திங்கள், 24 பிப்ரவரி, 2025

புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!

 புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!!

ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை!
திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!

இந்தியா

புதுடில்லி, பிப்.7 பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 2024 & 2025 ஆண்டு வரைவு அறிக்கைகளை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என புதுடில்லியில் திமுக மாணவரணியினர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாணவர் அமைப்புகளும், இந்தியா கூட்டணித் தலைவர்களும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
மாநில சுயாட்சிக்கு எதிராக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கும் வகையிலும், கல்வியாளர்கள் அல்லாதோரையும் நியமிக்கும் வகையிலும் பல்கலைக்கழக மானியக்குழு வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஒன்றிய அரசின் கல்வி அமைச்சருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியிருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தும் வண்ணம் 6.2.2025 அன்று காலை 10 மணியளவில் புதுடில்லி யில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தி.மு.க. மாண வரணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு திமுக மாணவரணியின் மாநிலச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையேற்றார். திராவிட மாணவர் கழகம் (DSF), இந்திய மாணவர் சங்கம் (SFI), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), திராவிட மாணவர் கூட்டமைப்பு (SFD), சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI), இந்திய தேசியக் காங்கிரசின் மாணவர் அமைப்பு (NSUI), முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) போன்ற தமிழ்நாட்டில் உள்ள மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ராகுல்காந்தி கண்டன உரை!
ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு,
” “இந்திய நாட்டின் வரலாற்றை அழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.-இன் இலக்கு. அனைத்து மாநிலங்களின் மொழிகளும் இணைந்துதான் இந்தியா என்ற நாடு உருவாகிறது. 3000-4000 ஆண்டு வரலாற்றை கொண்டுள்ளனர் தமிழ் மக்கள். மாநிலத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நோக்கம்.
அரசமைப்பை சிதைக்க முயற்சிக்கிறது மோடி அரசு. கல்வி நிலையங்களை ஆர்எஸ்எஸ் மயமாக மாற்ற ஒன்றிய அரசு முயற்சி மேற்கொள்கிறது. ஒரே நாடு, ஒரே மொழியை கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. பல மொழிகள் ஒன்றிணைந்ததுதான் நம் இந்திய தேசம்.. அனைத்து மாநிலங்களின் மொழி, கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்,”” என்று எடுத்துரைத்தார்.
புதுடில்லிக்கு வந்து போராடுவதற்கு முன்வந்த திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியைப் பாராட்டிய ராகுல், தமிழ்நாட்டைப் பின்பற்றி பிற மாநிலங்களிலிருந்தும், டில்லியை நோக்கி மாண வர்கள் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், “இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்காக மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆனது. மாநில உரிமைகளை பறிப்பதில் ஒன்றிய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் திமுக உடன் சமாஜ்வாதி கட்சி ஆதரவாக இருக்கும்” என்று வலியுறுத்தினார்.

கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
முன்னதாக இந்நிகழ்வில் சி.பி.எம். ஜான்பிரிட்டோ, சி.பி.அய். செல்வராஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் மனோஜ்குமார் ஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கேரள சோசலிஸ்ட் பார்ட்டி பிரேமச்சந்திரன், திமுக மாநிலங்களவைத் தலை வர் திருச்சி சிவா, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற திமுக தலைவர் கனிமொழி கருணாநிதி, திமுக பொருளாளரும், மக்களவை திமுக தலைவருமான டி.ஆர்.பாலு, எம்.எம்.அப்துல்லா, ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, முரசொலி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மலையரசன், தங்க தமிழ்ச்செல்வன், கே.இ.பிரகாஷ், டாக்டர் ராணி ஆகியோரும் மதிமுக துரை வைகோ, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திராவிட மாணவர் கழகம்
திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாணவர் கழகச் செயலாளர் செந்தூர்பாண்டியன், முகமது அப்ரிடி ஆகியோர் கலந்துகொண்டனர். திராவிட மாணவர் கூட்டமைப்பு-டில்லியின் சார்பில் இளையகுமார், விமல், அமீர், ரஞ்சித் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்நாசர், கோவை ரிது, சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் கோவை அம்ஜத் உள்ளிட்ட தோழர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆய்ஷே, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தேசியப் பொதுச் செயலாளர் தினேஷ் உள்ளிட்ட ஏராளமான முதன்மைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவரின் வழிகாட்டுதல்!
திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கையின் நகல்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மேடையிலும் கூட்டத்திலும் விநியோகம் செய்யப்பட்டன. அதில் யுஜிசி மாநில அதிகாரத்தில் தலையிடுவது பற்றியும், தமிழ்நாடு முதலமைச்சர் மிகச்சரியான நடவடிக்கை எடுத்துள்ளதையும், எப்போதும் போல தமிழ்நாடு இதிலும் வழிகாட்டியாக இருப்பதையும் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.