பக்திப் பைத்தியம் காரணமாக உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சி(?) ஒன்றில் பங்கேற்றவர்களில்
121 பேர் பரிதாபச் சாவு Sஉ.பி. சாமியார் முதலமைச்சர் பொறுப்பு ஏற்பாரா? Sகள்ளக்குறிச்சி சாராய சாவுக்கு சி.பி.அய். விசாரணை கேட்டவர்களெல்லாம் இப்பொழுது எங்கே போனார்கள்?
கடவுள் நம்பிக்கை, பக்தி என்பதெல்லாம் வெறும் புரட்டு என்பதை உணர்ந்திடுக!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மரணமடைந்தனர் என்ற துயரச் செய்தி கேட்டு வருந்துகிறோம். ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், மக்களின் இந்த உயிரிழப்புக்கு உ.பி. சாமியார் முதலமைச்சர் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும், அறிவியல் மனப்பான்மைப் பரப்புவது அடிப்படைக் கடமை என்கிற இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுவது – வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா? என்றும், கடவுள் சக்தி, பக்தி என்பதெல்லாம் மக்களைப் பீடித்த கேடு என்பதை இதுபோன்ற குரூரமான நிகழ்வுகளின்மூலம் அறியவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் நெரிசல் உத்தர பிரதேசத்தில் 116 பேர் உயிரிழப்பு
‘‘ஹத்ராஸ், ஜூலை 3: உத்தர பிரதேசத்தில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட, 116 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் திறந்தவெளியில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று நடந்தது.

கடும் வெப்பத்துக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மூச்சுத்திணறல்
போலே பாபா பேசி முடித்ததும், கூட்டத்தில் பங்கேற்ற வர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர்.இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், கடும் வெப்பம் நிலவிய நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக, பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, 116 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், பெண்கள் மற்றும் குழந்தைகள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காய மடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படு கிறது.
இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, ஆக்ரா ஏ.டி.ஜி., மற்றும் அலிகார் கமிஷனர் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். மேலும், காய மடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தின ருக்கு, உ.பி., அரசு சார்பில், தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மத்திய அரசு சார்பிலும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என, உ.பி., போலீசார் தெரிவித்தனர். விபத்து நடந்த இடம், அலிகாரிலிருந்து, 40 கி.மீ., தொலை விலும், லக்னோவிலிருந்து, 330 கி.மீ., துாரத்திலும் உள்ளது.
வண்டி வண்டியாக…
ஆன்மிக சொற்பொழிவில் பங்கேற்று கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களை, அவர்களின் உறவினர்கள் லாரி, ஆம்புலன்ஸ், கார் என கிடைத்த வாகனங்களில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைகளுக்கு வந்தனர். ஐந்து ஆறு உடல்கள் கிடத்தப்பட்ட லாரியின் முன் அமர்ந்து பெண் ஒருவர் தன் மகளை மீட்டுத் தரும் படி கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்கியது. இறந்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். குழந்தைகளும் அதிக அளவில் இறந்துள்ளனர்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இடம் இல்லாததால், காயமடைந்த பலருக்கு மருத்துவமனை வாசலில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களை சுற்றி அவர்களின் உறவினர்கள் கவலையுடன் அமர்ந்திருந்தனர். மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே இருந்தார். ‘உயிர் காக்கும் ஆக்சிஜன் வசதியும் மருத்துவமனையில் இல்லை’ எனக் கூறி இளைஞர் ஒருவர், மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினார்.
யார் இந்த போலே பாபா?
போலே பாபா என்றழைக்கப்படும் நாராயண் ஹரி, உ.பி.,யின் எட்டா மாவட்டத்தின் பகதுார் நகரி கிராமத்தில் பிறந்தார். கல்லுாரி படிப்புக்குப் பின், உ.பி., காவல் துறையின் உளவுப்பிரிவில் பணியாற்றிய அவர், ஆன்மிக ஈடுபாடு காரணமாக, 2006 இல், விருப்ப ஓய்வு பெற்றார்.
உ.பி.,யின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிகத்தை பரப்பிய அவர், தன் சொந்த கிராமத்தில் ஆசிரமத்தை கட்டினார்.
உ.பி.,யின் மேற்கு பகுதியில் மிகவும் பிரபலமான போலே பாபாவின் பேச்சைக் கேட்க, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
வெள்ளை நிற குர்தா, பேன்ட் அணியும் அவர், தன் மனைவியுடன் அமர்ந்து, சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.”
மேலே காணும் செய்தி – ஸநாதனம், ஆன்மிகம் என்பதை மேலே தூக்கிப் பிடித்து, மனுதர்ம ஆட்சி வராதா என்று ஏங்கும் பார்ப்பன நாளேடான ‘தினமலர்‘ 3.7.2024 சென்னை பதிப்பில் முன்பக்கத்தில் வெளிவந்துள்ள செய்தியை அப்படியே தந்துள்ளோம்.
(உண்மை என்னவென்றால், காவல்துறையில் இவர் பணியாற்றிய நேரத்தில் நடந்த முறைகேடுகள் காரணமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்தான் இந்த நாராயண் ஹரி)
யார் இந்த சாமியார்?
உத்தரப்பிரதேசம் என்ற அந்த மாநிலத்தில் ஒரு காவி சாமியார் ஆட்சிதான்! (அவர் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை, ஆணைப்படி பதவியேற்று கடந்த சில ஆண்டுகாலமாய் ஆட்சி நடத்தி வருபவர்!)
அங்கே உளவுத் துறையில் அதிகாரியாக வேலை பார்த்த ஒருவர், திடீரென்று விருப்ப ஓய்வு பெற்று டிப் டாப் வெள்ளை உடை (கோட் சூட்) அணிந்து நாராயண் ஹரி போலே பாபாவாகி விட்டார்!
அவர் இந்த நிகழ்விற்குப் பிறகு தலைமறைவாகிவிட்டார்!
பெருங்கூட்டம் கூடியபோது, அவர்கள் திரும்பும்போது இந்தக் கோரம் – பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
(மருத்துவமனைகளில் போதிய மருந்து, மருத்துவர்கள் இல்லை என்று ஒரு சிறு போராட்டமே நடத்தப்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக உயிர்ப் பலி – மரணங்கள் கூடுதலாகும் நிலையும் உள்ளது என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன!)
மருத்துவமனையில் இடம் போதாமையால் பிணங்கள் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
உ.பி. முதலமைச்சர் பொறுப்பேற்கவேண்டும்!
இதற்கெல்லாம் உத்தரப்பிரதேச முதலமைச்சர்தானே முழுப் பொறுப்பேற்கவேண்டும்!
மரணமடைந்துள்ள உ.பி மக்கள் பக்தி போதையில் அங்கு சென்று உயிரை இழந்த பரிதாபத்திற்குள்ளாயினர் என்றாலும், அவர்கள் நம் சக மனிதர்கள். எனவே, நம்முடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால், அதேநேரத்தில், இதற்காக அந்த மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வரவேண்டும் என்று இங்குள்ள பா.ஜ.க.வோ, அதன் கூட்டணி சுற்றுக் கிரகங்களின் கட்சித் தலைவர்களோ கேட்பார்களா?
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சாவு, துன்ப துயரத்தைத் தேர்தல் தோல்வி வெள்ளத்தில் அடித்துச் செல்லும் தம்முடைய கட்சிகளுக்கு ஒரு சிறு கட்டைத் தெப்பமாக்கிக் கொள்ள இப்படி கூச்சல் கிளப்புவோர் பதிலளிக்க முன்வருவார்களா?
அதுமட்டுமா?
கள்ளக்குறிச்சிக்கு ஒரு நீதி – உ.பி.க்கு வேறு ஒரு நீதியா?
இது நெரிசல் மூலம் சாவு என்றாலும், விஷச்சாராய சாவு என்றாலும், சாவு சாவுதான். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இவை போன்ற பல நிகழ்வுகளின்போது எல்லாம் சி.பி.அய். விசாரணைகள்தான் நடந்தனவா?
கள்ளக்குறிச்சி விஷச் சாராய நிகழ்வு ஏற்பட்டவுடன் நமது முதலமைச்சர், அவரது தலைமையில் உள்ள அரசின் மின்னல் வேக செயற்பாடுகளுடன் – ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் உள்பட, சில நொடிகள்கூட தாமதிக்காமல் செய்துள்ளார்களே!
இந்த மாதிரி நிகழ்வுகள் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடந்தபொழுது, அம்மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப்
பாருங்கள்!
அங்கு சி.பி.அய். விசாரணை வேண்டும் என்று அலகா பாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தால் அதை பா.ஜ.க. அண்ணாமலைகள் ஆமோதிப்பார்களா?
தி.மு.க. ஆட்சிமீது சேற்றை வாரி இறைக்க முயலும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்களும் இதுபற்றி உ.பி. அரசின் சட்டம் – ஒழுங்கு நிலைபற்றி அதே குரலில் பேசுமா? கண்டிக்குமா?
ஏன் இந்த இரட்டை அளவுகோல்?
அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மையைப் பரப்பும் அடிப்படைக் கடமை என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?
அரசமைப்புச் சட்டத்தின் அறிவியல் மனப்பான்மை பரப்பும் அடிப்படைக் கடமை என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா? நீர்மேல் எழுத்தா?
மக்கள் அறியாமைக்கு உ.பி.யில் 120–க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளது வேதனையும், வெட்கமும் அல்லவா?
கடவுள் நம்பிக்கை, பக்தி என்பதெல்லாம் கேடே தவிர, நன்மை பயக்காது என்பதை உணர்வார்களா?
சென்னை
3.7.2024
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்