வியாழன், 20 மார்ச், 2025

போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்


விடுதலை நாளேடு
தமிழ்நாடு

பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் 23.2.2025 அன்று பொள்ளாச்சி ரயில் நிலைய பல கையில் இருந்த ஹிந்தி எழுத்தை தி.மு.க. வினர் தார்பூசி அழித்தனர்.

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த ஒன்றிய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இருமொழிக் கொள்கையே தமிழ் நாட்டில் கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

திணிப்பு

இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதில் ஒன்றிய அரசு முழுமையாக ஈடுபட்டு வரு வதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கூட்டணி கட்சித் தலை வர்கள் பங்கேற்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் முழுவதும் வீடுகளுக்கு முன் ஹிந்தி எதிர்ப்பு வாசகம் மற்றும் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கோலமிட்டு பெண்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த விவகாரம் பேருரு எடுத்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் ஹிந்தி எழுத்தை தி.மு.க.வினர் தார்பூசி அழித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி மாறன் தென்றல், மேனாள் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தனம் தங்கதுரை, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அவினாஷ் கார்த்திக், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பைக் பாபு, ஸ்ரீரங்கன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகவும், மும் மொழிக் கொள்கைக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

வெள்ளி, 7 மார்ச், 2025

ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்

விடுதலை நாளேடு

இந்தியா

புதுடில்லி, மார்ச் 7 தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹிந்தியை விட நடைமுறை பயன்கள் அதிகம் உள்ள ஆங்கிலம், இந்தியாவின் இணைப்பு மொழியாக நீடிக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த குளோபல் டேட்டா லேப் (Global Data Lab) என்னும் நிறுவனம், மொழிகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஹிந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்க அதிக விருப்பம் உள்ளவர்களாக இருப்பதாகவும், அதே நேரத்தில் ஹிந்தி பேசுபவர்கள் கூடுதல் மொழியை கற்பதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991-இல் தமிழ்நாட்டில் 14.5 சதவீத மக்கள் தமிழுடன் கூடுதலாக ஒரு மொழியை பேசுபவர்களாக இருந்தனர் என்றும், இது 2011-ல் 22 சதவீதமாக அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல ஒடிசாவில், ஒடியா மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் 86 சதவீதத்தில் இருந்து 74.5 சதவீதமாக குறைந்தது என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.