விடுதலை நாளேடு
Published May 6, 2024

♦ ஹிந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு – பழைய ஹிந்து லாவை உயிர்ப்பிக்கின்ற தீர்ப்புப் போல உள்ளது!
♦ கன்னிகாதானம் – தாராமுகூர்த்தம், பாணிக்கிரஹணம் என்பதெல்லாம்
பெண்ணை ஒரு திடப்பொருளாகக் கருதுவது ஆகாதா?
தமிழ்நாடு அரசின் சட்டப் பிரிவுகள் 7-ஏ சட்டத் திருத்தப்படிசுயமரியாதைத் திருமணம் உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட நிலையில், இது ஏற்கத்தக்கதல்ல!
இதன்மீது மறுசீராய்வு மனு போடுதல் அவசியம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
ஹிந்து திருமணச் சடங்குகள் இல்லாமல் நடக்கும் திருமணங்கள் செல்லாது என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பழைய ‘ஹிந்துலா’வை உயிர்ப்பிக்கும் தீர்ப்புப்போல் உள்ளது. கன்னிகாதானம், தாராமுகூர்த்தங்களை இப்போது ஏற்றால், பெண்ணை ஒரு திடப் பொருளாகக் கருதுவதுதானே! தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு அளித்த நிலையில், இந்தத் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல! இதன்மீது மறுசீராய்வு மனு போடுதல் அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:-
சில வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் ஹிந்து திருமணம் செய்துகொண்ட சடங்குகள் இல்லாத திரு மணங்களை அங்கீகரிக்க முடியாது என்று விசாரணைக்கு வந்த வழக்கொன்றில் இரு நீதிபதிகள் – நீதிபதி பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி – ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள ஒரு தீர்ப்பு அதிர்ச்சிக் குரியதாக உள்ளது என்பதோடு, நமது அரசமைப்புச் சட்டத்தின் பல பகுதிகளில் அளித்துள்ள மானுட உரிமைகளுக்கும், மனிதநேயத்திற்கும் முரணாகவும் அமைந்துள்ளது என்பதை, எந்தவித உள்நோக்கமும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின்றி சுட்டிக்காட்ட வேண் டியது – 80 ஆண்டுகால பொதுவாழ்க்கையை உடைய ஒரு எளிய சமூக சேவைக்காரனின் – இன்றியமையாக் கடமையாகும்!
சடங்குகள் இல்லாமல் நடத்தப்படுவது
திருமணம் இல்லையா?
‘‘திருமணமான ஓர் ஆணும் – பெண்ணும், கணவன் – மனைவி என்ற அந்தஸ்தைப் பெற்று, எதிர்காலத்தில் குடும்பக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான உறவுக்கு அடித்தளமிடும் – ‘புனித’மான நாள் முழுவதும் கண்ணிய மான சமமான, ஆரோக்கியமான உறவில் நுழையும் நிகழ்ச்சி.
ஆனால், இந்த மனுதாரர்களைப்போல், இளைய தலைமுறையின் – ஹிந்து திருமணச் சட்டப்படி எவ்விதமான முறையான சடங்குகளும் இல்லாமல், ‘கணவன் – மனைவி’ அந்தஸ்தை நாங்கள் நிராகரிக் கிறோம். ஹிந்து திருமணத்தில் மணமகனும், மணமகளும் அக்னி முன்பு 7 அடிகள் சேர்ந்து நடந்து வரவேண்டும். ‘ரிக்’ வேதப்படி இதை சப்தபதிகள் என்று கூறுகிறார்கள்.”
‘‘நாம் நண்பர்களாகி விட்டோம்; இந்த நட்பிலிருந்து பிரியமாட்டேன்” என்று மணமகளிடம் மணமகன் கூறுவான்.
இந்த சடங்கு இல்லாமல் நடத்தப்படும் திருமணத்தை ஹிந்து திருமணமாகக் கருத முடியாது.
‘ரிக்’ வேதத்தில்
‘ஹிந்து’ என்ற சொல் உண்டா?
ஹிந்து திருமண சட்டப்படி திருமணம் என்பது புனித மானது; புதிய குடும்பத்திற்கான அடித்தளம்; எனவே, இத்தகைய சடங்குகள் இல்லாது நடத்தப்படும் திரு மணத்தை ஹிந்து திருமணமாக (ஹிந்துத் திருமணத்தின் 7 ஆவது பிரிவின்படி) கருதப்பட முடியாது.
திருமண சடங்குகள் இல்லாமல் வெறும் திருமண சான்றிதழ் பெற்றாலும், அது திருமண அந்தஸ்தை உறுதி செய்யாது.
திருமண சர்ச்சைகளின்போது, அச்சான்றிதழ் ஓர் ஆதாரமாகக் கருதப்படலாம்; ஆனால், சடங்கு இல்லாமல் நடத்தப்பட்ட திருமணத்திற்கு அச்சான்றிதழ் சட்ட அந்தஸ்து அளிக்காது.
ஹிந்து திருமண சட்டப்படி அதைத் திருமணமாகக் கருத முடியாது.”
– மேற்கண்ட தீர்ப்பில் பழைய ஹிந்து மத திரு மணங்கள் சம்பந்தப்பட்ட ‘ரிக்’ வேதத்தை மாண்புமிகு நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டுகிறதே, அதன்படியே சில நியாயமான கேள்விகளை முன்வைத்துத் தெளிவு பெறுவது நம் கடமையாகிறது!
1. ரிக்’ வேதத்தில் எங்காவது ‘ஹிந்து’ என்ற சொல் உண்டா?
2. ரிக் வேதத்தின் புருஷ சுத்தத்தில் ஜாதிமுறைப்படி உள்ளதில் பெண்களை ‘கீழுக்கும் கீழான’ ‘நமோ சூத்திரர்கள்’ என்றுதானே வகைப்படுத்தியுள்ளனர்.
ஆணும், பெண்ணும் சமம் என்ற கருத்துக்கே இடமில்லையே!
சூத்திரர்கள் எப்படி வேதம் கற்க உரிமையற்ற வர்களோ, அதுபோல, பெண்களும் – ‘நமோ சூத்திரர் களான’படியால், வேதம் கற்க – உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும்கூட, அவர்களுக்கும் உரிமையில்லையே!
இன்று அப்பிரிவிலிருந்து பெரும் படிப்பு, பெரும் நிலையில் உள்ள பெண்கள்கூட – வேத மதத்தின் இந்த விதிக்குப் புறம்பாகத்தானே படித்து உயர்ந்துள்ளார்கள்.
அப்படிப்பட்ட நிலையில், இந்த சடங்குகளின் தாத்பரியப்படி இன்று ‘சப்தபதி’ – ஏழு அடிகள் எடுத்து வைப்பது எப்படி நடைமுறைக்கு வந்தது என்பதற்கு டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ள விளக்கப்படி எழுதினால், அதை வேத சாஸ்திரங்களாக ஏற்க இன்றைய நிலையில் முடியுமா?
மனுஸ்மிருதிப்படி திருமணம் என்பது உயர்ஜாதியினருக்கு மட்டும்தானா?
மனுஸ்மிருதிப்படி திருமண முறை உயர்ஜாதி யினருக்கு மட்டுமே உள்ள உரிமை. அனைவருக்கும் சம உரிமை என்பதே அதில் இல்லாதபோது – ‘சம உரிமை’ இரண்டு பேருக்கும் மணமகன் – மணமகளுக்கு சப்தபதி மூலம் ஏற்படும் என்பதே – வேதப்படி இல்லாத ஒன்று; கருத்து முரண் ஆகும்!
எட்டு வகை திருமணங்கள் என்று பிரிவுகளை மனுஸ்மிருதி கூறுகிறதே, அவற்றில் ‘சப்தபதி’ உண்டா?
பழைய ஹிந்து சட்டப்படி, ஹிந்து திருமணம் ஒரு புனிதக் கட்டு (Sacrament) – விலக முடியாத ஒரு புனிதக் கட்டு.
ஹிந்து திருமணச் சட்டப்படி
மணவிலக்குப் பெற சட்டத்தில் இடமுண்டா?
இப்போது ஹிந்து திருமணச் சட்டப்படி திருமணங்கள் செய்துகொள்ளும் மணமக்களுக்கும் ‘‘மணவிலக்கு” (Divorce) பெற சட்டம் அனுமதிக்கும் முறை, முன்பு கிடையாதே!
3. இப்போது புரோகித சடங்குகள் நடத்தப் பெறும் ‘‘விவாஹங்கள்” எப்படி தலைப்பிடப்படுகின்றன?
அதில் சமத்துவமோ, சம உரிமையோ உண்டா?
(மாண்பமை நீதிபதிகள் கவனத்திற்கு)
‘‘கன்னிஹாதானம்”
‘‘தாரா முகூர்த்தம்”
‘‘பாணிக்கிரஹணம்”
இவற்றில் பெண்களை – மணமகளை – ஒரு திடப் பொருளாகக் (Chattel) கருதி, தானமாக – தருமமாகத் தருவது என்றால், சம உரிமை எங்கே?
மணமகன் எஜமான்,
மணமகள் அடிமைதானே!
அது தாரைவார்த்தல் என்ற கைநழுவலில் போய்விடுவது.”
பழைய ‘ஹிந்துலா’வை உயிர்ப்பிக்கும்
தீர்ப்புப்போல் உள்ளது
இவற்றையெல்லாம் தாண்டி, வாழ்க்கையில் ஈடுபடு வோர் திருமணம் என்ற சடங்கில் ஈடுபடாது – ‘Living together’ என்று வாழுவது உள்பட, உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைப்படி உள்ள சமத்துவம், அடிப்படை கடமைகள் – 51-ஏ(எச்)) பிரிவுப்படி – அறிவியல் மனப்பான்மை, கேள்வி கேட்பது, சீர்திருத்தம் செய்தல் என்பதற்கும் முற்றிலும் எதிரானது அல்லவா!
பழைய ‘ஹிந்து லாவை’ உயிர்ப்பிக்கின்ற தீர்ப்புபோல உள்ளது என்பதாலும், தமிழ்நாடு அரசின் சட்டப் பிரிவுகள் 7-ஏ சட்டத் திருத்தப்படி, சுயமரியாதைத் திருமணம் உச்சநீதிமன்றத்தாலும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ள நிலையில், இது ஏற்கத்தக்கதல்ல!
இதன்மீது மறுசீராய்வு மனு போடுதல் அவசியம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
திராவிடர் கழகம்
6-5-2024