்ள பார்ப்பன சமூகத்திலிருந்து (12 பேர்), மேலும் 4 நீதிபதிகள்!? அதில் கூட ஒரு புதிய தந்திர முறையாக ஒரே பட்டியலாக அனைவர் பெயரையும் அனுப்பாமல், முதலில் இரண்டு, அடுத்த பட்டியலில் இரண்டு என்று இரண்டாகப் பிரித்து அனுப்பவும் ஏற்பாடு நடைபெறுகிறது என்றும் பேசப்படுகிறது!
இது நியாயம்தானா?

மற்றொரு தந்திரம், உயர்நீதிமன்ற கொலிஜி யத்தில் சில வாரங்களுக்கு முன் பரிந்துரை செய்யப்பட்டிருந்தால், கொலிஜியத்தின் தலைமை ஒரு பிற்படுத்தப்பட்டவருக்குக் கிடைத்திருக்கும். அவர் பரிந்துரை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான், அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுச் சென்றாரோ என்று கூட அய்யப்பட வேண்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்பற்றி முன்பே பல வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, சமூகநீதி பாதுகாக்கப்படவேண்டும் என்று தீர்ப்பும் உள்ளது.

சமூகநீதியைக் கடைப்பிடிப்பதுபற்றி
உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
R.G. High Court of Madras Vs R.Gandhi and Others (5, மார்ச் 2014) வழக்கில், மூன்று நீதிபதிகள் கொண்ட தீர்ப்பு வந்துள்ளது என்பது ஒருபுறம்.
அண்மைக் காலத்தில், உச்சநீதிமன்ற நியமனப் பரிந்துரைகளில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூகநீதி பின்பற்றப்படவேண்டும் என்பதை உச்சநீதிமன்றக் கொலிஜியமே நியமனப் பரிந்துரைகளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதால், அதற்கேற்ப உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை அமைய வேண்டாமா?
‘புளியேப்பக்காரர்களுக்கே விருந்து, பசியேப்பக்கா ரர்களுக்குப் பட்டை நாமம்’ என்பதுபோல பரிந்துரை களோ, நியமனங்களோ அமையக்கூடாது.
ஜனநாயகக் குடியரசில் நீதித் துறையின் பங்களிப்பு மிகமிக முக்கியம். நாம் அதனை வலியுறுத்தி, இதுவரை போதிய வாய்ப்பு (Adequate Representation) வழங்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டாமா?
ஏற்கெனவே மிக அதிகமான உயர்ஜாதிப் பிரதி நிதிகள் – ஆதிக்கம் செலுத்தும் நிலையில், புதிய நிய மனங்களும் அப்படி அமைவது நியாயமல்ல.

வரும் 9 ஆம் தேதி சென்னையிலும்– மதுரையிலும் அறவழி ஆர்ப்பாட்டம்!
‘‘உயர்நீதிமன்றங்கள் – ‘உயர்ஜாதி நீதிமன்றங்களா’?’’ என்று மக்களும் சமூகநீதி ஆர்வலர்களும் கேட்கும் நிலையைத் தவிர்க்கவேண்டும் என்பதை விளக்க வும், உயர்நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவும் ஒரு சமூகநீதி ஆர்ப்பாட்டத்தை, வருகின்ற 9.1.2025 சென்னையிலும், மதுரையிலும் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து அறவழியில் கவன ஈர்ப்பாக நடத்தவிருக்கிறோம்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல இந்தப் போராட்டம்!
உரிய சமூகநீதி கிடைக்கவே கோரிக்கைப் போராட்டமாக இந்த சட்ட உரிமைப் போராட்டம் நடைபெறும்.
அனைத்து சமூகநீதி ஆர்வலர்களும், விழைவோரும் திரளவேண்டும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
6.1.2025 

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

உமா மகேஸ்வரனார் பெயரன் த.கு. திவாகரனாரின் பவழ விழா கவியரங்கம் (கன்னிமேரா நூலகம்)

சென்னை எழும்பூர் கன்னிமேரா நூலக அரங்கில் 21.12.2024 முற்பகல் 9.30 மணி அளவில் "கலசலிங்கம்- ஆனந்த சேவா சங்கம்" ஏற்பாட்டில் 'அமிழ்த தமிழ் ஆய்வரங்கம்' நடைபெற்றது. 
 அந்நிகழ்ச்சியில் கரந்தை தமிழ் சங்கம், உமா மகேஸ்வரனார் பெயரனான த.கு.திவாகரன் அவர்களின் "75 ஆம் ஆண்டு பவழ விழா பிறந்தநாள் வாழ்த்து அரங்கம்" மற்றும் பாராட்டு கவியரங்கம் நடைபெற்றது.